என் மலர்
திருவண்ணாமலை
- மருத்துவமனைக்கு கொண்டு ெசல்லும் வழியில் இறந்தார்
- போலீசார் விசாரணை
தூசி:
செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளையை சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மகன் சுரேஷ் குமார். (வயது 38). இவர் செய்யாறு ஆக்கூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 3 வருடங்களாக அங்கேயே தங்கி பல் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் நேற்று காலை செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆக்கூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மோகன் குமார் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் புகார்
- தொடர்ந்து பணி வழங்கக்கோரி வலியுறுத்தல்
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு சரிவர பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .
மேலும் தொடர்ந்து பணி வழங்கக்கோரி கோஷமிட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து, போராட்டகாரர்களிடம் சமரசம் பேசினர்.
மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.
- பேய் பீதியால் அரசு அதிகாரிகள் அஞ்சி நடுங்குவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும் இருக்கிறது. பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் நீடித்து வருகிறது. தெய்வ சக்தி என்று ஒன்று இருக்கும் போது தீய சக்தியும் உள்ளது என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பேய் ஓட்டுவது பேய்களை கட்டுப்படுத்துவது என சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. சாலைகளில் பேய் நடமாட்டம், சுடுகாட்டு பகுதியில் பிசாசு நடமாடுகிறது என பல இடங்களில் பேய்களை கண்டதாகவும் கூறுகின்றனர். பேய்க்கு பயந்து வீடுகளை காலி செய்யும் நிலைமை உள்ளது.
வாடகை வீடுகளுக்கு செல்பவர்கள் இந்த வீட்டில் யாராவது தற்கொலை செய்திருக்கிறார்களா இளம் வயதினில் யாராவது இறந்தார்களா என கேள்வியை முன்வைத்த பிறகு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர்.
அந்த அளவுக்கு பேய் பயம் மனிதனை ஆட்கொண்டுள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என இருட்டை பார்த்து பயப்படுபவர்களும் அதிகமாக உள்ளனர். இதனால் வீடுகளில் முகப்புகளில் வேப்பிலை கட்டுவது வாசலுக்கு அருகில் செருப்பு துடைப்பம் போட்டு வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
படித்தவர்கள் பெரும்பாலும் பேய் இருப்பதாக நம்புவதில்லை. ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பேய் இருப்பதாக கூறி அரசு குடியிருப்பில் அதிகாரிகள் தங்காமல் புறக்கணித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலசபாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா கடந்த 2012 -@ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது .கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம் புதியதாக அலுவலகம் தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளில் தற்போது வரை 14 தாசில்தார்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால் அந்த குடியிருப்பில் எந்த ஒரு தாசில்தாரும் வசிக்கவில்லை. இதற்கு காரணம் அந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.
இதனால் அந்த குடியிருப்பில் எந்த அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என கூறுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்-
இந்த கட்டிடம் கட்டி 11 ஆண்டுகள் ஆகிறது .ஆனால் எந்த அதிகாரியும் குடும்பத்துடன் தங்கவில்லை. ஒரே ஒரு தாசில்தார் மட்டும் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சென்று விடுவார். அதன் பின்னர் யாரும் வருவதில்லை. அதிகாரிகளுக்கு பணி சுமை அதிகரித்து இரவு நீண்ட நேரம் ஆனாலும் யாரும் இங்கு தப்பி தவறி கூட தங்குவதில்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதி அருகே குறிப்பாக அமாவாசை நாட்களில் அமானுஷ்ய உருவம், பேய்கள் உலாவி வருவதாக கூறுகின்றனர். குடியிருப்புக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது.
அங்கிருந்து இந்த குடியிருப்பு வரை அமாவாசை நாட்களில் பேய் உலவி வருகிறது. எனவே இரவு நேரங்களில் இங்கு நாங்கள் யாரும் செல்வதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேய் பீதியால் அரசு அதிகாரிகள் அஞ்சி நடுங்குவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
- பாட புத்தகங்களும், நோட்டு களும் வழங்கப்பட்டது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
போளூர்:
ஜவ்வாது மலை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றன்ர்.
முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் தலைமை யாசிரியர் மன்னார் சாமி அனைவரையும் வரவேற்றறு வாழ்த்தினார்.
பின்னர் மாணவர்க ளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியது. இதனை யடுத்து பாட புத்தகங்களும், நோட்டு களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் அருள், வைத்தியநாதன், முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கிருத்திகையொட்டி நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
போளூர்:
போளூர் நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் நேற்று வைகாசி மாத கிருத்திகை கொண்டாடப்பட்டது. காலையில் முருகருக்கு சிறப்பு பூஜை செய்து அபிஷேகம், அலங்காரம், ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவர் கோவில் சுற்றி வலம் வந்து அருள் பாலித்தார்.
- உணவு பாதுகாப்பு துறை ஆணைய உத்தரவு
- அதிகாரிகள் நடவடிக்கை
ஆரணி:
ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராமரிக்கப்படவில்லை என ஏற்கனவே மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மூலமாக ஆய்வு மேற்கொண்டு அறிவிப்பு நோட்டீஸ் வழங் கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணைய உத்தரவின் படி திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நிலையை அலுவலர் டாக்டர் ராமகிருஷ் ணன் தலைமையில் நேற்று மாலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதேபோன்று ஆரணி ராட்டினமங்கலம் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சேகர், இளங்கோ, சுப்ரமணி, எழில் உள்பட பலர் இருந்தனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- தனிப்படை அமைத்து விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி குமரகு டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி.
சம்பவத் தன்று வயல் பணிக்காக செல்வி வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டிலிருந்த பணம், நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய செல்வி வீட்டின் பூட்டு உடை க்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறை யில் இருந்த மரப்பெட்டியின் பூட்டை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 அரை லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.
கேமரா காட்சிகள் ஆய்வு
திருட்டுபோன நகைகளின் மதிப்பு ரூ.8 அரை லட்சம் இருக் கும்.
இதுகுறித்து கீழ்பென்னாத் தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரனை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் 'கவ்வி' பிடிக்கவில்லை.
பின்ன அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் தனி படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
- ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.
கடை சம்மந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது.
இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மண்டியிட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.
ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இது குறித்து மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:-
ஜீவா அடி ஆட்களை ஏன் அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதை 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ வெளியானதால் ராணுவ வீரரின் வழக்கு திசை திரும்பியது. அதற்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
ராணுவ வீரர் மனைவி கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடுக்கம்பாறை வந்ததார். அங்கு மனைவி கீர்த்தியை மாலை 5 மணி அளவில் டிர்சார்ஜ் செய்து அவரது கணவர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது உடன் பெண் போலீசார் பாதுகாப்புக்காக அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.
கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து பிரபாகரன் பைக்கை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.
சதி திட்டம் தீட்டியதாக ராணுவ வீரர் பிரபாகரன், அவரது மனைவி கீர்த்தி மற்றும் செல்போனில் பேசிய அவரது நண்பர் வினோத் ஆகியோர் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் செல்போனில் பேசி சதி திட்டம் தீட்டிய வினோத் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.
- பள்ளி, கல்லூரி வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் செல்கின்றது. இந்நிலையில் தனியார் உட்பட அரசு பஸ்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்தின் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று செல்கின்றனர்.
குறிப்பாக காலை நேரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையின் அருகே தனியார் பஸ்கள் வரிசையாக நிற்பதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், என பல்வேறு வாகனங்கள் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி செல்வதால் பயணிகள் பஸ் நிலையத்தில் வெளியே காத்திருக்கும் சூழல் உருவாகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது
- ஜெயிலில் அடைத்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பலவன்பாடி கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் ராமன் (வயது 28).
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ராமனை போலீசார் வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- குளம் காணாமல் போவதற்குள்ளாக மீட்டு எடுத்து தர வேண்டும்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் உள்ள நீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். மேலும் கோடை வெயில் காலத்தில் கால்நடைகள் குடிப்பதற்கு இந்த குளத்தில் உள்ள நீரை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவில் இருந்த இந்த குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டையாக மாறியது.
இதனால் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றன. குளம் திடிரென காணாமல் போவதற்குள்ளாக மீட்டு எடுத்து தர வேண்டும் என்று கிராம பொதுமக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடமும், கிராம ஊராட்சி மன்றத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டெடுத்து தர வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்
- கலெக்டர் அறிவிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனா ளிகள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்குகிறது.
எனவே மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணையதங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டி டத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோ மெட்ரிக் கருவிகள் உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 எம்.பி.பி.எஸ். இ-சேவை மையம் அமையும் இடத்தில் அதிவேக அலைவரி சையுடன் தொடர்ச்சியான தடையற்ற இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமையப்பெற வேண்டும்
விண்ணப்பங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.
மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் இ- சேவை மையம் அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.






