என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிதாக கட்டப்படும் ஏரிக்கரையின் கல்லை பெயர்த்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
- கடந்தவாரம் விவசாயிகள்-அதிகாரிகளிடையே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- கற்களை அதிகாரிகளின் முன்னிலையில் தரமற்ற நிலையில் இருப்பதாக உடைத்து காண்பித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி ஆரணி ஆற்றின் லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் மழைநீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்கும் வகையில் காட்டூர், தத்தை மஞ்சி ஏரிகளை இணைத்து நீர் தேக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ரூ.62 கோடியே 36 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இதில், ஏரியின் மதகு தடுப்புச் சுவரின் உயரத்தை 4 அடிக்கு உயர்த்தி கட்டியதால் உபரி நீர் வெளியேற முடியாமல் கிராமத்துக்குள் மழை நீர் புக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வேலூர் அ. ரெட்டிபாளையம், அனுப்பம்பட்டு, தடபெரும் பாக்கம், மனோபுரம், ஏருப்பல்லிக்குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயமும், ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் அபாயம் இருப்பதாகவும் கிராமமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக கடந்தவாரம் விவசாயிகள்-அதிகாரிகளிடையே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் ஆர்.டி.ஓ. காயத்ரி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் மதகு கரைகளை ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் கூறும்போது, ஏரியின் உபரி நீர் வெளியேறும் தடுப்பு சுவர் உயரம் ஏற்கனவே இருந்த அளவை விட தற்போது 4 அடி உயரம் அதிகமாக உயர்த்தி கட்டியதால் உபரி நீர் வெளியேறாமல் பயிர்கள் நீரில் மூழ்கி விடும் என்று தெரிவித்தனர்.
மேலும் ஏரியின் கரைகள் தரமற்று கட்டப்படுவதாக கூறி ஆரணி ஆற்றின் கரையில் போடப்பட்டு இருந்த கற்களை பெயர்த்து கையில் எடுத்து வந்து அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த கற்களை அதிகாரிகளின் முன்னிலையில் தரமற்ற நிலையில் இருப்பதாக உடைத்து காண்பித்தனர். கட்டுமானத்துக்கு ஏரி மணலை எடுத்து பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.டி.ஓ. காயத்ரி மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக வருகிற திங்கட்கிழமைக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது கவிதா மனோகரன், ஜெகநாதன், துரை, அம்பிகாபதி, முருகன், பார்த்திபன், புஷ்பராஜ், தேவராஜ், உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இருந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வரும் நாட்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரித்து உள்ளனர்.






