என் மலர்
திருவள்ளூர்
- திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்.
- திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் தனது சகோதரியின் மகள் வேதவள்ளி (வயது 19) என்பவரை சிறுவயதில் இருந்தே தனது வீட்டில் வளர்த்து படிக்க வைத்து வந்தார்.
இந்த நிலையில் வேதவள்ளி திருமணத்திற்கு உறவினர் மாப்பிள்ளையை பார்த்ததாக கூறப்படுகிறது. அதற்கு வேதவள்ளி மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்றும், சிறிது காலம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக மோகனிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி வீட்டில் உள்ள குளியலறையில் வேதவள்ளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேதவள்ளியை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் வேதவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த வேதவள்ளி சிறுவயதிலே தாய், தந்தையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் விரட்டி பிடித்தனர்.
- 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர், வானகரம் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் விரட்டி பிடித்தனர். அவர்கள் கொரட்டூர் பகுதியை சேர்ந்த விஜய குமார், ஜெகதீசன், அறிவழகன் ஆகியோர் என்பதும், அம்பத்தூர் வானகரம் சாலை, மண்ணூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள்.
திருவொற்றியூர்:
சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது26). இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ராஜா முகமது தனது மாமனார் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் சென்றனர். அவர்கள் ராஜா முகமதுவை கைது செய்தனர்.
பின்னர் அவரை மணவாளநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது ராஜா முகமது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
கைதான ராஜா முகமது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். அதன் பிறகு அவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களையும் இணையதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்த தகவல்களை பார்த்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சவூதி அரேபியாவில் இருந்து அவரை தொடர்பு கொண்டனர். இதற்கிடையே ராஜா முகமது திருவள்ளூரில் மாமனார் வீட்டில் தங்கி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
ஆனாலும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலேயே இருந்தார். சிக்னல் என்ற தடை செய்யப்பட்ட செயலி மூலம் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. கறிக்கடையில் வேலைபார்க்கும்போது அவர் அடிக்கடி செல்போனிலேயே பேசிக்கொண்டு இருப்பார்.
இதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் கைது செய்தனர்.
மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் 18 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் ராஜா முகமது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் இருந்து ராஜா முகமதுவுடன் தொடர்பு கொண்டு பேசிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவரை பயங்கரவாத அமைப்பில் சேர வருமாறு அழைத்தனர். அதற்காக சவூதி அரேபியா வருவதற்கான பாஸ்போர்ட், விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவரது உத்தரவின்பேரில் ராஜா முகமது புழல் சிறையில் அடிக்கப்பட்டார்.
- கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- மதகு கிணறுகளை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஊத்துக்கோட்டை:
பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 800 கன அடி வீதம் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் புழல், செம்பரக்கம் ஏரிகள் முழுவதுமாக நிரம்பி விட்டதால் கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசை கேட்டுக்கொண்டனர்.
இதனை ஏற்று ஜூலை 1-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. ஜூலை 20-ந் தேதி தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வு கூடம் உள்ளது. இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் மதகு கிணறுகள் சேதமடைந்துள்ளன.
இந்த மதகு கிணறுகளை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் மதகுகள் சீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23.95 அடியாக பதிவானது. ஏரியில் வெறும் 702 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 235 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 40 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- தரைப்பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- தரைப்பாலம் மூழ்கிவிட்டால் வெள்ளம் குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனப்பன் சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூரில் கடலில் கலக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவது வழக்கம்.
இந்த தரைப்பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தரைப்பாலம் மூழ்கிவிட்டால் வெள்ளம் குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.11.30 கோடி ஒதுக்கியது.
இந்த நிதியை கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.கொரோனா தொற்று பரவல் காரணமாக இடையில் பணிகள் நடைபெறவில்லை. பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் பணிகள் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 180 மீட்டர் நீளத்தில், 9.50 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க உள்ளனர். பாலத்தை 8 மெகா தூண்கள் தாங்கி நிற்கும். வருகிற மார்ச் மாதத்துக்குள் புதிய பாலப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பட்டாபிராமில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரான ராமுவை போலீசார் கைது செய்தனர்.
- ராமு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி:
திருவேற்காடு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 22-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்திய போது திருவேற்காடு செல்லியம்மன் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வரும் 2 மனைவிகளின் கணவரான நந்தகுமார் (53) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
மேலும் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி அங்கு எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு பின்னர் மாணவி வீடு திரும்பினார். இது குறித்து போலீசார் மாணவியிடம் விசாரணை செய்தபோது டிரைவர் நந்தகுமார் வார்த்தை கூறி அடிக்கடி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. தற்போது அவர் மீண்டும் மாணவியை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து இந்த வழக்கு போரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த நந்தகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நந்தக்குமாருக்கு 2 மனைவிகளும், 4 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பட்டாபிராமில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரான ராமுவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- கடந்தவாரம் விவசாயிகள்-அதிகாரிகளிடையே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- கற்களை அதிகாரிகளின் முன்னிலையில் தரமற்ற நிலையில் இருப்பதாக உடைத்து காண்பித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி ஆரணி ஆற்றின் லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் மழைநீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்கும் வகையில் காட்டூர், தத்தை மஞ்சி ஏரிகளை இணைத்து நீர் தேக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ரூ.62 கோடியே 36 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இதில், ஏரியின் மதகு தடுப்புச் சுவரின் உயரத்தை 4 அடிக்கு உயர்த்தி கட்டியதால் உபரி நீர் வெளியேற முடியாமல் கிராமத்துக்குள் மழை நீர் புக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வேலூர் அ. ரெட்டிபாளையம், அனுப்பம்பட்டு, தடபெரும் பாக்கம், மனோபுரம், ஏருப்பல்லிக்குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயமும், ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் அபாயம் இருப்பதாகவும் கிராமமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக கடந்தவாரம் விவசாயிகள்-அதிகாரிகளிடையே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் ஆர்.டி.ஓ. காயத்ரி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் மதகு கரைகளை ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் கூறும்போது, ஏரியின் உபரி நீர் வெளியேறும் தடுப்பு சுவர் உயரம் ஏற்கனவே இருந்த அளவை விட தற்போது 4 அடி உயரம் அதிகமாக உயர்த்தி கட்டியதால் உபரி நீர் வெளியேறாமல் பயிர்கள் நீரில் மூழ்கி விடும் என்று தெரிவித்தனர்.
மேலும் ஏரியின் கரைகள் தரமற்று கட்டப்படுவதாக கூறி ஆரணி ஆற்றின் கரையில் போடப்பட்டு இருந்த கற்களை பெயர்த்து கையில் எடுத்து வந்து அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த கற்களை அதிகாரிகளின் முன்னிலையில் தரமற்ற நிலையில் இருப்பதாக உடைத்து காண்பித்தனர். கட்டுமானத்துக்கு ஏரி மணலை எடுத்து பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.டி.ஓ. காயத்ரி மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக வருகிற திங்கட்கிழமைக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது கவிதா மனோகரன், ஜெகநாதன், துரை, அம்பிகாபதி, முருகன், பார்த்திபன், புஷ்பராஜ், தேவராஜ், உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இருந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வரும் நாட்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரித்து உள்ளனர்.
- வடசென்னையை பொருத்தவரை காற்று மாசு அதிகமாக உள்ளது.
- வட சென்னை பகுதிகளில் இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து காற்று மாசுவை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர்:
சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி நச்சு வாயு கசிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகள் உள்பட வட சென்னையில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த 3 பகுதிகளிலும் நச்சு வாயுவை வெளிப்படுத்தும் 24 நிறுவனங்களில் இருந்து அடிக்கடி நச்சு வாயு கசிகிறது. இந்த நச்சு வாயு காற்றில் கலப்பதால் காற்றும் நச்சாகிறது. இதை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி கியாஸ் கசிவு ஏற்பட்டது போன்ற உணர்வு தென்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் இதை பெண்கள் உணர்ந்தனர்.
நள்ளிரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்யும் நேரங்களிலும், அதிகாலையில் பனி தோன்றும் நேரத்திலும் இந்த வாடை வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
விசாரணையில் இந்த வாயு கசிவு தொழிற்சாலைகளில் இருந்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த வாயு கசிவால் அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கு மயக்கம், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மணலியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது எண்ணெய் நிறுவனத்தில் சல்பர் ஆக்சைடு அளவுக்கு அதிகமாக சேர்த்ததால் நச்சு வாயு வெளியேறி காற்றில் கலந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் சல்பர் ஆக்சைடு குறைவாக சேர்க்கப்பட்டது. அதன்பிறகு 2 வாரம் வரை அதே பாதிப்பு இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பாதிப்பு குறைந்தது.
ஆனாலும் மற்ற நிறுவனங்களில் இருந்தும் அவ்வப்போது அம்மோனியா உள்ளிட்ட வாயு வெளியேறி வருகிறது. அங்குள்ள உரத்தொழிற்சாலையில் இருந்தும் அவ்வப்போது நச்சுவாயு கசிகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் மழை பெய்ததால் இந்த நச்சு வாயு காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
பெரும்பாலும் வட சென்னை பகுதிகளில் இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து காற்று மாசுவை ஏற்படுத்தி உள்ளது. மழை, பனி நேரங்களின்போது அதை பொதுமக்கள் உணருகிறார்கள். இதனால் சுவாச பிரச்சினைகள் தவிர கை மற்றும் உடலில் தோல் அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
வடசென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதால் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சுவாச பிரச்சினை, நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியர் டாக்டர் வினோத்குமார் கூறியதாவது:-
வடசென்னையை பொருத்தவரை காற்று மாசு அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகளால் காற்று மாசு ஏற்படுவது ஒரு புறம் இருக்க கட்டிட பணிகள், பழைய கட்டிடங்களை இடித்தல், வாகன பெருக்கம் காரணமாக ஏற்படும் புகை ஆகியவற்றின் காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றுக்கு முன்பு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சுவாச பிரச்சினை, நுரையீரல் பாதுகாப்பு காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அது தற்போது 300 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, சுவாச பிரச்சினை, மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு காரணமாக தினமும் 30 பேர் முதல் 40 பேர் வரை வருவார்கள். ஆனால் தற்போது தினமும் 150 பேர் வருகிறார்கள்.
கொரோனா தொற்றால் முழு அடைப்பின்போது பெரும்பாலான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவிட்டது.
ஆனால் சில மாதங்களாக அனைவருமே வெளியே வரத்தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசு காரணமாக அவர்கள் சுவாச பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன தொழில் நுட்ப கருவிகள் உள்ளன. இதன்மூலம் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 1-வது நிலையில் உள்ள 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
- விநாயர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- திருவள்ளூர் காக்களூர் ஏரி, சீமாவரம் கொசத்தலையாறு ஆகிய 17 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விதிமுறைகள் படி கரைக்க வேண்டும்.
திருவள்ளூர்:
விநாயர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் சிலைகளை 17 இடங்களில் கரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதை தொடர்ந்து விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.
திருவள்ளூர் புட்லூர் ஏரி, எம்.ஜி.ஆர். நகர் ஏரி, மப்பேடு கூவம் ஈசா ஏரி, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்துக்கோட்டை குளம், ஊத்துக்கோட்டை சித்தேரி, ஊத்துக்கோட்டை கொசஸ்தலையாறு, திருத்தணி காந்தி ரோடு குளம், ஆர்.கே பேட்டை வண்ணான் குளம்.
பள்ளிப்பட்டு கரிம்பேடு குளம், பொதட்டூர்பேட்டை பாண்டரமேடு ஏரி, திருத்தணி பராசக்தி நகர் குளம், கனகம்மா சத்திரம் குளம்,திருப்பாலைவனம் புலிகாட் ஏரி, கும்மிடிப்பூண்டி ஏழுகண் பாலம், பக்கிங்காம் கால்வாய், திருவள்ளூர் காக்களூர் ஏரி, சீமாவரம் கொசத்தலையாறு ஆகிய 17 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விதிமுறைகள் படி கரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வீட்டில் 90 மூட்டைகளில் 4.5 டன் ரேசன் அரிசி மற்றும் 900 கிலோ கோதுமை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- ரேசன் அரிசி, கோதுமை மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருநின்றவூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் சுந்த ராம்பாள், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் திருநின்றவூரை அடுத்த நெமிலிச்சேரி , பிரகாசம் நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர்.
அப்போது அந்த வீட்டில் 90 மூட்டைகளில் 4.5 டன் ரேசன் அரிசி மற்றும் 900 கிலோ கோதுமை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ரேசன் அரிசி பதுக்கல் தொடர்பாக புளியந்தோப்பு பி.கே காலனியை சேர்ந்த சந்திரசேகர்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர், ரேசன் கடையில் அரிசி, கோதுமைகளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி அதனை வாடகைக்கு எடுத்த வீட்டில் பதுக்கி வைத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து ரேசன் அரிசி, கோதுமை மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
- இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கோலப்பன்சாவடி மகாலட்சுமி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த வசந்தகுமார், தீபக், வம்சி, தமிழரசன், திருவூரைச் சேர்ந்த சுதன் என்பதும் 1 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரிந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளுரை அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கோலப்பன்சாவடி மகாலட்சுமி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் சோதனை நடத்தினர். அவர்கள், சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், தீபக், வம்சி, தமிழரசன், திருவூரைச் சேர்ந்த சுதன் என்பதும் 1 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






