என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
    • பருவ மழைபோல் மேக மூட்டத்துடன் மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    திருவள்ளூர்:

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை திடீரென பலத்த மழை கொட்டியது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பருவ மழைபோல் மேக மூட்டத்துடன் மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இன்று காலையும் சாரல் மழையாக நீடித்தது.

    இதனால் குளிர்ச்சியான ரம்யமான சூழல் ஏற்பட்டது. வெப்பத்தின் தாக்கம் மேலும் குறைந்தது. மழைகாலம் போல் மாறியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டியது. திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக பள்ளிப்பட்டில் 30 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டர்) வருமாறு:-

    திருவள்ளூர்-20

    ஊத்துக்கோட்டை-23.

    இதே போல் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்தது.

    காஞ்சிபுரத்தில் இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜா பாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.

    மாமல்லபுரத்தில் நள்ளிரவில் இருந்து இன்று காலை 9மணி வரை கனமழை பெய்தது., பலத்த மழை காரனமாக, கிருஷ்ணர் மண்டபம் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் ஐந்துரதம் நுழைவு வாயில், கலங்கரை விளக்கம் சாலை, கடற்கரை சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சுற்றுலா பயணிகள் சிறமம் அடைந்தனர்.

    கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகாலையில் மாமல்லபுரம் வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள், அவர்கள் வந்த பஸ்களிலேயே முடங்கினர். பின்னர் மழை நின்றதும் அவர்கள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து சென்றனர்.

    • பொன்னேரி, மீஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை கொட்டியது.
    • மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை கொட்டியது. அப்போது மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் காட்டூர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. உரிய பராமரிப்பு இல்லாததால் டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி தீப்பற்றி எரிகின்றன. மேலும் மின்வயர்கள் பல இடங்களில் தாழ்வாக செல்கின்றன என்றனர்.

    • கன்னிகைப்பேர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம், வருவாய் துறை அலுவலக வளாகத்தில் உள்ள குளத்துமேடு பகுதியில் நடைபெற்றது.
    • வெங்கல் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அம்பேத்கர் நகரில் நடைபெற்றது.


    கன்னிகைப்பேர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம்,வருவாய் துறை அலுவலக வளாகத்தில் உள்ள குளத்துமேடு பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார்,துணை தலைவர் மேனகா சுப்பிரமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், புற காவல் நிலையம் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், ஊராட்சி செயலர் பொன்னரசு நன்றி கூறினார்.

    வெங்கல் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அம்பேத்கர் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் கணபதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.

    ஆலப்பாக்கம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஆலப்பாக்கம் காலனியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.முடிவில், ஊராட்சி செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • திருக்கண்டலம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
    • ஊராட்சியில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லிங்கதுரை,ஒன்றிய கவுன்சிலர் ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும், பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி

    பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி

    இதனால் ஊராட்சிமன்ற தலைவர் கூட்டத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறி சென்று விட்டார். இதனால் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இளைஞர்கள் ஊராட்சி செயலர் உமாநாத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக இளைஞர்களிடம் உறுதி அளித்தார். இதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    • விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அவர்களை சடலமாக மீட்டனர்.

    விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில நடைபெற்றது.
    • கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர், ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்க்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில நடைபெற்றது.

    திருத்தணி அடுத்த கோரமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர், ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்க்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்துகிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    • குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    பூந்தமல்லி:

    தெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சூரிய பிரபை, தங்க முலாம் அதிகார நந்தி சேவை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரமோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று தேரோட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. கோவில் அருகே அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர். பஜார் தெரு, பெரிய தெரு, துலுக்க தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக தேர் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஆங்காங்கே கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை பொதுமக்கள் வழங்கினர். தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு இந்த கோவிலில் கடைசியாக தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு, கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    • கும்மிடிப்பூண்டி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரம்பாக்கம்:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள மகாலிங்க நகரைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் செல்லன் (வயது 52). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்ற செல்லன் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மகன் பிரவீன் அவரை தேடி சென்றார். அப்போது அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் செல்லன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், செல்லனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.உஷா ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
    • பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டமந்திரி ஏ.என்.எம். தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சத்திய தாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொம்மி ராஜசேகர், வார்டு உறுப்பினர் புஷ்பா தசரதன், ஜான்சிராணி, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சசிகலா வரவேற்புரையாற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.உஷா ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பள்ளி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் அந்தோணி, அஷ்டலட்சுமி தாமோதரன், சற்குணம் ராஜீவ் காந்தி, வேலுமணி தேவதாஸ், ஆசிரியை குமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    ஊத்துக்கோட்டை:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் அறை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் வரவேற்பாளர் அறை புதிதாக கட்டப்பட்டது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போலீசார் பொது மக்களிடம் நண்பர்களாக பழக வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வழக்கு விசாரணையின் போதும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    தங்களது பகுதிகளில் சந்தேகிக்கும் படியான நபர்கள் யாராவது திரிந்தால் உடனே அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.

    மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் பேசினார். நிகழ்ச்சி யில் இன்ஸ் பெக்டர் சத்ய பாமா, சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2-வது நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில், முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த அலகில் ஏற்பட்டு உள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சிகிச்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.
    • மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார்.

    கடந்த 23-ந் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச்சென்றார்.

    அந்த நேரத்தில் அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவுக்கும் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார். இதில் உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×