என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 28 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கு தடையின்றி பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    கார்த்திகை தீப திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும், சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும், பஸ் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும், வெளியூர் சென்ற பஸ்கள் திரும்பி வருவதில் தாமதம் என்ற நிலை இருக்கக்கூடாது.

    பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 28 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கு தடையின்றி பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு அனுமதிக்கப்படுவர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் வாகனங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும், மலையேறும் 2,500 பக்தர்களுக்காக 3 மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் கிரிவலப் பாதையில் உள்ள ஈசானிய மைதானம், அடி அண்ணாமலை, வருணலிங்கம் உள்ளிட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது துணை சபாநாயகர் கு‌.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • பஸ்சில் பயணம் செய்த தேசூர், மேல்ஒலக்கூர், செஞ்சி, காஞ்சிபுரம் ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    வந்தவாசி:

    காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி தேசூர் வழியாக செஞ்சிக்கு தனியார் பஸ் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    அப்போது வந்தவாசி அடுத்த திரக்கோவில் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த தேசூர், மேல்ஒலக்கூர், செஞ்சி, காஞ்சிபுரம் ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    தேசூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் மூலம் கட்டண டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்கள், பரணி தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
    • மகா தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6-ந்தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலமாக 1,600 அனுமதி சீட்டுகள் இன்று (4ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

    டிச.6-ம் தேதி காலை மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணிக்கு மகா தீபத்தை தரிசிக்க ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி வழங்கப்பட்டது.

    சீட்டுகள் https://annamalaiyar.hrce. tn.gov.in என்ற கோயில் இணைய தளம் வழியாக இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் ½ மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் புக்கிங் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆன்லைன் மூலம் கட்டண டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்கள், பரணி தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவர். மகா தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6-ந்தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டண அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், அம்மணி அம்மன் கோபும் (வடக்கு கோபுரம்) வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் விவரங்களுக்கு 1800 425 3657 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை- செங்கம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சென்றது.
    • பஸ்சில் இருந்த பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    செங்கம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை- செங்கம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சென்றது.

    பஸ்சை டிரைவர் மணிவாசகம் ஓட்டி வந்தார். செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. முன்னாள் சென்ற லாரியை அரசு பஸ் முந்தி சென்றது.

    அப்போது எதிரே வந்த பெங்களூரில் இருந்து பண்ருட்டிக்கு காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி மீது அரசு பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சரக்கு லாரி கவிழ்ந்து காய்கறிகள் சாலையில் சிதறியது. பின்னால் வந்த லாரியும் பஸ் மீது மோதியது.

    இதில் அரசு பஸ் டிரைவர் மணிவாசகம், காய்கறி லாரியில் வந்த லோடுமேன் ராஜேஷ் (35) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    செங்கம் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல்சிகிச்சைக்காக அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டுக்கு உட்பட்ட நெமந்தகார தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தலா 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.

    இந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரதிகாந்தி வரதன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் து.வரதன் வரவேற்றார்.

    நகராட்சி ஆணையர் (பொறுப்பு) டி.கே.சரவணன் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளிலிருந்து பொது மக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அம்பிகா மேகநாதன், ரிஹானா சையத்அப்துல்கறீம், ச.நூர்முகமது, தீபா செந்தில்கு மார், பா.சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டது

    ஆரணி:

    வேலூரில் இருந்து ஆரணி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது கமண்டல நாக நதி ஆற்றுப்பாலம் அருகே வந்த போது கார் பழுதாகி சாலையின் நடுவே நின்றது. பின்னர் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.

    இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டது. இது குறித்து ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் ஆரணி காந்தி ரோடு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.

    வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா துணைச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் தாங்கினார். இந்த கூட்டத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கான நிதி, மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அலுவலக ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஊழியர்கள் ஊதியம் மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தின் வளர்ச்சி உள்ளிட்ட 32 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன.

    நிகழ்ச்சியில் துணை ஒன்றிய குழு உறுப்பினர்கள் கீதா மோகன், பகுத்தறிவு துரைமாமது, வேலு, ஏழுமலை, குமாரராஜா வட்டார வளர்ச்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்று காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்பட உள்ளது.
    • மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வருகிற 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலைமீது ஏறி மகா தீப தரிசனத்திற்கு அனுமதி சீட்டு பெற்ற 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான அன்று காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக்கலை கல்லூரி வளாகத்தில் 6-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

    மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

    பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. 6-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

    மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    மலைக்கு பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய், கற்பூர தீபம் ஏற்றவோ கூடாது.

    மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
    • பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர்.

    ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    • கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
    • அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கிரிவலப்பாதையில் ஓடினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து நேற்று 2-வது நாளாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    முன்னதாக அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அவர் கிரிவலப்பாதையில் ஓடினார். சாதாரணமாக பக்தர்கள் நடந்து சென்றால் கிரிவலப்பாதையை சுற்றிமுடிக்க குறைந்தது 3 மணிநேரம் ஆகும். ஆனால் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு மணி நேரம் 52 நிமிடத்தில் ஓடி முடித்து உள்ளார்.

    இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில் காவல்துறையில் இன்னும் வேகமாக ஓடுபவர்கள் உள்ளனர் என்றும் பதிவிட்டு இருந்தார்.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சியால் வாகனம் தப்பியது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த ரகுநாதபுரத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று ஜெபக்கூட்டம் நடந்தது.

    ஜெப கூட்டத்திற்கு வந்தவர்கள் வெளியே வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர். தேவாலயத்தின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மர்ம கும்பல் வெளியே நிறுத்தியிருந்த பைக்கை திருட முயன்றனர். இதனை கண்காணிப்பு கேமராவில் கண்ட வாகன உரிமையாளர் வெளியே வந்தார். அப்போது மர்ம கும்பல் வாகன உரிமையாளரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் வாகன உரிமையாளர் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருட முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

    • திருவண்ணாமலை மகா தீபத்தின் போது பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
    • தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வருகிற 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலைமீது ஏறி மகா தீப தரிசனத்திற்கு அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டும் அனுமதிக்கபட உள்ளனர். இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றப்படும் 6-ந் தேதி 2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற நிபந்தனை களுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

    திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான அன்று காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும்.

    திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் 6-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

    இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும். மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

    பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. 6-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

    மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

    மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×