என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மரங்கள் வெட்டி அகற்றம்
    • 1 கி.மீட்டருக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகிறது

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு வழியாக திருவண்ணா மலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    பவுர்ணமி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார் வேன் பஸ்களில் திருவண்ணா மலைக்கு வருகின்றனர்.

    அதுபோன்ற நாட்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பெரிய கிராமங்கள் வழியாக ஊருக்குள் வருகிற போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    இதனை தவிர்க்க இந்த சாலையை பைபாஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருவண்ணா மலையில் இருந்து தண்ட ராம்பட்டு வழியாக அரூர் வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வரை செல்லும் சாலையில் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தரைப்பாலங்கள் அமைத்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் இணைப்பு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டு தரைப்பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • அழிவின் விளிம்பில் 33 கோவில்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
    • பெரும்பாலான கோவில்கள் இடிந்து மண்ணி்ல் புதைந்துள்ளது.

    தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்கு அருள்பாலித்து வரும் அருணாசலேஸ்வரர் நினைத்தாலே முக்தி தரக்கூடியவர். அவரை தரிசனம் செய்ய உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர். இது போன்று திருவண்ணாமலை மாவட்டத்தின பல்வேறு கோவில்களும் சிறப்பு பெற்று விளங்குகின்றன.

    மாவட்டத்தில் பல்வேறு கோவில்களின் சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்றவை மிக நுட்பத்துடன் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஏராளமான கோவில்கள் உள்ளன.

    அக்காலக்கட்டத்தில் கோவில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஏராளமான குறுநில மன்னர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கி ஆன்மிக பணியை மேற்கொண்டனர்.

    அழிவின் விளிம்பில் கோவில்கள்

    ஆனால் காலப்போக்கில் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கின்றன. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் மண்ணில் புதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் 33 கோவில்கள் உள்ளதாக முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில் மேலும் 20 கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஆவணப்படுத்தும் பணி

    அதையும் ஆவணப்படுத்தும் பணியில் வரலாற்று ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கோவில்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்த பழங்கால தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. மேலும், அந்தந்த பகுதிகளில் கலைக்கூடங்களின் சிறப்புகளை காட்டுவதாகவும், மக்களின் மனநிலையை ஒருங்கிணைக்கும் தொன்மங்களாகவும் திகழ்வதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    செடி, கொடிகள்

    கலசபாக்கம் தாலுகா சீனந்தல் கிராமத்தில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெள்ளந்தாங்கீஸ்வரர் கோவில் உள்ளது. விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோவிலான இந்த கோவிலில் அரியவகை சிற்பங்களும் உள்ளன. இந்த கோவில் முழுவதையும் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன.

    இதே தாலுகாவில் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட விஷ்ணுகோவிலிலும் சிற்பங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதோடு கோபுரம், மண்டபம் அனைத்துமே இடிந்து காணப்படுகிறது.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா பன்னியூரில் சிற்பங்கள், கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட சிவன் கோவில் அழியும் நிலையில் உள்ளது.

    ஆரணி தாலுகா முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள சிவன்கோவில், செய்யாறு தாலுகா இருங்கல் கிராமத்தில் உள்ள சிவன்கோவில், திருப்பனமூர் கிராமத்தில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன்கோவில், செங்கட்டான்குண்டில் உள்ள சிவன் கோவில், தவசி கிராமத்தில் உள்ள சிவன் கோவில், சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள சிவன்கோவில், புதுக்கோட்டை கிராமத்தில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஆகிய கோவில்கள் சேதமடைந்து காணப்படுகிறது.

    புனரமைக்க நடவடிக்கை

    மேலும் வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம்புதூர் கிராமத்தில் 7 கல்வெட்டுகள் கொண்ட சிவன்கோவில், வந்தவாசி தாலுகா எறும்பூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவில், ஆயிலவாடி கிராமத்தில் மண்ணில் புதைந்து வரும் சிவன் கோவில், காரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், இளங்காடு கிராமத்தில் உள்ள சிவன் கோவில், இரும்பேடு கிராமத்தில் உள்ள சிவன் கோவில், கீழ்வில்லிவலம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், கொளவளை கிராமத்தில் உள்ள சிவன் கோவில், மேல்கொடுங்காலூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் சிதலமடைந்து வருகிறது.

    இந்த கோவில்களில் சிலவற்றில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவில்களில் சில கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    கோவில் முழுவதும் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளது. பெரும்பாலான கோவில்கள் இடிந்து மண்ணி்ல் புதைந்துள்ளது. சேதமடைந்து வருவதால் பல கோவில்களில் வழிபாடும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்டப்பட்ட கோவில்கள் அழிந்து வருவதாக ஆன்மிக வாதிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அனைத்து கோவில்களையும் மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    அரசு புனரமைப்பதோடு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாளர்களும் இதில் ஆர்வம் காட்டி இதுபோன்ற கோவில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

    பாதுகாப்பு

    திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன்:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான பழங்கால கோவில்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த கோவில்களில் பல கோவில்கள் எந்தவித அரசு துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கோவில்களை முறையாக அரசு துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    அந்த துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் அந்த கோவில் வரும் பட்சத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சேதமடைந்துள்ள கோவில்கள் குறித்த பட்டியலை தயார் செய்ய வேண்டும். அந்தப் பட்டியல் கோவில் கட்டப்பட்ட காலக்கட்டம், சேத விவரம் போன்றவை அடங்கி இருக்க வேண்டும். லேசான சேதங்கள் கொண்ட கோவில்களை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்வதன் மூலம் கிராமத்தின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மறைமுகமாக உயரும். மேலும் கோவில்கள் குறித்த வரலாற்று தகவல்களை வெளி கொண்டு வரும் வகையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்தால் கோவில் பெருமை மக்களை சென்றடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் வரலாறு

    திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்.பிரகாஷ்:-

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் பெரும்பாலும் சிவனுக்காக கட்டப்பட்ட கோவில்கள் அதிகம் உள்ளது. நாளடைவில் பராமரிப்பு இல்லாததால் அவை சேதம் அடைந்து வருகிறது. இக்கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு கோவில்களில் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டை ஆராய்ச்சி செய்து பல கோவில்களுக்கான வரலாற்றை வெளி கொண்டு வர வேண்டும். இந்தக் கோவில்கள் பல்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்டுள்ளது. இதை புதுப்பித்து மீண்டும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்போது திருவண்ணாமலை பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களின் வரலாறு உலகிற்கு தெரிய வரும்.

    கோவில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் அங்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் அதற்கான வழிவகையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 பெண்களை பஸ்சில் ஏற்றி வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
    • 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வந்தவாசி:

    சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வசீம். ஏ.சி.மெக்கானிக். இவர் தனது மனைவி அப்ரினுடன் வந்தவாசியில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து போளூர் செல்லும் அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    தென்னாங்கூர் கிராமம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது கைக்குழந்தையுடன் வந்த 3 பெண்கள் வசீம் பேக்கை திறந்து அதில் இருந்த 15 பவுன் நகையை திருட முயற்சி செய்தனர்.

    இதை கவனித்த வசீமின் மனைவி அப்ரின் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவர்களிடம் கேட்டபோது 3 பெண்களும் பஸ்சை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கி தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே வசீம் மற்றும் அவரது மனைவி அப்ரின் ஆகியோர் கூச்சலிட்டனர்.

    அதன்பின் வசீம் மற்றும் சக பயணிகள் கீழே இறங்கி அந்த பெண்களை பிடிக்க ஓடினர். அதில் 2 பெண்களை அவர்கள் மடக்கி பிடித்தனர். ஒரு பெண் அவ்வழியாக வந்த பைக்கில் ஏறி தப்பி விட்டார்.

    பின்னர் 2 பெண்களையும் பஸ்சில் ஏற்றி வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் திருச்சி, பீமா நகரைச் சேர்ந்த அக்காள்-தங்கையான ஆரிக்கா (வயது 30), அகிலா (28) என்பது தெரியவந்தது.அவர்கள் போலியான ஆதார் கார்டுகளை வைத்துள்ளனர்.

    அவர்கள் இதுபோன்று வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கலெக்டர் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    • இந்த கோவிலுக்குள் வருவதற்கு ஆதி திராவிட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் தென் முடியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் மையப்பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்குள் வருவதற்கோ பொங்கல் வைத்து வழிபடுவதற்கோ அங்குள்ள ஆதி திராவிட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

    இதனால் மனவேதனை அடைந்த ஆதிதிராவிட சமூக மக்கள் தங்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென்று போராடி வந்தனர். இந்த கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் அங்குள்ளவர்களால் விழாக்கள், பூஜைகளில் ஆதிதிராவிடர்களுக்கு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. 80 ஆண்டுகளாக இதே நிலைதான் இருந்து வந்தது.

    இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி கலெக்டர் முருகேஷ் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

    அதைத் தொடர்ந்து நேற்று ஆதிதிராவிட இன மக்கள் தென் முடியனூர் முத்து மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன் திரண்டனர். பதற்றத்தை தணிக்க தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோவில் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆயுதப் படையின் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தென் முடியனூர் கிராமம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

    காலை 11 மணி அளவில் கலெக்டர் முருகேஷ் தென்முடியனூர் கிராமத்துக்கு வந்தார். அவரது முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    அதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.

    அப்போது பலர் கலெக்டர் முருகேஷ் காலில் விழுந்து தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தென்முடியனூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    • 205 பேருக்கு சிகிச்சை அளித்தனர்
    • இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்

    பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர் சோமு ஜூவல்லரி அதிபர் சோமசுந்தரம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டு 205 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் 45 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 10 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    மேலும் பாண்டிச்சேரி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டது.

    • தை கிருத்திகை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தை கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி அருகில் உள்ள கோபுரத்திளையனார் சன்னதியில் அறுபடை முருக பக்தர்கள் குழு சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் புஷ்ப காவடியை எடுத்து மாட வீதியை உலா வந்தனர்.

    இதேபோன்று திருவண்ணாமலை வட விதி சுப்பிரமணியர் சுவாமி கோவில், சோமாஸ்பாடி பாலமுருகர், கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சி பாலமுருகர், துரிஞ்சாபுரம் அடுத்த தேவனாம்பட்டு சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில்களில் தை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மகாதீபாரதனை செய்யப்பட்டனர்.

    மேலும் கோவில்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • செங்கம் பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    செங்கம்:

    செங்கம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், தரவு மேலாண்மை பிரிவு ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் திருவண்ணா மலை கிரிவல பாதையில் கழிவறைகள் அதிக அளவில் அமைக்க வேண்டும், ஏற்கனவே உள்ள கழிவறைகளை அவ்வப்போது சுகாதாரமான முறையில் சுத்தப்படுத்த வேண்டும் எனவும், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வாங்கிக் கொண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மருத்துவ நிபுணர்களை நியமித்து உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரேணுகா, கிருஷ்ணமூர்த்தி, குமரன், மாவட்ட துணை தலைவர்கள் ஜெயராமன், சேகர், வழக்கறிஞர் பிரிவு ஜெயச்சந்திரன், சுந்தர்ராஜன், கவுன்சிலர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், நகர பொருளாளர் ராஜேந்திரன், இளைஞர் அணி ரமேஷ், பழனிவேல்ராஜன், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் பாக்யராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வின் முடிவில் செங்கம் நகர தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

    • சென்னையில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    சென்னையில் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ள விமானப்படை குழு மருத்துவ உதவியாளர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ உதவியாளர் பிரிவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு (ஒய் பிரிவு) மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான ஆள் சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 8-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    இப்பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்த்தில் இருந்து குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 27-6-2002 முதல் 27-6-2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதிகளில் நடத்தப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி. மருத்துவம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து திருமணம் ஆகாதவர்கள் 27-6-1999 முதல் 27-6-2004 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27-6-1999 முதல் 27-6-2002 வரையில் காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    இணையதள முகவரி பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14 ஆயிரத்து 600 வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் ராணுவ சேவை ஊதியம் உள்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26 ஆயிரத்து 900 ஆகும்.

    இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடத்தப்படும்.

    எனவே ஆர்வமுள்ளவர்கள் MY IAF என்ற செயலி மூலமாகவோ, http://airmenselection.cdac.in./CASB என்ற இணையதளத்திலும் வெளியிட்டு உள்ள அறிவிப்பை பார்த்து தேர்வு முறை, தேர்வு நாளன்று எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிவித்து தகுதியுடைவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04175- 233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேவைாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
    • தலைமறைவானவர்களை பிடிக்க எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றிய அலுவலகம் முன்பு 4 கடைகள் உள்ளது.

    அதில் ஒரு கடையில் ஆரணி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகமும், மற்றொரு கடையில் சின்னகண்ணு என்பவர் வாடகைக்கு உள்ளார்.

    கடந்த 1-ந் தேதி விடுதலை சிறுத்தை நிர்வாகிகளுக்கும், சின்னகண்ணுவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருதரப்பினரும் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இருதரப்பினரையும் விசாரணைக்கு வரும்படி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அழைத்தனர்.

    இதில், விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட 50-க்கும் மேற்பட்டோரும், சின்னகண்ணு தரப்பில் சிலரும் ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

    அவர்களிடம் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அப்போது திடீரென ஆவேசம் அடைந்த பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டி கேவலமாக பேசியுள்ளார். இது 'வாட்ஸ்ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோரை கடந்த 8ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கரை, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்று ஆரணியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    டவுன் போலீஸ் நிலையம் அருகே ஊர்வலம் சென்றபோது, போலீசாரை கண்டித்து ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.

    இச்சம்பவம் சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலானது. இது போலீசார் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆரணிக்கு விரைந்து வந்தார். டவுன் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அனுமதி இன்றி கூட்டம் கூடுவது, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பது, மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விடுதலை சிறுத்தை பிரமுகர்கள் பொன்னுரங்கம், கார்த்தி, பாக்யராஜ், வினோத் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

    இதையறிந்த விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

    தலைமறைவானவர்களை பிடிக்க எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், பாலகிருஷ்ணன் தலைமையில் ஆரணியில் 200 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இச்சம்பவத்தால் ஆரணியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

    • தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    ஆற்று திருவிழா முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சாமி, கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமி கலசப்பாக்கம் செய்யாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலமான உத்திராயணம் காலத்தை முன்னிட்டு ரதசப்தமி நாளான நேற்று கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா என்னும் தீர்த்தவாரி நடைபெற்றன.

    இவ்விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மனுடன் நேற்று அதிகாலை கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு டிராக்டர் வாகனத்தில் புறப்பாடு செய்து திருவண்ணாமலையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவுக்கு சாலை மார்க்கமாகவே வந்தார்.

    அப்போது அண்ணாமலையாருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டனர். மேலும் கலசப்பாக்கம் செய்யாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள தென்பள்ளிப்பட்டு கிராம மக்களின் சார்பில் அண்ணாமலையாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன் பிறகு ஆற்றுத் திருவிழாக்காக அண்ணாமலையார் பெரிய ரிஷப வாகனத்தில் செய்யாற்றில் இறங்கத் தொடங்கினார். அப்போது ஆற்றின் வடகறையில் கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் இறங்கினார். செய்யாற்றில் இரண்டு சாமிகளும் நேருக்கு நேராக ஒரு சேர ஆற்றில் இறங்கி ஆனந்த நடனத்துடன் ஆடியபடியே உள்ளே இறங்கி வந்தனர்.

    பக்தர்களின் பரவசத்துடன் இரண்டு சாமிகளும் தென்கிழக்கு பகுதியை நோக்கி சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்துவிட்டு பின்பு செய்யாற்றில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் தனித்தனியாக அமர்ந்து அண்ணாமலையாரும், திருமாமுடீஸ்வரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்பு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றன.

    இவ்விழாவில் கலசப்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆற்று திருவிழாவை முடித்து கொண்டு அருணாசலேஸ்வரர் இன்று காலை திருவண்ணாமலை கோவிலுக்கு திரும்பினார்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் இன்று கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நித்தியானந்தா ஆசிரமம் அருகே கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கஞ்சா பறிமுதல்

    விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் ஆந்திராவில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவண்ணாமலையில் சாமியார் போல் வேடமணிந்து கஞ்சா விற்றது தெரிந்தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவை கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    போளூர் மின்விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட போளூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் போளூர் வடக்கு பிரிவில்-4 அத்திமூர் பிரிவில்- 3, வடமாதிமங்கலம் பிரிவில்- 4 என11 டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு போளூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமரன் தலைமை தாங்கினார்.

    போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய 11 டிரான்ஸ்பர்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் மின்வாரிய செயற்கு பொறியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×