என் மலர்
வேலூர்
- கலெக்டர் தகவல்
- மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்
வேலூர்:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு மைதானத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.
கலெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வன பாதுகாப்பு அலுவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவிவன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை அவர்கள் நட்டு வைத்தனர்.
இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு வனத்துறையும் இணைந்து சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் மற்றும் பாலாற்று கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
இதேபோல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக இலக்கை எட்ட முடியவில்லை.
இந்தாண்டும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடப்படுகிறது வேலூரை வெயிலூர் என்று அழைக்கின்றனர்.
இந்த நிலை மாற வேண்டும்.சூரிய ஒளி நேரடியாக நிலத்தில் படுவதால் தான் அதிக தாக்கம் உள்ளது எனவே மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்.
ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் தெற்கு செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். வேலூர் வடக்கு செயலாளர் பாண்டுரங்கன், காட்பாடி செயலாளர் சுடரொளியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் சங்கரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தயாநிதி கலந்து கொண்டு பேசினார். இதில் அணைக்கட்டு அடுத்த அத்திமரத்துக்கொல்லை மலை கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்.
மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பகுதிநேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது
- வாகன ஓட்டிகள் எளிதில் சென்று வருகின்றனர்
வேலூர்:
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலை தடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் பஸ்கள் கலெக்டர் அலுவலகம்- கிரீன்சர்க்கிள் இடைப்பட்ட பகுதியில் சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கிரீன்சர்க்கிள் அகலம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் வரும் வாகனங்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வகையில் கிரீன் சர்க்கிள் ஒரு பகுதி உடைக்கப்பட்டு அதில் சாலை உருவாக்கப்பட்டது. அதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் அந்தப் பாதையில் தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்தனர். கிரீன் சர்கிளை உடைத்து போடப்பட்ட சாலை மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
அந்த சாலை மாட்டு தொழுவமாக மாறியது. ஏராளமான மாடுகள் அதில் படுத்து கிடந்தன.
நேற்று முதல் மீண்டும் மூடப்பட்ட சாலை திறக்கப்பட்டது. இதனால் தோட்டப்பாளையம் பகுதியில் இருந்து வாகன ஓட்டிகள் எளிதில் சென்று வருகின்றனர். அந்த பகுதியில் நெரிசல் குறைந்துள்ளது.
- மது போதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் ஏஜி நகரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி சிவகாமி (வயது 60).
இவரது மகன்கள் கோபி (38), முரளி (37). விநாயகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கோபி கார்பென்டராக வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான கோபி அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு வந்து ஆபாசமாக பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தம்பி முரளி தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, தம்பி முரளியை தாக்கினார்.
இதனை கண்ட அவரது தாய் சிவகாமி தடுக்க முயன்றார். அப்போது கோபி தனது தாயை தலையில் பலமாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது.
உறவினர்கள் சிவகாமியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசி வழக்கு பதிவு செய்து கோபியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
- 10-க்கும் மேற்பட்ட போலீசார் வெள்ளைக்கல் மலையில் வேட்டை நடத்தினர்
- வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட போலீசார் நேற்று வெள்ளைக்கல் மலையில் சாராய வேட்டை நடத்தினார். போலீசாரை கண்டம் தப்பி ஓட முயன்றவரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சியதும் தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். இதனை அடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ரூ.10 கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்
- ஒரு கிலோ பீன்ஸ், கத்தரிக்காய் ரூ.100-க்கு விற்பனை
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க் கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக பீன்ஸ், முருங்கை, கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60 முதல் 70-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ், முருங்கை, கத்தரிக்காய் தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைத்தவிர மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட சிறிதளவு அதிகரித்துள்ளன. ஒரு கிலோ இஞ்சி ரூ.200-க்கும், பூண்டு ரூ.140 முதல் ரூ.180 வரைக்கும், அவரைக் காய் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.80-க்கும், தக்காளி ரூ.30-க்கும், உருளைகிழங்கு ரூ.30-க்கும், கேரட் ரூ.70-க்கும், வெண்டைக்காய், பீட்ரூட் ரூ.40-க்கும், வெள்ளரிக்காய் ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந் துள்ளது. எனவே காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சில்லரை காய்கறி மற்றும் மளிகை கடைகளில் இவற்றை விட ரூ.10 கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்
- 35 பாட்டில்கள் பறிமுதல்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் வீட்டிலேயே சிலர் மதுபாட்டில்கள் விற்பதாக வந்த புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின்பேரில் நேற்று குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் குடியாத்தத்தை அடுத்த கள்ளூ குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த கனகா (வயது 52) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விசாரணைக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்
- இடைக் கால நடவடிக்கையாக வேறு பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 7 பெண் ஆசிரியைகள் பணியாற்றும் நிலையில், தலைமை ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியைகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத னால், பள்ளியில் மாணவர்களின் கற்றல் பணி பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு இருந்தது.
இந்த பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியை களும் ஒன்றிணைந்து, கடந்த மார்ச் மாதம் மாவட்ட தொடக் கக் கல்வி அதிகாரி தயாளனிடம். தலைமைஆசிரியர் மீது பாலியல் புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-தலைமை ஆசிரியர் கண்காணிப்பு என்ற பெயரில் ஆசிரியைகளிடம் அத்துமீறி செயல்படுவது, விதி களுக்கு முரணாக தன்னிச்சை யாக செயல்படுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆசிரியைகள் தரப்பில் அளித்த பாலியல் புகார் மனு மீது, உள்ளூர்புகார்குழுவினர் விசாரணைக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து, உள்ளூர் புகார் குழுவினர் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கடந்த மாதம் சமர்பித்தனர்.
தொடர்ந்து, பாலியல் புகாருக்கு உள்ளான தலைமைஆசிரியர் மீது இடைக் கால நடவடிக்கையாக வேறு பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி தயாளனிடம் கேட்டபோது,
"மேற்குறிப்பிட்ட பள்ளி யின் தலைமைஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்த உள்ளூர் புகார் குழுவின் விசாரணை அடிப்படையிலும், சம்பந்தப் பட்ட பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணிகள் எந்தவித இடையூறும் இன்றி செயல்படு வதை உறுதிசெய்யும் வகை யிலும், புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியருக்கு, குருமலை பஞ். யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கி உத்தர விடப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் புகார் குறித்த விசாரணை முடிவின் அடிப்படையில், சம்பந்தப் பட்ட தலைமைஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை
- தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றினார்கள்
குடியாத்தம்:
குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படுவதே இல்லை.
இது குறித்து நகராட்சி சுகாதார பிரிவில் தகவல் தெரிவித்தாலும் குப்பைகளை உடனடியாக அகற்றுவது இல்லை என கூறப்படுகிறது.
தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், சி.என்.பாபு, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திடீரென குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது பல இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்ப டாமல் தேங்கியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து நகராட்சி துப்புரவுபிரிவு அதிகாரிகளை அப்பகுதிக்கு அழைத்த நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் எனக்கூறி அங்கேயே நின்று கொண்டார்.
இதனை தொடர்ந்து உடனடியாக தூய்மை பணியாளர்கள் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்றினார்கள்.
அப்போது அவர்களிடம் பேசிய நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன் குப்பைகளை தினம்தோறும் அகற்றவேண்டும் பல இடங்களில் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதே நிலை நீடித்தால் துப்புரவு பிரிவில் உள்ள மேற்பார்வை யாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வேகத்தில் தயாராகி வருகிறது.
- அமித் ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வேகத்தில் தயாராகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை)நடைபெறுகிறது.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதுகுறித்து பா.ஜ.க. மேலிடத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு அவசர தகவல் நேற்று பகிரப்பட்டது.
அமித் ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கார்த்தி காயினி துணைத்தலைவர் நரேந்திரன். மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடந்தது.
கூட்டத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி வேலூரில் வரும் 8-ந்தேதி பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். அதற்கு ஏற்றவாறு களப்பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
- நவீன எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்
- அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் தமிழகஅரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் ஜி.லட்சுமிபிரியா ஆய்வு செய்தார்.
குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, சுண்ணாம்பு பேட்டை பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் தங்கம்நகர் நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திடக்கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன்ஜெயக்குமார், உதவி கலெக்டர் (வேளாண்மை) வெங்கடேசன், துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் பானுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் நகர மன்றதலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை உள்பட பலர் உடனிருந்தனர்.
- 6 மாதங்களாக நவீன பயிற்சி அளிக்கப்பட்டது
- குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஈடுபடுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்ற, மோப்ப நாய் பிரிவுக்கு புதியதாக `சாரா' என்னும் பெண் மோப்ப நாய் கடந்த ஆண்டு வாங்கப்பட்டது.
மோப்ப நாய்
குற்றங்களை கண்டறி வதற்காக வேலூரில் ஆறு மாதகால அடிப்படை பயிற்சி முடித்தது. இதனை தொடர்ந்து சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்பநாய் பிரிவு தலைமையகத்தில் மேலும் 6 மாதங்கள் சாராவுக்கு நவீனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை முடித்து வேலூருக்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் `சாரா' மற்றும் நவீன பயிற்சி பெற்றதற்கான சான்று அறிக்கையை, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் பயிற்சியாளர்கள் சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து `சாரா' மோப்பநாய் பிரிவில் பணியில் சேர்க்கப்பட்டது. மேலும் வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க `சாரா' மோப்பநாயை ஈடுபடுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






