என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முள்ளுகுட்டை ஏரி அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருவள்ளுவர்நகர் நரிக்குறவர்காலனியை சேர்ந்த வேலு (வயது 38), மகேஷ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
    திருவண்ணாமலை செங்கம் சாலையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் செங்கம் அருகில் உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தேஸ்வரன் (வயது 30) என்பதும், பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    கொளத்தூரில் இருந்து படவேடு செல்லும் சாலையில் உள்ள நல்ல தண்ணீர் குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதும் நிரம்பி உள்ளது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி நிரம்பி உபரி நீர் வழிந்தோடுகிறது. உபரி நீர் வழிந்தோடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தும், குளித்தும், மீன் பிடித்தும் மகிழ்கின்றனர். எனவே ஊராட்சி சார்பில் ஏரி பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் ஏரியில் குளிக்கக்கூடாது என்றும், மீறி குளித்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் பொதுமக்கள் ஏரி கோடிபோகும் பகுதியில் குளித்தும், மீன்பிடித்தும் வருகின்றனர். மேலும் கொளத்தூரில் இருந்து படவேடு செல்லும் சாலையில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளம் சமீபத்தில் குடிமராமத்து பணி மூலம் தூர்வாரப்பட்டது. ஏரியில் இருந்து வரும் தண்ணீர் மூலம் தற்போது நல்ல தண்ணீர் குளம் முழுவதும் நிரம்பி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதால் இதனை காணவும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 20 அடிக்கு மேல் குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளத்தில் குளிக்க அனுமதி இல்லை.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறை காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பல அடியார்களால் போற்றி பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். இந்து கோவில்களில் மூலவர் இருக்கும் கருவறையை படமோ, வீடியோவோ எடுக்க கூடாது என்பது முன்னோர்களின் அறிவுரையாகும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையை படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்ற விதிமுறை பலஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதனை மீறி மறைமுகமாக போட்டோ எடுத்த ஒரு சிலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 29-ந் தேதி தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம், பரணி தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. அன்று வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசார் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கோவில் கருவறை அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் கோவில் கருவறையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவில் சிவாச்சாரியார்களிடம் வீடியோவில் வரும் காட்சிகள் அருணாசலேஸ்வரர் கோவில்தானா? என்று கலந்து பேசி உறுதி செய்துவிட்டு யார் அந்த வீடியோவை எடுத்தது என்று விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றனர்.
    கார்த்திகை தீபத்திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அருணாசலேஸ்வரர் உலா கோவில் பிரகாரத்தில் நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 29-ந் தேதி மாலை 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலி்ல் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. வழக்கமாக மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்ட பிறகு 2-வது நாள் காலையில் அண்ணாமலையார் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் கிரிவலம் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    அதற்கு பதிலாக நேற்று காலை அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. அப்போது அருணாசலேஸ்வரருக்கு மகுடம் சூட்டப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    விழா நாட்களில் சாமி வாகனத்தில் உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உலா செல்லும் நிகழ்ச்சி திருவூடல் நிகழ்ச்சியை போன்று பக்தர்கள் சாமியை சுமந்தபடி சென்றனர். இதில் போலீசார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமியும், அம்மனும் ஆடியபடி சென்ற காட்சி பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், இன்று (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கானவர்களை கோவில் வளாகத்தில் அனுமதித்தது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை என்ற காரணத்தை கூறி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    அதேபோல் கிரிவலம் செல்லவும் தடை விதித்தது. மேலும் வெளியூர் பக்தர்களை திருவண்ணாமலை நகருக்குள் 3 நாட்கள் வரவும் அனுமதி மறுத்தது.

    நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கோவில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விதித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளே வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழக்கம்போல் அனுமதி அளித்தனர்.

    தங்க கொடி மரம் அருகே நூற்றுக்கணக்கான வி.வி.ஐ.பி.க்கள் உள்ளிட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவு காற்றில் பறந்தது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கானவர்களை கோவில் வளாகத்தில் அனுமதித்தது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய ஆசிரியர் பயிற்சி வாலிபர் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் நிம்மியம்பட்டை சேர்ந்தவர் ராஜா (வயது28). பி.எஸ்.சி., பி.எட்., படித்துள்ளார். 23-ந்தேதி இவரும், சகோதரர் ஜெயச்சந்திரா என்பவரும் வேலூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்த திருப்பதிக்கு வந்தனர்.

    அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபரும் உடன் வந்தார்.

    3 பேரும் நேற்று முன்தினம் செம்மர கடத்தல் கும்பலுடன் சேர்ந்து திருப்பதியை அடுத்த எராவாரிப்பாளையம் மண்டலம் போடேவான்டலப்பள்ளி, பல்லம்வாரிப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு அருகில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி தோளில் தூக்கி வந்தனர்.

    விவசாய நிலத்தில் வந்தபோது, வழியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் அறுந்து கீழே கிடந்துள்ளது.

    அதை, கவனிக்காமல் வந்தபோது ராஜா, விஜயகுமார் ஆகியோர் மின்கம்பியை மிதித்தனர். அதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் 2 பேரின் பெற்றோரும், உறவினர்களும் திருப்பதி அரசு ஆஸ்பதிரிக்கு விரைந்து வந்து அவர்களின் பிணத்தை பெற்று சொந்த கிராமத்தில் இறுதி சடங்கை நடத்தினர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலாவும், இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உலா கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலி்ல் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. வழக்கமாக அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி பிரம்ம தீர்த்த குளத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக சந்திரசேகருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சாமி உற்சவம் பிரம்ம தீர்த்த குளத்திற்கு கொண்டு வரப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் தெப்பல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இ்ன்று (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் துணை சுகாதார நிலையத்தில் நிவர் புயலையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் துணை சுகாதார நிலையத்தில் நிவர் புயலையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவை சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜனார்த்தனன், பிரித்திவிராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
    கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் திருவண்ணாமலையில் நேற்று 2-வது நாளாகவும் பக்தர்கள் இல்லாமல் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மகாதீபத்தன்றும், அடுத்தநாள் பவுர்ணமியை முன்னிட்டும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவதற்கும், கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்ட நேற்று முன்தினம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்கும் வகையில் கிரிவலப் பாதையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் வைத்து, கிரிவலம் சென்ற ஒருசில பக்தர்களையும் தடுத்து நிறுத்தி கிரிவலம் செல்ல அனுமதியில்லை என்று எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிலர் குறுக்கு சாலைகள் வழியாக கிரிவலப் பதையில் புகுந்து கிரிவலம் சென்றனர்.

    கார்த்திகை தீபத்தையொட்டி வரும் பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 1.46 மணிக்கு தொடங்கி நேற்று மதியம் 2.23 வரை இருந்தது. பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் 2-வது நாளாக நேற்றும் பக்தர்கள் இன்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. ஒருசிலர் மட்டும் நேற்று தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை விசாரித்து அனுப்பினர். வெளியூர் பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் நேற்று பகலில் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
    கண்ணமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தை அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி புஷ்பா (வயது 50). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நிலத்தில் வேர்க்கடலை பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பம்புசெட் கதவை திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் புஷ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புஷ்பாவின் மகன் சிவராமன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளே செல்வதற்கும், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று கோவிலுக்குள் நடைபெறும் பரணி மற்றும் மகா தீப நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தினால் தடை செய்யப்பட்டது. மேலும் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    மகா தீபத் தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.

    கோவிலுக்கு உள்ளே செல்வதற்கும், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.

    இதுகுறித்து வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கூறுகையில், பல வருடங்களாக திருவண்ணாமலைக்கு நாங்கள் வருகிறோம். எந்த ஆண்டும் கோவிலுக்குள் செல்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது கிடையாது. இதனை நாங்கள் கேள்விபட்டது கூட கிடையாது. மகா தீபத்தன்று கோவிலுக்குள் சென்று தீப தரிசனம் செய்வது வழக்கம். 

    அதன்பின்பு கிரிவலம் செல்வோம். தற்போது உள்ள தடை உத்தரவால் கோவிலுக்குள் சென்று தீபதரிசனத்தை காண முடியவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்களை போல் ஏராளமான பக்தர்கள் இந்த ஆண்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இருப்பினும் கோவிலுக்கு வெளியே இருந்து வணங்கி, மலையில் தீப தரிசனத்தை கண்டது மனதிற்கு சற்று ஆறுதலை தந்துள்ளது என்றனர்.

    ×