search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற முடிவு
    X

    பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற முடிவு

    • கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • மதகு கிணறுகளை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 800 கன அடி வீதம் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் புழல், செம்பரக்கம் ஏரிகள் முழுவதுமாக நிரம்பி விட்டதால் கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசை கேட்டுக்கொண்டனர்.

    இதனை ஏற்று ஜூலை 1-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. ஜூலை 20-ந் தேதி தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வு கூடம் உள்ளது. இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் மதகு கிணறுகள் சேதமடைந்துள்ளன.

    இந்த மதகு கிணறுகளை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    மேலும் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் மதகுகள் சீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23.95 அடியாக பதிவானது. ஏரியில் வெறும் 702 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 235 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 40 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×