என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    திருத்தணி:

    திருத்தணி அருகே அம்மனேரி பகுதியில் ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஜெயவேலு, திருத்தணி அடுத்த பீரகுப்பம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார், பிரகாசம், பாணாவரம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகியோரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    • தமிழ்வாணன் 10-ம் வகுப்பு மாணவியிடம் நெருக்கமாக பழகினார்.
    • தமிழ்வாணன் காதல் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றது தெரிந்தது.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த விச்சூரை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் நெருக்கமாக பழகினார். இதனால் மாணவியின் பெற்றோர் வீட்டை காலி செய்துவிட்டு ஆண்டார் குப்பத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் தமிழ்வாணன் காதல் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனை கைது செய்து மாணவியை மீட்டனர்.

    • சென்னை விம்கோ நகர் காந்தி நகரை சேர்ந்தவர் பிரதீப்.
    • கோவிலில் உள்ள சக்தி மண்டபம் அருகே வந்தபோது அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார்.

    பெரியபாளையம்:

    சென்னை விம்கோ நகர் காந்தி நகரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 36). இவர் தனது குடும்பத்தினருடன் பெரியபாளையம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த சென்றார்.

    இந்த கோவிலில் உள்ள சக்தி மண்டபம் அருகே வந்தபோது அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காணாமல் போன தங்கச்சங்கிலி குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்த கீதா (39) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண், குழந்தையிடம் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும் அந்த பெண் அளித்த தகவலின் பேரில் போலீசார் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு் முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர், அவரது உத்தரவின் பேரில் போலீசார் கீதாவை புழல் சிறையில் அடைத்தனர்.

    • திருவள்ளூரை அடுத்த அயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்.
    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு் பின் முரணாக பதில் அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த அயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் திருவள்ளூர் தேரடியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரகாஷ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நகரின் மையப்பகுதிகளில் உள்ள கடைகள் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருவள்ளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு் பின் முரணாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதானவர் என்பதும் அவர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவனது நண்பர்களான மெய்யூர் கிராமத்தை சேர்ந்த தாஸ் (27) மற்றும் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (40) ஆகியோரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவது உறுதியானது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 7 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் லட்சுமிநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஸ்வரி.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் லட்சுமிநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஸ்வரி (வயது 54) இவரது மகள் தீபா. பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை தனது மகள் தீபாவுக்கு மகேஸ்வரி மதிய உணவை கொண்டு சென்று கொடுத்தார். பின்னர், செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மகேஸ்வரி மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக பலியானார்.

    இந்த விபத்து குறித்து மகேஸ்வரியின் கணவர் குணா வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் வாகன ஓட்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
    • பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இங்கிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் திருவள்ளூரைஅடுத்த திருவூர் அருகே பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்ட வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை.

    அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. உடல் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதையடுத்து பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாயமான சிறுவன் ராஜ் பால் பாக் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது.
    • மீட்கப்பட்ட ராஜ் பால் பாக்கிற்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தில் கொய்யா பண்ணை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொரியாபா குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜ் பால் பாக் (15).

    கடந்த 18-ந்தேதி பண்ணையில் இருந்து வெளியே சென்ற ராஜ் பால் பாக் பின்னர் திரும்பி வரவில்லை. அவன் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

    இதற்கிடையே மாயமான சிறுவன் ராஜ் பால் பாக் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது. போலீசார் அவனை மீட்டனர்.

    சம்பவத்தன்று தந்தை திட்டியதால் கோபம் அடைந்த அவன், பொன்னேரியில் இருந்து சென்ட்ரல் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் பெங்களூரு சென்று உள்ளான்.

    பின்னர் ரெயில் நிலையத்தில் இருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த அவனை பெங்களூரு போலீசார் விசாரித்து அங்குள்ள காந்தி ஆசிரமத்தில் சேர்த்து இருந்தது தெரிந்தது. மீட்கப்பட்ட ராஜ் பால் பாக்கிற்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • ஹரிப்பிரியா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • ஹரிப்பிரியா திடீரென வீட்டை விட்டு மாயமானார்.

    செங்குன்றம்:

    சென்னை அடுத்த புழல் காவாங்கரை அழகிரி தெருவை சேர்ந்தவர் குமார். கார் டிரைவர். இவருடைய மகள் ஹரிப்பிரியா (வயது 15). இவர் செங்குன்றத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஹரிப்பிரியா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிப்பிரியா நேற்று காலை திடீரென வீட்டை விட்டு மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் புழல் ஏரி ஜோன்ஸ் டவர் அருகே சிறுமி பிணம் ஒன்று மிதப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, இறந்து கிடப்பது மாயமான ஹரிப்பிரியா என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹரிப்பிரியாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சப்-கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெ.மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் தமிழ்ச்செல்வம், சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பால்வளத்துறை சா.மு. நாசர், கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 497 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினர்.

    பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆப்தாபேகம், சமீமாரஹீம், கல்பனாபார்த்திபன், அபிராமி, ஜீவா, கோகுலகிருஷ்ணன், திருபுரசுந்தரி, சுமலதாநரேஷ், இந்துமதி, கோல்ட் மணி, வெங்கடேசன், ஒன்றிய திமுக செயலாளர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் செட்டி, ஒன்றிய பிரதிநிதி மோகன்பாபு, தலைமை ஆசிரியர்கள் லோகநாத், சுலோச்சனா மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
    • கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 1676 பேண்ட் துணிகள் லாரி டிரைவர் கவுரி முருகன் குறைவாக ஒப்படைத்து இருப்பது விசாரணையில் தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு காந்திப்பேட்டையில் தனியார் துணி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் உள்ள கம்பெனியின் கிளைக்கு லாரி மூலம் பேண்ட் துணி ஏற்றி அனுப்பி வைப்பது வழக்கம்.

    அந்த லாரியை கடந்த 15 ஆண்டுகளாக காந்திப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கவுரி முருகன் என்பவர் ஓட்டிச் செல்வார். ஆனால் காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 1676 பேண்ட் துணிகள் லாரி டிரைவர் கவுரி முருகன் குறைவாக ஒப்படைத்து இருப்பது விசாரணையில் தெரிந்தது.

    இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் அருள்ஜோசப் மப்பேடு போலீசில் டிரைவர் கவுரி முருகன் மீது புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறுமி டானியாவுக்கு இன்று காலை அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
    • அறுவை சிகிச்சையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார். இந்த நிலையில் 3½ வயதுக்கு பின்னர் டானியாவின் முகத்தில் தோன்றிய சிறிய கட்டி அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

    பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் சிறுமி டானியாவுக்கு அரியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல டானியாவின் ஒரு பக்க முகம், முழுவதும் சிதையத் தொடங்கியது.

    இதனால் பள்ளியிலும் டானியாவிடம் மற்ற சிறுமிகள் பாகுபாடு காட்டியதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் டானியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான பண வசதி இல்லை. அவருக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த சில நாட்களாக டானியாவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இன்று காலை 8 மணிக்கு சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னதாக அறுவை சிகிச்சைக்கு செல்லும் சிறுமி டானியாவை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து நம்பிக்கையூட்டி பேசினார். அவருக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    அப்போது மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், மோரை ஊராட்சி தலைவர் திவாகர், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் துரை வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பின்னர் சிறுமியின் முகம் பழைய நிலைக்கு திரும்பும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து சிறுமி டானியாவின் தந்தை ஸ்டீபன் ராஜ் கூறியதாவது:-

    எனது குழந்தையின் இந்த நோய் பாதிப்பால் நான் பல்வேறு கஷ்டங்களை அடைந்தேன். ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவு செய்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. தற்போது என் குழந்தைக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை இன்று நடைபெறுகிறது.

    இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த முகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    அறுவை சிகிச்சை முடித்து ஒரு வாரத்துக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து டானியா வீடு திரும்ப இருக்கிறாள்.

    இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • அந்தோணி ராஜூக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
    • அந்தோணி ராஜ் நேற்று குடித்துவிட்டு வந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து ஆரோக்கியம்மாள் அதே அந்தோனியார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு காலை சென்றுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மப்பேடு அந்தோனியார் புரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (37). பெயிண்டர். இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (30). இவர்களுக்கு சஞ்சனா (9), யஸ்வந்த் (7) எனஇரண்டு குழந்தைகள் உள்ளன.

    அந்தோணி ராஜூக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்தோணி ராஜ் குடித்துவிட்டு வந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து ஆரோக்கியம்மாள் அதே அந்தோனியார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு காலை சென்றுள்ளார்.

    மீண்டும் இரவு 7.30 மணி அளவில் வந்து பார்த்தபோது வீட்டில் உள்புறம் தாழ்ப்பால் போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியம்மாள் அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உத்திரத்தில் கணவன் அந்தோணி ராஜ் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு சுங்குவார்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். ஆனால் ஏற்கனவே அந்தோணி ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து மப்பேடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×