என் மலர்
திருப்பத்தூர்
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கே பந்தர பள்ளி சம்பல் கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சசிகலா (வயது 40). இவர்களது குடிசை வீட்டில் குளவி ஒன்று கூண்டு கட்டி இருந்தது.
இதனை கண்ட திருப்பதி அதை கலைப்பதற்காக பந்தத்தில் தீ பற்ற வைத்தார். குளவி கூண்டை கலைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீ பிடித்தது. மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் வீட்டின் உள்ளே இருந்த அனைவரும் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
தீ பற்றி எரிந்த குடிசை வீட்டை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். தீ அணைக்க முடியாததால் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் உத்தரவு
- அதிகாரிகள் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியில் இருந்து ஆலங்காயம் ஒன்றியம் பெத்த வேப்பம்பட்டு அருகே வரை உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் பல வருடங்களாக சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு குண்டும் குழியுமாக மாறி சாலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த சாலையில் உள்ள 600 மீட்டர் தொலைவானது 2 ஒன்றியங்களுக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் எந்த ஒன்றியம் அதை பணி மேற்கொள்வது என்ற இழுபறி இருந்து வந்தது. அப்பகுதியில் ரேசன் கடை திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ. க. தேவராஜ் ஆகியோரிடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் பழுதடைந்துள்ள சாலையை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இடத்தில் தகவல் அளித்து சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் என்பவருக்கு அறிவுறுத்தினர்.
- ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
வாணியம்பாடி:
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சங்கீதாபாரி தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களின் மீது, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாபாரி பதிலளித்தார்.
உறுப்பினர்கள் கூறும்போது ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் உரிய மரியாதை வழங்குவதில்லை, ஊராட்சி செயலாளர்கள் தன்னிச்சையாக செயல்படுவது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது, எனவே ஊராட்சி மன்றத் செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.
அனைத்து ஊராட்சிகளிலும் இதே நிலை தொடர்வதாகவும், பல ஆண்டுகள் ஓரே ஊராட்சியில் ஊராட்சி செயலாளர்கள் பணிப்புரிவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அவர்களை மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
ஒரே ஊராட்சியில் பல ஆண்டு காலமாக பணி புரியும் ஊராட்சி மன்ற செயலாளர் பட்டியல் திரட்டப்பட்டு மற்ற ஊராட்சிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
- உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் ராஜாபாளையம் என்ற இடத்தின் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.
இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனை அகற்றி நெடுஞ்சாலையில் ஒப்படைக்க கோரியும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்கள் அகற்றாததால் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டனர்.
அப்போது அப்பகுதிக்கு வந்த பள்ளியின் நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றுவதாக கூறிவிட்டு, பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அகற்றுவதற்கு தயங்குவதால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களை அகற்றும்படி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- நாளை சித்ரா பவுர்ணமி உற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது
- பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சோதனை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள சரஸ்வதி ஆற்றங்கரையில் ஸ்ரீ சக்தி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி உற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று மாலை கோவிலில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார், வாணியம்பாடி போலீசார் ஆகியோர் இருந்தனர்.
- பிரம்மோற்சவம் பெருவிழா முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
ஆம்பூர்:
ஆம்பூரில் அலர்மேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசபெருமாள் கோவில் அமைந்துள்ளது.
பிரம்மோற்சவம் பெருவிழா முன்னிட்டு நேற்று மாலை சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை ஆம்பூர் சுற்று பகுதியை ேசர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 54 சதவீதம் குறைத்துள்ளது
- போலீஸ் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, சாலையை கடப்பவர்கள், அதிகப்படியான வேகத்தில் செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் வாகனங்களில் செல்வது போன்ற காரணங்களால் 80 சதவீதம் விபத்துகள் ஏற்படுவதும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக விபத்துகள் ஏற்படுவதும் தெரியவந்தன.
இதன் தொடர்ச்சியாக, விபத்துகளை குறைக்கும் பணியாக நடத்தப்பட்ட ஆய்வில் 51 இடங்களில் அதிக விபத்துகள் நடைபெறுவது கண்டறியப்பட்டன.
இதில், பச்சூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சூரில் சாலையை கடக்கும் வாகனங்களால் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அங்கு, சாலை தடுப்புகள் அமைத்து வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு கைமேல் பலனாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரே ஒரு சிறு விபத்து கூட பச்சூர் பகுதியில் நடைபெறவில்லை.
அதேபோல், விபத்துகளை குறைப்பதில் திருப்பத்தூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து, திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் குறித்து விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் நடத்திய ஆய்வில் 37 இடங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டது.
அதன் பிறகு ஆய்வில் மேலும் 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டு மொத்தம் 51 இடங்கள் கண்டறியப்பட்டன.
இந்த பகுதிகளில் வேகத்தடை அமைப்பது, எச்சரிக்கை பலகை வைப்பது, பிரதிபலிப்பான்கள், சாலைகளில் தடுப்புகள் வைப்பது, சாலைகளை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ள கலெக்டருக்கு கருத்துரு வழங்கியுள்ளோம்.
அனைத்துத்து றைகளின் பங்களிப்புடன் இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். மாலை 4 மணிக்கு பிறகு விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களில் வாகன சோதனை, போலீஸ் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளை குறைப்பதில் காவல் துறையினர் மட்டுமில்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் கட்டாயம் ெஹல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துடன் நடப்பாண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விபத்துகளில் உயிரிழப்பு 54 சதவீதம் குறைத்து மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளோம் என்றார்.
- கேமராவில் பதிவான திருடனை பிடிக்க தீவிரம்
- பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.முன்னாள் ராணுவ வீரர்.
இவருடைய மனைவி சுவிதா (வயது 42) இவர் இன்று காலை ரூ.2½ லட்சம் பணத்துடன் சந்தை கோடியூரில் உள்ள வங்கிக்கு வந்தார். பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்.
வங்கியின் உள்ளே சென்று சுவிதா படிவத்தை நிரப்ப சென்றார். அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுவீதாவின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். ஸ்கூட்டரில் இருந்த பணத்தை எடுப்பதற்காக சுவிதா வங்கியில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .வங்கி முன்பு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சுவிதாவின் ஸ்கூட்டரில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.இதன் மூலம் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 15-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் எந்திரங்களை வைத்து அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் புத்துக்கோவில் பகுதியில் சென்னை - பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலை யிலும், பெங்களூரு-சென்னை செல்லும் சர்வீஸ் சாலையிலும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது.
இதில் 15-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப் பட்டது. அம்பலூர் போலீசார் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
- போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
- வெளி மாநில மது கடத்திய தந்தை, மகன் கைது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கர்நாடக மாநில மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பால்நாங்குப்பம் பகுதியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 3,648 மது பாக்கெட்டுகள், 691லிட்டர் வெளிமாநில மதுபானம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட தந்தை - மகன் கைது செய்யப்பட்ட னர். சிறப்பாக செயல் பட்டு மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய், முதல்நிலை காவலர் மனோகரன், காவலர்கள் ரூபன் மற்றும் சத்தி ஆகிய 4 பேரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அவர் களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார்.
- டாக்டர்களுக்கு இணை இயக்குனர் அறிவுரை
- நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்கின்றனரா என ஆய்வு செய்தார்.
மேலும் புறநோயாளிகளிடமும் கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடமும் மற்றும் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அரசு மருத்துவமனை முழுவதும் தூய்மையாக வைத்து இருக்க இணை இயக்குனர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.
ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் பாலகிருஷ்ணன், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது சின்ன பொன்னேரி பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது சின்னபொன்னேரி பகுதியைச் சேர்ந்த கீதா (வயது 38) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில் களை மறைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து கீதாவை கைது செய்தனர்.
அதேபோல் ரவிச்சந்திரன் மனைவி திலகவதியும் (45) மது விற்றபோது கைது செய்யப்பட்டார். இருவரிடமும் மதுபாட் டில்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






