என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தாண்டில் 116 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- கள்ள சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது
- போலீசார் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்ற சரித்திர பதிவேடுகள் கொண்ட குற்றவாளிகளை எச்சரித்து பிரமாண பத்திரம் எழுதி வாங்கி எச்சரிக்கை விடுக்கின்றனர். பலர் கைது செய்யப்படுகிறார்கள்.
இருந்தபோதிலும் சில குற்றவாளிகள் மீண்டும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். எனவே போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி கடந்தாண்டில் மட்டும் 116 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஜெயிலில் இருந்து வெளியே வரும் நபர்கள் மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தடுக்க சில மலைக்கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 35 பேர் குண்டர் சட்டத்தில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்தாண்டில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் என 80 பேர் மீதும், மணல் கடத்தியதாக ஒருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றனர்.






