என் மலர்
திருவள்ளூர்
- கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
- இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் திடீரென பஸ் நிலையத்தில் குடிபோதையுடன் உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் கையில் மண்வெட்டியுடன் பயணிகளை மிரட்டியபடி பஸ் நிலையத்தில் கடைகளுக்கு சென்று மிரட்டல் விடுத்தார்.
முடிதிருத்தும் கடை நடத்தி வந்த இளையராஜா (34) பெட்டிக்கடை நடத்தி வந்த பிரபுராஜ் (45) ஆகியோரது கடைகளின் முன்பக்க கண்ணாடிகளை மண்வெட்டியால் உடைத்தார்.
கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பொன்னேரி போலீஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் இன்க்டஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். போலீசை கண்டதும் வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் மிரட்டலில் ஈடுபட்டது பர்மா நகரை சேர்ந்த விஜய் (24) என்பது தெரிய வந்தது தப்பி ஓடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது.
- ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
திருவள்ளூர்:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிருஷ்ணாபுரம் பகுதியில் அம்மம்பள்ளி அணை உள்ளது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது.
இதனையடுத்து ஆந்திர மாநில அரசு கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 170 கன அடி உபரி நீரை இரண்டு மதகுகள் வழியாக திறந்துவிட்டது.
தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலங்களைக் கடக்கும்போது பாதுகாப்பாக கடக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரானது பூண்டி நீர் தேக்கத்தை விரைவில் வந்தடையும். இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பள்ளிப்பட்டு சுற்றுப்புற பகுதியான வெளியகரம், நெடியம், சாமந்த வாடா தரைப்பா லத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க முயல வேண்டாம். மேலும் பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
- செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து, கடல் போல் காட்சியளிக்கிறது.
பூந்தமல்லி:
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
இதனால் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து பலமடங்கு அதிகரித்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் நீர்வரத்து மணிக்கு 2177 கன அடியாக இருந்து வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில், தற்போது 21.04 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2864 மில்லியன் கனஅடியாகவும் தண்ணீர் உள்ளது.
ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
தற்போது வரை நீர் வரத்து அதிகரித்து வருவதால் 2-வது நாளாக நேற்று 114 கனஅடி அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்படும் எனவும் ஏரியை கண்காணித்து வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து, கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் பாதுகாப்பு பணி யில் போலீசார் ஈடுபட்டுள் ளனர்.
- ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 2005 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
- அணையின் பாதுகாப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு 7 மணியளவில் கனமழை கொட்ட ஆரம்பித்து விடிய விடிய கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2681 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 2005 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் 2508 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
நீர்வரத்து 2795 கன அடியாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 554 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தாக 287 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2864 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
அதேபோல் கண்ணன் கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
- பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட பொன்னேரி தாலுக்கா அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- ‘மாண்டஸ்’ புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றன.
- பசுமாற்றின் வயிற்றில் இருந்த கன்றுவும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு அருகே உள்ள கோவில்குப்பம் ஓசூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 45), வடிவேலு (35), மஞ்சுளா (34), மோனிஷா (27) ஆகியோருக்கு சொந்தமான 6 பசுமாடுகளும் நேற்று அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.
'மாண்டஸ்' புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றன. வயலில் மேயந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது அங்கு தாழ்வாக தொங்கி கொண்டிருந்த உயர்மின்அழுத்த மின்கம்பிகள் உரசியது.
இதில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 6 பசுமாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக செத்தன. இதில் கருவுற்று இருந்த ஒரு பசுமாடும் அடங்கும். அந்த பசுமாற்றின் வயிற்றில் இருந்த கன்றுவும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த மாடுகளின் உரிமையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த தங்கள் பசு மாடுகளை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்கள். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
- ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சியில், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாட்டில், 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஆர்.டி. உதயசூரியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பீர்பாட்டில் குத்தில் பலத்த காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் பீர்பாட்டிலால் அவரை குத்தியதாக ஐயப்பன் தெரிவித்து உள்ளார்.
அம்பத்தூர்:
ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நர்சிங் படித்து வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் அவரது தோழி ஒருவரை அழைத்த போது நம்பர் மாறுதலாகி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டினில் வேலைபார்க்கும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (23) என்பவருக்கு சென்றது.
இதனால் மாணவிக்கும் ஐயப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தனர்.
இந்தநிலையில் ஐயப்பன் திடீரென அந்த மாணவியை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி வெங்கடாபுரம் அருகே மாணவி நடந்துசென்றார். அப்போது அங்கு வந்த ஐயப்பன் மீண்டும் மாணவியிடம் காதலை ஏற்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டார். இதனை மாணவி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் பீர்பாட்டிலை உடைத்து மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றபொது மக்கள் ஐயப்பனை மடக்கி பிடித்து அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீர்பாட்டில் குத்தில் பலத்த காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் பீர்பாட்டிலால் அவரை குத்தியதாக ஐயப்பன் தெரிவித்து உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- காய்கறிகள் தேக்கமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் அதிகாலையில் மொத்த வியாபாரிகள் அதிரடியாக விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
- விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று 500 டன் அளவிலான பச்சை காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து பாதியாக குறைந்து விட்டது.
இதனால் காய்கறிகள் தேக்கமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் அதிகாலையில் மொத்த வியாபாரிகள் அதிரடியாக விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
உஜாலா கத்தரிக்காய் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.500-க்கும், வரி கத்தரிக்காய் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.300-க்கும், பீன்ஸ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.500-க்கும் சவ்சவ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.300-க்கும் விற்கப்பட்டது.
எனினும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று 500 டன் அளவிலான பச்சை காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதேபோல் புயல் அச்சம் காரணமாக பொதுமக்கள் வரத்து அதிகளவில் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
- சுதீப் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பெரும்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
பெரும்பாக்கம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் பொன்மாரில் உள்ள சாலையோர கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.இவரது மகன் சுதீப்(வயது15).அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறில் முருகனை பிரிந்து அவரது மனைவி சென்று விட்டார். வீட்டில் முருகனும், அவரது மகன் சுதீப் மட்டும் இருந்தனர்.
அப்போது முருகன், நான் சரியாக படிக்காததால் சாலையோர கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்கிறேன். நீயாவது படித்து முன்னுக்கு வா. ஊர்சுற்றாதே? என்று மகன் சுதீப்புக்கு அறிவுரை கூறி கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சுதீப் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி சாலை விரிவாக்க பணியை வேறு வழித்தடத்தில் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்தனர்.
- சாலை விரிவாக்கத்திற்கான இறுதி விசாரணை அழைப்பாணை விடுத்த நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தார் புகழேந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புது வாயல்-பழவேற்காடு சாலை 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்ட பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் பெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பழமைவாய்ந்த 5 கோயில்கள் அமைந்துள்ளது.
சாலையின் விரிவாக்க பணிக்காக இவை அகற்றப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி சாலை விரிவாக்க பணியை வேறு வழித்தடத்தில் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கான இறுதி விசாரணை அழைப்பாணை விடுத்த நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தார் புகழேந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இதில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம், பழமைவாய்ந்த கோவில்களை அகற்ற விடமாட்டோம் என்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
- தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முடுக்கிவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதுகாப்பு மையங்களில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன் உடன் இருந்தனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் திருவள்ளூர், பேரம்பாக்கம், திருவூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய் கண்டிகை, பொன்னேரி ஆகிய 9 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் இன்று காலை திருவள்ளூர் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வு செய்தார். அப்போது தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்ட கயிறு, ரப்பர் படகு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் கனமழையை எதிர்கொள்ள அனைத்து நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.






