என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த, ஜாகீர்மங்கலம் கிராமத்தில் ஸ்ரீ பங்காரு அம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல் பூஜை முடிந்து கோவிலை பூட்டி சென்று இருந்தனர்.

    இந்தநிலையில் இன்றுகாலை கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டுப் புடவை மற்றும் பீரோவில் இருந்த பொருட்களை திருடி சென்று இருந்தனர். மேலும் அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 3 ஆண்டுகளாக உண்டியலில் இருந்த பணம் திறக்கப்பட்டு எண்ணப்படவில்லை. எனவே உண்டியலில் சுமார் ஒரு லட்சம் வரை பணம் இருந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புழல் அருகே 74 வயது முதியவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் அருகே உள்ள லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாசாமி (வயது 74). இவர் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக செங்குன்றம்- லட்சுமிபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அப்பாசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் அப்பாசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பாசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூண்டி ஏரியில் தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த அரும்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது50). மீனவர். இவர் அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றார்.

    அப்போது திடீரென மயங்கிய அவர் பூண்டி ஏரிக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.1.10 லட்சம் பணம், 1,400 கிராம் தங்க நகைகளுடன் சென்றபோது கொள்ளையடித்துள்ளனர்
    • கொள்ளை நடந்த இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

    பெரியபாளையம்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால் (வயது43) தங்க நகைகளை செய்து விற்பனை செய்யும் தொழில் அதிபர் ஆவார். இவர் சென்னை, நெற்குன்றத்தில் தங்கியிருந்து தங்க நகைகளை செய்யும் கடை ஒன்றையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார். மேலும், தங்க நகைகளை செய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு தங்களது பணியாட்கள் மூலம் சப்ளை செய்வாராம்.

    மேலும், நகைகளை கொடுத்து விட்டு ஒரு சிலரிடம் உடனடியாக பணத்தை பணியாளர்கள் பெற்று வருவார்களாம். ஒரு சிலரிடம் அடுத்த முறை செல்லும்போது பணத்தைப் பெற்றுக் கொள்வாராம். இந்நிலையில், இவரது கடையில் வேலை செய்யும் சோகன்(வயது 23), காலுராம்(வயது30) ஆகியோர் இன்று காலை நகைகளை சப்ளை செய்ய நெற்குன்றத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் புறப்பட்டு வந்தனர்.

    பூந்தமல்லி, நசரத்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளிட்ட கடைகளில் நகைகளை சப்ளை செய்து விட்டு வசூல் ஆன ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், 1,400 கிராம் (175 சவரன்) தங்க நகைகளையும் தங்களது பேக்கில் வைத்து எடுத்துக்கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றனர். தாமரைப்பாக்கம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மாகரல் பஸ் நிறுத்தத்துக்கும் காரணி பாட்டை கிராமத்துக்கு இடையில் இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நாலு பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    உடனடியாக அவர்கள் நாலு பேரும் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்திகளை எடுத்து சோகன் மற்றும் காலூராமை மிரட்டி அவர்களிடமிருந்த பேக்கை பறித்தார்களாம். இதனை தடுத்த சோகனை சரமாரியாக வெட்டினார்களாம். இதனால் அவரது இடது கையில் வெட்டுப்பட்டு இரத்தம் கொட்டியதாம். இதனால் மர்ம நபர்களிடம் பேக்கை கொடுத்து விட்டு திருடன், திருடன் என்று கத்தினார்களாம். உடனடியாக இது குறித்து வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்களாம்.

    சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து ராமேஸ்வர்லால் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் ஸ்பெஷல் டீம் என மொத்தம் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.
    • கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கவரைப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி (வயது 47), விவசாயி. கடந்த 5-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் சிலர் செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.

    இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட திருட்டு வழக்கு தொடர்பாக செல்போன் பயன்பாட்டை கண்காணித்து வீடு புகுந்து திருடிய வழக்கில் கொசவம்பேட்டையை சேர்ந்த சின்னதம்பி (27), ராஜகோபால் (42) மற்றும் சரவணன் (21) ஆகிய 3 பேரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    • தமிழகத்தில் உள்ள 90 குடிநீர் ஏரி, அணைகளில் மொத்தம் 224.297 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
    • சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு பெய்துவரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து உள்ளது எனினும் ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லை.

    எனவே வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி. இதில் தற்போது 2,999 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதேநாளில் 3 ஆயிரம் மி.கனஅடியை தாண்டி இருந்தது. இதேபோல் முக்கிய குடிநீர் ஏரியான புழலில் தற்போது 2,544 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன.அடி கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 2,956 மி.கன. அடி தண்ணீர் இருந்தது.

    இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, அணைகளில் கடந்த ஆண்டை விட தற்போது தண்ணீர் இருப்பு குறைந்த அளவிலேயே உள்ளது.

    மேட்டூர் அணையில் தற்போது 69 ஆயிரத்து 145 மி.கன.அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 93,470 மி.கன. அடி). ஆனால் கடந்த ஆண்டு 71,513 மி.கன. அடி தண்ணீர் இருந்தது.

    வைகை அணையில் கடந்த ஆண்டை விட தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து விட்டது. அணையில் தற்போது 2,535 மி.கன.அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (மொத்த கொள்ளளவு 6.091 மி.கன.அடி). கடந்த ஆண்டு 5,643 மி.கன.அடி தண்ணீர் இருந்தது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 5,500 மி.கன.அடி. இதில் 269 மி.கன. அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு 1,737 மி.கன. அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பவானி சாகர், அமராவதி, பெரியார் அணை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளிலும் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டை விட குறைந்தே காணப்படுகிறது.

    வரும் நாட்களில் வெப்பத்தின் காரணமாக தண்ணீர் இருப்பு மேலும் குறையும் என்பதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் சப்ளை செய்வதற்காக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது:-

    தமிழகத்தில் உள்ள 90 குடிநீர் ஏரி, அணைகளில் மொத்தம் 224.297 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது 135.087 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கோடைகாலம் முடியும் வரை தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். பருவமழையின் போது டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெரும்பாலான ஏரி, அணைகள் முழு கொள்ளளவை எட்டி இருந்தன.

    சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது. அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விளையாட்டாக பிரியரஞ்சன் சாகுவின் ஆசன வாயிலில் கம்ப்ரசரை நுழைத்தார்.
    • பிரியரஞ்சன் சாகுவை மீட்டு பாடியநல்லூரில் உள்ளதனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியரஞ்சன் சாகு பரிதாபமாக இறந்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரியரஞ்சன் சாகு(வயது23) என்பவர் ஹெல்பராக பணியில் சேர்ந்தார். இவர் குனிந்து அங்கிருந்த எந்திரங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சூப்பர்வைசரான ஆந்திர மாநிலம் பத்ராவரம் பகுதியைச் சேர்ந்த சாய்ராகவ்(22) என்பவர் விளையாட்டாக பிரியரஞ்சன் சாகுவின் ஆசன வாயிலில் கம்ப்ரசரை நுழைத்தார்.

    இதில் அதிவேகமாக வந்த காற்று பிரியரஞ்சன் சாகுவின் வயிற்றுக்குள் சென்றது. உடனே அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பிரியரஞ்சன் சாகுவை மீட்டு பாடியநல்லூரில் உள்ளதனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியரஞ்சன் சாகு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்பார்வையாளர் சாய் ராகவ்வை கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விளையாட்டாக செய்த செயல் வாலிபரின் உயிரை பறித்து விட்டது.

    • தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காததால் கோபத்தில் இருந்த விஜி திடீரென ஆஸ்பத்திரி மீது கல்வீசி தாக்கினார்.
    • திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    ஆவடி அடுத்த திருநின்றவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி. இவருடைய தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக விஜி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடன் விஜி இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் அரசுஆஸ்பத்திரியில் தனது தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விஜி அடிக்கடி அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தார். அவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் சமாதானப்படுத்தி உரிய சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காததால் கோபத்தில் இருந்த விஜி திடீரென ஆஸ்பத்திரி மீது கல்வீசி தாக்கினார். இதில் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.இதனால் அங்கிருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து விஜியை மடக்கி பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அதிகாலையில் பலத்த மழை கொட்டியது.
    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக அதிகளவு மழை பெய்தது.

    திருவள்ளூர்:

    தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிகழ்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அதிகாலையில் பலத்த மழை கொட்டியது. இன்று 4-வது நாளாக அதிகாலை கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக அதிகளவு மழை பெய்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பூண்டி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை பகுதியில் அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 33 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி-8

    பள்ளிப்பட்டு-28

    ஆர்.கே.பேட்டை-19

    சோழவரம்-5

    பொன்னேரி-4

    செங்குன்றம்-18

    ஜமீன்கொரட்டூர்-3

    பூந்தமல்லி-2

    திருவாலங்காடு-16

    பூண்டி-31

    தாமரைப்பாக்கம்-7

    திருவள்ளூர்-10

    ஊத்துக்கோட்டை-24

    ஆவடி-23.

    • கோயில் முழுவதும் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    • காலையில் மூலவருக்கு 18 வித பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரத்தினாங்கி சேவையில் மூலவர் அருள்பாலித்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலைத்துறையினர் ரூ.1.25 கோடி செலவில் புனரமைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த கோயிலுக்கு வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் தொடர்ந்து 6 வாரங்கள் வருகை தந்து முருகப்பெருமானை நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் வீடு கட்டுதல், கல்யாணம், வேலை வாய்ப்பு வியாபாரம் குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    ஆண்டுதோறும் மார்ச் மாதம் 3-வது ஞாயிற்றுகிழமை இத்திருக்கோயிலில் இலட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் முழுவதும் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் மூலவருக்கு 18 வித பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரத்தினாங்கி சேவையில் மூலவர் அருள்பாலித்தார்.

    இதனைத் தொடர்ந்து 18 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதிட இலட்சார்ச்சனை நடைபெற்றது. இதில்,சினிமா நடிகர் எஸ்.வி.சேகர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி தலைவர் ஜான்சிராணி ராஜா, துணைத்தலைவர் சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவ ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி. இலட்சுமணன், தக்கார் சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.செந்தில்குமார், உபயதாரர் கதிர்மணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.
    • செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் ஏரியில் மழை நீர் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து சென்னை நகரில் குடி நீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது. எனினும் இது குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.

    இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை நகருக்கு கூடுதலாக தண்ணீர் வினியோகிக்கும் வகையில் 2-வது ராட்சத் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இது கோயம்பேடு வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த 2-வது ராட்சத குடிநீர் குழாய், தேசிய நெடுஞ்சாலை எண்-4, பூந்தமல்லி புறவழிச் சாலையில் தரைக்கு அடியில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. சுமார் 6 மீட்டர் விட்டம் உடைய இந்த ராட்சத குழாய் பூமிக்கு அடியில் 6 மீட்டர் ஆழத்தில் அமைகிறது.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அமைக்கப்படும் ராட்சத குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை நகரில் கூடுதல் தண்ணீர் வழங்குவதற்காக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் மேம்பாலம் இருப்பதால் அந்த குழாய் அமைக்கும் பணி நேரடியாக எடுத்து வர முடியாது.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த பணி நடைபெற வில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 1.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக புது குழாய் அமைப்பதற்காக ரூ.7.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணி விரைவில் முடிவடைந்ததுடன் சென்னைக்கு கூடுதலாக 530 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் செயல் உறுப்பினர் ராஜகோபால் சங்கரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 2-வது ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிந்து உள்ளது. இன்னும் சில மாதங்களில் மீதி உள்ள பணியும் முடிந்து விடும் என்று தெரிகிறது.

    • தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின.
    • கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகரித்து வந்தது. அவை பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் தொல்லை ஏற்படுத்தி வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.

    மேலும் தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின. இதைத்தொ டர்ந்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நாய்களை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது, பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கருத்தடை நடைபெறுகிறது. இதுவரை 14 வார்டுகளில் நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. கருத்தடை செய்த நாய்கள் பாதுகாப்புடன் பிடித்த இடத்தில் கொண்டு சென்று விடப்படும். மீதமுள்ள 13 வார்டுகளில் நாய்கள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 26 நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்பட்டது என்றார்.

    ×