என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரணியில் போலீசுக்கு எதிராக கோஷமிட்ட விடுதலை சிறுத்தையினர் 10 பேர் கைது
- விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
- தலைமறைவானவர்களை பிடிக்க எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றிய அலுவலகம் முன்பு 4 கடைகள் உள்ளது.
அதில் ஒரு கடையில் ஆரணி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகமும், மற்றொரு கடையில் சின்னகண்ணு என்பவர் வாடகைக்கு உள்ளார்.
கடந்த 1-ந் தேதி விடுதலை சிறுத்தை நிர்வாகிகளுக்கும், சின்னகண்ணுவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருதரப்பினரும் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இருதரப்பினரையும் விசாரணைக்கு வரும்படி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அழைத்தனர்.
இதில், விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட 50-க்கும் மேற்பட்டோரும், சின்னகண்ணு தரப்பில் சிலரும் ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டி கேவலமாக பேசியுள்ளார். இது 'வாட்ஸ்ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோரை கடந்த 8ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கரை, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்று ஆரணியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
டவுன் போலீஸ் நிலையம் அருகே ஊர்வலம் சென்றபோது, போலீசாரை கண்டித்து ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.
இச்சம்பவம் சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலானது. இது போலீசார் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆரணிக்கு விரைந்து வந்தார். டவுன் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அனுமதி இன்றி கூட்டம் கூடுவது, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பது, மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விடுதலை சிறுத்தை பிரமுகர்கள் பொன்னுரங்கம், கார்த்தி, பாக்யராஜ், வினோத் உட்பட 10 பேரை கைது செய்தனர்.
இதையறிந்த விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
தலைமறைவானவர்களை பிடிக்க எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், பாலகிருஷ்ணன் தலைமையில் ஆரணியில் 200 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவத்தால் ஆரணியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.






