என் மலர்
திருவள்ளூர்
- தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
- மனமுடைந்த கோகுல் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியம்மா. இவரது மகன் கோகுல் (வயது 24) வெல்டரான இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று இரவு வழக்கம்போல் கோகுல் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனை குட்டியம்மா கண்டித்தார்.இதனால் தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோகுல் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்
செங்குன்றம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். ரவுடிகள் பட்டியலை சேகரித்து அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த மாதம் சோழவரம் அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடிகள் முத்துசரவணன், சதீஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பெரும்பாலான ரவுடிகள் தங்களது செயல்களை குறைத்து தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ரவுடிகளை அவர்களது செயல்பாடுகளை பொறுத்து ஏ, பி, சி என்று 3 பிரிவாக பிரித்து உள்ளனர். இதில் மொத்தம் சுமார் 1500 ரவுடிகளின் பெயர்கள் போலீசாரிடம் உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து நேற்று இரவு செங்குன்றம், அம்பத்தூர், எண்ணூர், மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் ராஜாராபர்ட், பரமானந்தம் மற்றும் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரவுடிகளின் பட்டியலுடன் அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சோதனை செய்தனர்.
ஏ பிளஸ் ரவுடியான சுருட்டை வெங்கடேசன், குள்ள கார்த்தி, பாம்பு நாகராஜ், ஏ பிரிவை சேர்ந்த பாம் ராஜேஷ், அருண், இளந்தமிழன், தினேஷ் உள்ளிட்ட ரவுடிகள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று வேட்டை நடந்தது. 100 ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இரவு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது.
சோதனையின் போது ரவுடிகளின் குடும்பத்தினரிடம், ரவுடியின் இருப்பிடம் மற்றும் தற்போது அவர்களது செயல்பாடுகள் பற்றி போலீசார் கேட்டறிந்தனர். மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இந்த வேட்டையின் போது ரவுடிகள் யாரும் சிக்கவில்லை. எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரவுடிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும். அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் தொல்லை இருந்தால் பொதுமக்கள் போலீசில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கே. ஜெயக்குமார் எம். பி., மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம். பி., மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.
அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை தலைவராக கொண்டக்கரை ஆர்.ஜெயபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- பஸ் நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்க சென்றனர்.
- மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த அண்ணாமலை சேரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் மனைவி மாலினியுடன் சேர்ந்து பொன்னேரியில் உள்ளவங்கியில் ரூ.2லட்சத்து 25 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்டில் வைத்து விட்டு அவர்கள் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
- வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருவாலங்காடு அடுத்த மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் மணவூர் ரெயில் நிலையம் அருகே மளிகைகடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.5600 ரொக்கம் மற்றும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணை பாக்கெட்டுகள், மளிகை பொருட்களை கொள்ளையர்கள் அள்ளி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
- எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.
அம்பத்தூர்:
சென்னை வில்லிவாக்கம் அண்ணா சத்யா நகர் பகுதியில் மதுபோதையில் கணவர் அடித்து உதைப்பதாக பெண் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணை தாக்கிய வாலிபர் வீட்டில் டிபன் பாக்ஸ்களை அடுக்கி வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்ட போலீசார் டிபன் பாக்சுகளை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் டிபன் பாக்சுக்குள் குண்டுகள் உள்ளது திறந்தால் வெடித்துவிடும் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பின் வாங்கினார்கள். அதற்குள் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்பதும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி என்பதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் டிபன் பாக்சை திறந்து பார்த்தனர். அப்போது டிபன் பாக்சுக்குள் 2 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டையில் இருந்து தனது எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.
ரவுடிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி வெளியில் செல்லும்போது டிபன்பாக்ஸ் குண்டுகளோடு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து ரவுடி கார்த்திக் சதி திட்டம் தீட்டும் நோக்கத்தில் சென்னையில் பதுங்கி இருந்தாரா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசா ரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
- அனல்மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.
- சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.
மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு புது நகரில் வல்லூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. மேலும் இது தேசிய அனல் மின் நிலையம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு முயற்சியாகும். இந்த அனல் மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.
இந்நிலையில் வல்லூர் அனல்மின் நிலையத்தில் ரூ.876 கோடி செலவில் மாசு கட்டுப்பாட்டு வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அனல் மின் நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.
தேசிய தலைநகர் அல்லது 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்கள் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் கடந்த 2022-ம் ஆண்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வல்லூர் அனல் மின் நிலையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இந்த அனல் மின் நிலையம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கூடுதல் கட்டுமான பணிகளை கருத்தில் கொண்டு செலவு தொகை சற்று அதிகமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாட்னா ஹம்சபர் ரெயில் முதியவர் மீது மோதியது.
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எண்ணூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த பாட்னா ஹம்சபர் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.
- போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் நரேந்திரன்(48). போலீஸ்காரரான இவர் திருமுல்லை வாயல் போலீஸ் நிலையத்தில் தனிப்படைபிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில நேற்று இரவு அவர் திருமுல்லை வாயல் ஏரிக்கரை அருகே சென்றார். அப்போது அங்கு 8 பேர் கும்பல் மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை நரேந்திரன் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.
இதனால் போதை கும்பலுக்கும் போலீஸ்காரர் நரேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. நரேந்திரன் சாதாரண உடையில் இருந்ததால் அவர் போலீஸ்காரர் என்று தெரியாமல் போதை கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.
உடனே போதை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே வந்தவர்கள் நரேந்திரன் படுகாயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். தற்போது அதே போல் மீண்டும் சம்பவம் நடந்து உள்ளது.
இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காவலரை தாக்கிய 8 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
- கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வெங்கடேசன் மிகவும் மனவருத்தம் அடைந்தார்.
- போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
திருவள்ளூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் பாக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேசன்(வயது45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து வெங்கடேசனுக்கு சென்னையில் வேலை பார்த்த போது திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலியை அழைத்து வந்து திருவள்ளூரை அடுத்த ராமதண்டலம் கிராமத்தில் தங்க வைத்து கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை, அவரது கணவர் சமாதானம் பேசி அழைத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வெங்கடேசன் மிகவும் மனவருத்தம் அடைந்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு ராம தண்டலம் ஏரி அருகே உள்ள கரிசூலை பகுதிக்கு வெங்கடேசன் வந்தார்.
திடீரென அவர் அங்கு போடப்பட்டிருந்த மின்விளக்கின் வயரை துண்டித்து அதனை பிடித்தபடி தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சினார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரம் என்பதால் வெங்கடேசன் இறந்து கிடந்தது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் வெங்கடேசன் மின்வயரை பிடித்தபடி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிகிச்சை பலனின்றி முகம்மது கபீர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகம்மது கபீர்(வயது 18). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடன் படிக்கு வியாசர்பாடியை சேர்ந்த மதன் (18). முகில் (18) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள கோனே நீர் வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமம் வழியாக சென்றபோது முன்னால் சென்ற கியாஸ்டேங்கர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பக்கவாட்டில் உரசியது.
இதில் முகம்மது கபீர் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் . அவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது கபீர் பரிதாபமாக இறந்தார். மதன், முகில் ஆகிய 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை பகுதியில் தனியார் கண்டெய்னர் யார்டு முனையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு பொன்னேரி-மீஞ்சூர் டி.எச். சாலையில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரம் லாரிகள் செல்வதற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சாலையின் குறுக்கே மழை நீர் கால்வாய் செல்வதால் அது அடைபட்டு அருகில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்றும் கூறி அப்பகுதி கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இது தொடர்பாக விசாரிக்க அதே பகுதியை சேர்ந்த 2 பேரை மீஞ்சூர் போலீசார் அழைத்து சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உத்தண்டி கண்டிகை அருகே பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.






