என் மலர்
திருவண்ணாமலை
- கள்ள சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது
- போலீசார் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்ற சரித்திர பதிவேடுகள் கொண்ட குற்றவாளிகளை எச்சரித்து பிரமாண பத்திரம் எழுதி வாங்கி எச்சரிக்கை விடுக்கின்றனர். பலர் கைது செய்யப்படுகிறார்கள்.
இருந்தபோதிலும் சில குற்றவாளிகள் மீண்டும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். எனவே போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி கடந்தாண்டில் மட்டும் 116 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஜெயிலில் இருந்து வெளியே வரும் நபர்கள் மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தடுக்க சில மலைக்கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 35 பேர் குண்டர் சட்டத்தில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்தாண்டில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் என 80 பேர் மீதும், மணல் கடத்தியதாக ஒருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றனர்.
- மதுபோதையில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ராமகிருஷ்ண உடையார் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது70). இவர் கடந்த 27-ந்தேதி இரவு மதுபோதையில் தனது வீட்டருகே தரைமட்டமாக உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டார். இரவு நேரத்தில் யாரும் பார்க்காததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
நேற்று முருகேசனின் சகோதரர் விஸ்வநாதன், தண்ணீர் தொட்டியில் முருகேசன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் முருகேசன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார்இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது
- ஏராளமான பக்தர் சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார் சாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நேற்று காலையில் நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 23-ந் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது.
முடிவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், திருவொத்தூரில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
6ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் உற்சவம் வீதி உலா நடைபெற்றது. இரவு திருமண வைபோகம் நடைபெற்றது.
யானை வாகனத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.இன்று 7-ம் நாள் தேர் திருவிழா நடைபெறுகிறது.
இதனை ஒட்டி இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, மங்கள வாத்தியத்துடன் ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகன் வேல் ஆகியோர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் பலர் பெருமளவில்கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை வரைதேரோட்டம் விழா நடைபெறுகிறது.
- கலசப்பாக்கம் அருகே அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
திருவண்ணாமலை:
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலமான உத்திராயணம் காலம் இன்று ரதசப்தமி முன்னிட்டு கலசப்பாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளன.
விழாவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கலந்து கொண்டு செய்யாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இன்று அதிகாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டிராக்டர் மூலம் சாலை வழியாக திருவண்ணாமலை இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்றார்.
அப்போது அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் விவசாய நிலத்தை கலசப்பாக்கம் அருகே உள்ள தனகோட்டிபுரம் கிராமத்தில் நேரடியாக சென்று பார்வையிடும் வைபவம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை சாமிக்கு மாலையாக அணிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படையல் இட்டு வணங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சாமி புறப்பாடு நடந்தது. அப்போது அவருக்கு வழி முழுவதும் பக்தர்கள் வரவேற்பு அளித்து தீபாரதனை செய்தனர்.
கலசப்பாக்கம் செய்யாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள தென்பள்ளிப்பட்டு வழியாக ஆற்றில் இறங்குகிறார்.
அதேபோல் இவ்விழாவில் கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் செய்யாற்றின் வடகறையில் இருந்து ஆற்றில் இறங்கி இரண்டு சாமிகளும் நேருக்கு நேராக ஆனந்த நடன நிகழ்ச்சி நடக்கிறது.
தென்கிழக்கு மூலையில் ஒன்று சேர்ந்து சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்துவிட்டு ஆற்றில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறுகிறது.
- ரோட்டை கடக்க முயன்ற போது விபத்து
- ேபாலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 70).
இவர் கடந்த 26-ந்தேதி அவ்வூர் வழியாக செல்லும் மெயின்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது வேலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக உறவினர் தனசேகர் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- யாகபூஜைகளை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்
- அதிகாலை என்பதால் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகம் ஓராண்டு வருடாபிஷேக யாக பூஜை நேற்று திதி நட்சத்திரம் கணக்கில் அதிகாலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதிகாலை என்பதால் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் யாகபூஜையின் நன்கொடையாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
ஹோமம் கலசபூஜை முடிந்த பின்னர், புனித நீர் அம்மனுக்கும், சோமநாதீஸ்வரருக்கும் அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
யாகபூஜைகளை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.
- சாலைகளை விரிவு செய்ய வேண்டும்
- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியதாவது:-
புதிய பட்டா பெற வேண்டுபவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு சரியான முறையில் இருந்தால் தகுதி வாய்ந்த நபர்கபளை செய்து செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 42 லட்சம் பக்தர்கள் வந்தனர். அப்போது பஸ்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாமல் இருந்தது.
புதிய பஸ் நிலையம் வரப்பெற வருவாய்த்துறை பெரும் உதவியாக இருந்தது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள 19 வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பட்டா வழங்க வருவாய்துறை அரசு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் நகர்ப்புற சாலைகளை விரிவுப்படுத்துவது இன்றியமையாதது. சாலைகளை விரிவு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். அதன் அடிப்படையில் தான் திருவண்ணாமலை முதல் செங்கம், வேலூர் முதல் சித்தூர் சாலை மற்றும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ.5.28 கோடியில் கட்டப்படுகிறது
செய்யாறு:
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக புதிய ஆய்வகங்கள் கட்டிடம் ரூ. 5.28 கோடி மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானவேல், ராம் ரவி, கல்லூரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடன் தர மறுத்ததால் ஆத்திரம்
- கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45), இவர் தனது மைத்துனர் சுரேஷ், உறவினர் வடிவேலு ஆகியோர் இணைந்து அசனமாபேட்டை கூட்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
கடத்தி தாக்குதல்
கடந்த 24-ந் தேதி இரவு பணிகளை முடித்துக் கொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு தென்னம்பட்டு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரனை சர மாரியாக தாக்கி காருக்குள் இழுத்து போட்டு கடத்திச் சென்றனர்.
காரில் இருந்த நபர்கள் ராமச்சந்திரன் தம்பி ரவிச்சந்திரன் க்கு போன் செய்து உங்கள் அண்ணனை கடத்தி உள்ளோம் அவரை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் எப்போது எங்கே தர வேண்டும் என மீண்டும் போன் செய்கிறோம் என கூறிவிட்டு போன சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.பிரம்மதேசம் புதூர் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிய ளவில் கடத்தப்பட்டதாக கூறப்ப ட்ட ராமச்சந்திரனை அந்த கும்பல் இறக்கிவிட்டுள்ளனர்.
ராமச்சந்திரன் இடமிருந்து 50,000 பணத்தையும்3 சவரன் தங்கச் செயினையும் கடத்தல் கும்பல் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், தூசி இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினர்.
கடன் தரமறுப்பு
இதில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (31)என்பவர் பைனான்ஸில் கடனாக பணம் கேட்டதற்கு ராமச்சந்திரன் பணம் தர முடியாது என அசிங்கமாக பேசி அனுப்பி உள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பிரபாகரனை பிடித்து விசாரித்தனர்.
இதில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ராமச்சந்திரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்த பிரபாகரன் தனது நண்பர்களான மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (37) சிறு கரும்பூர் ராஜேந்திரன் பிரசாத் (27), காஞ்சிபுரம் தாலுக்கா தாமல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தமிழரசன் (37) ஆகியோர் ஒன்று சேர்ந்து ராமச்சந்திரனை கடத்தி தாக்கியது தெரியவந்தது.
பொய்கைநல்லூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது காரை கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
தனிப்படை போலீசார் பிரபாகரன், ரமேஷ், ராஜேந்திர பிரசாத், விக்னேஷ், தமிழரசன், உடந்தையாக இருந்த கார் டிரைவர்மோகன்ராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.ஆள் கடத்தல் வழக்கை துரித நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- கீழ்வல்லத்தில் மாடு விடும் விழா நடந்தது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்வல்லம் கிராமத்தில் நேற்று 26ம்தேதி குடியரசு தின விழா முன்னிட்டு, 51-ம் ஆண்டாக காளைவிடும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் நுழைவுக்கட்டணம் ரூ.1500 செலுத்தி கலந்து கொண்டு வீதியில் வேகமாக ஓடியது.
இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற இரும்பிலி ஐஸ்வர்யா என்பவர் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ55001/-ம், இரண்டாமிடம் பெற்ற சுனிதா எக்ஸ்பிரஸ் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ50001-ம், மூன்றாமிடம் பெற்ற வீரதமிழச்சி காளைக்கு ரூ45001-ம் உள்பட 45 காளைகளுக்கு பல்வேறு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
காளைவிடும் திருவிழாவை வேலூர் உதவி கலெக்டர் ராமலிங்கம் வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா ஆய்வாளர் பார்த்தசாரதி, மகளிர் காவல் ஆய்வாளர் ஜாகிதா உள்பட 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.காளைவிடும் வேடிக்கை பார்க்க வந்த 7 பேரை மாடுகள் முட்டியதில், லேசாக காயமடைந்த சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
காளைவிடும் திருவிழா நடந்த தெருவுக்கு அருகே, வேலூர் - திருவண்ணா மலை மெயின்ரோடு உள்ளதால் சில காளைகள் மெயின்ரோடு வழியாக கண்ண மங்கலம் புதிய சாலை பகுதியில் ஓடியது.
இதனால் அவ்வழியே நடந்து சென்றவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கண்ணமங்கலம் நாகநதி மேம்பாலம் அருகே சில காளைகள் நின்று கொண்டு போக்கு வரத்துக்கு இடைஞ்சல் செய்த போது காளைகளின் உரிமையாளர்கள் அழைத்து சென்றனர்.
- வீடு கட்ட பூமி பூஜை செய்துவிட்டு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
தேசூர் அரசமர தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஷ்வா (வயது 22). இவர் சென்னை சினிமா பட தயாரிப்பு குழுவில் பணிபுரிந்து வந்தார். தண்டையார்பேட்டை பகுதியில் விஷ்வா தங்கி வேலை செய்து வந்தார்.
சினிமா பட ஊழியர்
இவரது நண்பர் அபினேஷ் (23) இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வந்தவாசி அருகே தேசூரில் புதிய வீடு கட்டுவதற்காக பூமி பூஜை செய்துவிட்டு பின்னர் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.
விபத்தில் சாவு
அப்போது வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஆராசூர் கூட்ரோடு அருகே திருவள்ளூரில் திருமண நிகழ்ச் சிக்கு சென்று விட்டு செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்வா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






