search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PV Ramana"

    • பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை அ.தி.மு.க. தூண்டி விடுவதாக அமைச்சர் நாசர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
    • மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா முதல் கட்டமாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 6 ஒன்றியம், 2 நகரம், 2 பேரூர் கழக நிர்வாகிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படம் பொறித்த அடையாள அட்டையை 40 ஆயிரம் பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் பி.வி.ரமணமா நிருபர்களிடம் கூறியதாவது:

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை அ.தி.மு.க. தூண்டி விடுவதாக அமைச்சர் நாசர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

    மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சின்ன தீங்கு ஏற்பட்டாலும், அ.தி.மு.க. விட்டுக் கொடுக்காது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் வெகுண்டெழுந்து வெடி குண்டாக மாறுவோம்.

    இந்த ஆட்சியில் பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பால் விலையை குறைப்பதாக சொல்லி மக்களையும், பால் உப பொருட்களின் விலையையும் எந்த அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தியதால் பால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் பால் உற்பத்தி பெருமளவு குறைந்திருப்பதால் ஆவின் நிறுவனத்திற்கு பாலை கொடுக்க முடியாத நிலை உள்ளது, தனியார் பால் நிறுவனத்தை ஊக்கு விக்கும் வகையில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செயல்படுகிறார். பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வி அடைந்ததாக அறிவித்த அமைச்சர் நாசர் தற்போது பால் தட்டுப் பாடின்றி கிடைப்பதாக கூறுவதால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×