என் மலர்
திருவள்ளூர்
- சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது.
- தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கூடுதல் ரெயில் சேவைகள் அதிகரிக்கப்படவில்லை.
தாம்பரம்:
சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, சென்ட்ரல்-திருவள்ளூர்-திருத்தணி- அரக்கோணம் மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த கட்டணம், விரைவு பயணம் என்பதால் புறநகர் பகுதி மக்கள் சென்னை நகருக்குள் வந்து செல்ல பெரும்பாலும் மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும்.
இதற்கிடையே தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீட்டர் தூரத்துக்கு 3-வது ரெயில் பாதை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் ரெயில் வேகமும் 100 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டது.
ஆனால் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கூடுதல் ரெயில் சேவைகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதையை பயன்படுத்தி கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இது குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு அதிக ரெயில்கள் உள்ளன. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரெயில் சேவை போதுமானதாக இல்லை.
இதனால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் தாம்பரம் வந்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. செங்கல்பட்டு-தாம்பரம் வரை காலை 7 மணி முதல் 9 மணி வரை குறைந்தது 3 அல்லது 4 மின்சார ரெயில் சேவைஇயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3-வது ரெயில் சேவை தயார் நிலையில் உள்ளதால் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆரணியில் உள்ள சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் முத்திரை தாள் குறைவு கட்டண சிறப்பு முகாம் நடைபெற்றது.
- சார் பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பத்திரப்பதிவில் கட்டண குறைவுகளை சரி செய்து கொண்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் முத்திரை தாள் குறைவு கட்டண சிறப்பு முகாம் நடைபெற்றது.
வருவாய் வசூல் சிறப்பு முனைப்பு இயக்கம் சார்பில் நடந்து.இந்த சிறப்பு முகாமில் ஆரணி மற்றும் ஊத்துக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பத்திரப்பதிவில் கட்டண குறைவுகளை சரி செய்து கொண்டனர். ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் 79 பயனாளிகள் கலந்து கொண்டு ரூ.55 லட்சத்து 71 ஆயிரத்து 90-ம், ஊத்துக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் 23 பயனாளிகள் கலந்து கொண்டு ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்து 190-ம் செலுத்தி தங்களது கட்டண குறைவுகளை சரி செய்து கொண்டனர்.ஆக மொத்தம் இம்முகாமில் 102 பயனாளிகள் கலந்து கொண்டு மொத்தம் ரூ.62 லட்சத்து 19 ஆயிரத்து 280 வசூல் ஆனது.டி.ஆர்.ஓ சாரதா ருக்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பத்திரபதிவுத்துறை தனித் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஆரணி சார்பதிவாளர் பாலாஜி,ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரப்பதிவு குறைவுகளை நிறைவு செய்தனர்.
- மங்களம் கிராமத்தில் புதுப்பாளையம் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினர்
- ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் இன்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.மங்களம் கிராமத்தில் புதுப்பாளையம் செல்லும் சாலையில் சென்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் அரிசி மூட்டைகளை கொண்டு சென்று கத்தரிக்காய் செடிகளுக்கு இடையே இறக்கி வைத்ததை பார்த்து சந்தேகம் அடைந்தனர். எனவே, அந்த இருவரையும் போலீசார் பிடித்து உரிய முறையில் விசாரித்தனர்.
அப்பொழுது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியை அதிரடியாக சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சுமார் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரேஷன் அரிசியுடன், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சின்ன நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ்(வயது28), ஆரம்பாக்கம் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(வயது32) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் ஆங்காங்கே சென்று ரேஷன் அரிசிகளை விலைக்கு வாங்கி கொண்டு வந்து கத்தரிக்காய் தோட்டத்தில் பதுக்கி வைப்பார்களாம். பின்னர், அதனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்வார்களாம்.
2 டன் ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திருவள்ளூரில் உள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க ஆரணி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- பின்னர் மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- பாக்கியவதி மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
மணவாளநகர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சாரதாம்பாள் நகரில் வசிப்பவர் பாக்கியவதி. இவர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.
இதுகுறித்து பாக்கியவதி மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ‘ரூட் தல’ மாணவர்களை எச்சரித்தாலும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
- உறுதிமொழி பத்திரத்தை மீறும் மாணவர்களை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்து உள்ளோம்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் பஸ்கள் மற்றும் ரெயில்களில் ஏராளமான மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகிறார்கள்.
குறிப்பாக அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் பஸ், ரெயில்களில் சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு வந்து செல்கிறார்கள். பஸ் மற்றும் ரெயில்களில் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களிடையே 'ரூட் தல' பிரச்சினை இருந்து வருகிறது. 'ரூட் தல'யாக இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக பல மாணவர்கள் உள்ளனர்.
இவர்களில் யார் பெரியவர்கள் என்பதில் அடிக்கடி மாணவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 'ரூட் தல' விவகாரத்தில் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். அதேபோல் கடம் பத்தூர் ரெயில் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 'ரூட் தல' பிரச்சினையில் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
கடந்த ஜனவரி மாதம் சமத்துவ பொங்கல் விழாவின்போது திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி -பாரிமுனை வழித்தடத்தில் பயணிக்கும் மாணவர்கள் மோதிக்கொண்டனர். 'ரூட் தல' விவகாரத்தில் மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து வருகிறார்கள். ஆனாலும் எச்சரித்த பிறகும் 'ரூட் தல' மாணவர்கள் மீண்டும் அட்டகாசம் செய்து வருகிறார்கள். பஸ் மற்றும் ரெயில்களில் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு நடைமேடைகளில் கத்தியால் தீப்பொறி பறக்க விட்டும் மாணவர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதனால் 'ரூட் தல'யாக செயல்படும் மாணவர்களின் பெற்றோர், வீட்டு முகவரி, உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
'ரூட் தல' மாணவர்களை எச்சரித்தாலும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களின் நடவடிக்கை குறித்து விளக்கி எச்சரிக்கை செய்து வருகிறோம். மாணவர்களி டம் உறுதிமொழி பத்திரமும் பெற்று வருகிறோம்.
'ரூட் தல' மாணவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்து விட்டோம். 'ரூட் தல' பிரச்சினையில் குறிப்பாக 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். அந்த கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து பேசி அவர்கள் மூலமாகவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 'ரூட் தல' மாணவர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே உறுதிமொழி பத்திரத்தை மீறும் மாணவர்களை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கிணற்றில் இருந்து இரவு முழுவதும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.
- பொதுமக்கள் சென்று பார்த்த போது கிணற்றில் நாய்கள் தத்தளித்து கொண்டிருந்தன.
பொன்னேரி சங்கர்நகர் ரெயில்வே சாலை குடியிருப்பு அருகில் காலியாக உள்ள பிளாட்டில் 10 அடி ஆழமுள்ள சரியாக மூடப்படாத கிணறு உள்ளது. கிணற்றில் இருந்து இரவு முழுவதும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. காலையில் பொதுமக்கள் சென்று பார்த்த போது கிணற்றில் நாய்கள் தத்தளித்து கொண்டிருந்தன. பொன்னேரி தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த போது 3 நாய்கள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர் பலகையில் கயிறு கட்டி ஏணி மூலமாக நாய்களை பத்திரமாக மீட்டனர்.
- தொழிலாளர் பயன்பாட்டிற்காக ஏ.டி.எம். மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
- சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ மொபைல், மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலைகளில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், சென்னை, ஆரம்பாக்கம், தடா, சத்தியவேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், எல்லாபுரம், பழவேற்காடு, சின்ன மாங்கோடு, சூளூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 24 மணி நேரமும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
தொழிலாளர் பயன்பாட்டிற்காக ஏ.டி.எம். மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏ.டி.எம்.மில் இன்று அதிகாலை சுமார் 1.45 மணிக்கு 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது தானியங்கி அலாரம் திடீரென ஒலித்துள்ளது.
சுதாரித்துக் கொண்ட ஏ.டி.எம்.மைய நிர்வாக அலுவலர் போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை நெருங்கும் போது 3 மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் 7 மணிக்கு விரைந்து வந்து மேற்கண்ட ஏ.டி.எம். மில் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக ரூ.23 லட்சம் தப்பியது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை விசாரித்து வருகின்றனர்.
- பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை அ.தி.மு.க. தூண்டி விடுவதாக அமைச்சர் நாசர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
- மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா முதல் கட்டமாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 6 ஒன்றியம், 2 நகரம், 2 பேரூர் கழக நிர்வாகிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படம் பொறித்த அடையாள அட்டையை 40 ஆயிரம் பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் பி.வி.ரமணமா நிருபர்களிடம் கூறியதாவது:
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை அ.தி.மு.க. தூண்டி விடுவதாக அமைச்சர் நாசர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சின்ன தீங்கு ஏற்பட்டாலும், அ.தி.மு.க. விட்டுக் கொடுக்காது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் வெகுண்டெழுந்து வெடி குண்டாக மாறுவோம்.
இந்த ஆட்சியில் பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பால் விலையை குறைப்பதாக சொல்லி மக்களையும், பால் உப பொருட்களின் விலையையும் எந்த அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தியதால் பால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பால் உற்பத்தி பெருமளவு குறைந்திருப்பதால் ஆவின் நிறுவனத்திற்கு பாலை கொடுக்க முடியாத நிலை உள்ளது, தனியார் பால் நிறுவனத்தை ஊக்கு விக்கும் வகையில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செயல்படுகிறார். பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வி அடைந்ததாக அறிவித்த அமைச்சர் நாசர் தற்போது பால் தட்டுப் பாடின்றி கிடைப்பதாக கூறுவதால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கைது செய்யப்பட்ட நிலவழகன் ஆரணி பேரூர் தி.மு.க. துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
- நிலவழகன் கைது செய்யப்பட்ட செய்தி ஆரணி பகுதியில் பரவியது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பருத்தி சூதாட்டம் எனப்படும் காட்டன் சூதாட்டம் மற்றும் 3 சீட்டு எனப்படும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவை கட்டுக்கடங்காமல் நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆரணி தபால் நிலையம் அருகே சென்றபோது பணம் வைத்து பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.1,110 மற்றும் துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவரது பெயர் நிலவழகன் என்ற செந்தில்குமார் (வயது39) என்றும் ஆரணி, எஸ்.பி. கோவில் தெருவில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர் ஆரணியைச் சேர்ந்த நித்யராஜ் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நிலவழகன் ஆரணி பேரூர் தி.மு.க. துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பொன்னரசி ஆரணி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் ஆவார். நிலவழகன் கைது செய்யப்பட்ட செய்தி ஆரணி பகுதியில் பரவியது.
இதனால் தி.மு.க.வைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஆரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆரணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து ஊத்துக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆரணி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அனைவரையும் கலைந்து செல்ல செய்தனர். கைது செய்யப்பட்ட நிலவழகனை வெங்கல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து அவரது உத்தரவின்பேரில் அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
- வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
தென்காசி அடுத்த வாசுதேவநல்லூைர சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் வெள்ளவேடு அடுத்த கொத்தியம்பாக்கம் அருகே உள்ள கம்மவார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் தங்கி கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- கலப்பு திருமணம் செய்ததால் உறவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆனந்தகுமாரும், மாலதியும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் தொடர்ந்து எதிர்ப்பு வந்தது. உறவினர்கள் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதனால் காதல் தம்பதி பயந்து வாழும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொலை மிரட்டலால் பயந்து போன ஆனந்தகுமார் வீட்டை விட்ட வெளியே செல்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மாலதி, தனது கணவர் ஆனந்தகுமார் மற்றும் 2 மகன்களுடன் வந்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அதில் கலப்பு திருமணம் செய்ததால் உறவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதனால் எனது கணவர் வீட்டை விட்டு வெளியே போகாமல் கடந்த 2 வருடமாக வீட்டில் உள்ளார். எனவே எனது கணவர், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2-வது நாளான நாளை காலை உற்சவர் தீர்த்தீஸ்வரர் அம்ச வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- 3-வது நாளான வருகிற 19-ந் தேதி இரவு அதிகார நந்தி சேவையும், 5ம் நாள் 21-ந் தேதி இரவு ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி தரிசனம், 23-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து உற்சவர் தீர்த்தீஸ்வரர் காலை 9 மணிக்கு சப்பரம் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார், இரவு சிம்ம வாகன வீதி உலா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.
தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பூத வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ராவணேஸ்வர வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.
2-வது நாளான நாளை காலை உற்சவர் தீர்த்தீஸ்வரர் அம்ச வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 3-வது நாளான வருகிற 19-ந் தேதி இரவு அதிகார நந்தி சேவையும், 5ம் நாள் 21-ந் தேதி இரவு ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி தரிசனம், 23-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான வருகிற 24-ந்தேதி இரவு தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






