என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர்.
    • 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் இருந்தது போல அல்லாமல் சட்டசபை தேர்தலில் சுமூகமான கூட்டணி அமையும் நிலை இல்லை என்று கூறியிருந்தார்.

    அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பேச்சு தி.மு.க. கூட்டணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டத்தில் நான் பேசிய போது, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சராக ஆனதை, சட்டமன்றத்தில் பெருமையாக பேசினார்கள். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு கூறியதே தவிர கூட்டணியை யாரும் விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம் இல்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர். வேண்டுமென்றே நான் பேசியதை மாற்றி போட்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார்.

    அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் இன்று காலை அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவர்கள் சமரசமாகவில்லை.

    பாதிக்கப்பட்ட மாணவியை திட்டிய வார்டன் உள்ளிட்ட 3 பெண் வார்டன்களும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை ஒரு பெண் வார்டன் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்டார். மற்ற 2 பேரும் வரவில்லை.

    இதனால் மாணவர்கள் மேலும் 2 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கூறினர். இதையடுத்து உதவி கலெக்டர் அருள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறும்போது, மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்குள் ஒரு ஒப்பந்த தொழிலாளியை எப்படி தன்னந்தனியாக கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது?. புகார் அளிக்க சென்ற மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முதலில் எந்த உதவியும் செய்யப்படவில்லை.

    மாறாக அந்த மாணவி மீது வார்டன் அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் காவல்துறையிலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்க முயற்சிக்கவில்லை.

    பாதிக்கப்பட்ட மாணவி தனது தாய்-தந்தையிடம் பேசி அதன் பின்னரே மாணவர்கள் முன்னெடுத்து சென்று போலீசில் புகார் செய்துள்ளனர்.

    மாணவிகளின் பாதுகாப்பை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். இதைத் தொடர்ந்து திருச்சி எஸ்.பி.வருண் குமார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து மற்ற 2 வார்டன்களும் அங்கு வந்து மாணவ-மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. பாதுகாப்புக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். 

    • நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
    • என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
    • அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளோம்.

    * திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளது.

    * சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    * அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.

    * சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

    * எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது.

    * 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

    * அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும்.

    * எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம் என்று கூறினார்.

    • தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது.
    • மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2-ந் தேதி வி.சி.க சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் மதுவை ஒழிப்பதற்கும் போதை பொருட்களை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறோம்.

    இந்த மாநாட்டுக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெளிநாடு செல்லும் முதல்வர் நிர்வாகத்தை கவணிப்பதற்காக துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 15 நாள் பயணம் மேற்கொள்கிறார் இந்த 15 நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ள காலம் இது. எனவே. இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது.

    ஐ.ஏ.எஸ். போன்ற அதிகாரிகளை அவர்களின் சிறந்த ஆளுமைகளை ஆட்சி நிர்வாகத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் மதுவை வியாபாரம் செய்வது, எப்படி? லாபத்தை பெருக்குவது எப்படி? கடைகளில் எண்ணிக்கையை பெருக்குவது எப்படி? என்பதற்கு அந்த அதிகாரிகளில் சிந்தனை ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இது வேதனைக்குரியது.

    சினிமாவிலேயே இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். அந்த முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்.டி.ஆர்.யை பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள்.

    தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள்.

    அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வர அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது தி.மு.க.விலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் அவரோடு இருந்தார்கள்.அதனால் வெற்றி பெற முடிந்தது.

    அதன் பிறகு வந்த தலைவர்கள் அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள். அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    விஜய் அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம், என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப்பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இது குறித்து நாம் ஒரு கருத்தை சொல்லப்படுகிறது.

    முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மாநாடு நடத்திருக்கிறார்கள். இந்த மாநாடு பல லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிகிறது. பாஜக . ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் கடவுள்,மதம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை அரசியல் அடிப்படை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு வட இந்திய மாநிலங்களில் எவ்வாறு முயற்சித்தார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அப்படிப்பட்ட அந்த முயற்சிகளுக்கு இடம் அளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தக் கூடிய வகையிலே இந்து சமய அறநிலைத்துறை செயல்படுகிறது என்றால் அதை நாங்கள் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி கீழே இறங்க முயன்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.
    • ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சியில் பல்லவன் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே, கீழே இறங்கியபோது ரெயிலுக்கு அடியில் பயணி சிக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடும் சிரமத்திற்கிடையே ரெயிலுக்கு அடியில் சிக்கியவரை ரெயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.

    படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?
    • மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

    திருச்சி:

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழரல்லாத எல்.முருகனுக்கு மீண்டும் மத்திய இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்தது ஏன்?

    * தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?

    * எல்.முருகனோடு தோற்றுப்போன மற்ற பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தராதது ஏன்?

    * மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

    * அண்ணாமலை, கே.பி.ராமலிங்கம் போன்றோருக்கு மத்திய அமைச்சராக தகுதியில்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இடைக்கால முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
    • தலைவர்களில அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இடைக்கால முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். இப்போது இருக்கிற தலைவர்களில அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான். அவரை தற்குறி என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி இருக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.எல்.ஏ. வின் இந்த நடவடிக்கை அதிகாரிகளை ஒரு கணம் திகைக்க செய்தது.
    • பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி காவிரி ஆறு முக்கொம்பு பகுதியில் இருந்து கொள்ளிடம், காவிரி என 2 ஆறுகளாக பிரிந்து செல்கிறது. காவிரி நீர் புதுவாத்தலை மற்றும் ராமாவா்த்தலை ஆகிய 2 வாய்க்கால்கள் வழியாக ஸ்ரீரங்கம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வாய்க்கால்கள் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் மண்டி வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல். இதனால் இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது காலதாமதம் ஆகி வருகிறது.

    இதனை அடுத்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை நேரில் சந்தித்து வாய்க்காலை தூர்வார கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து உடனடியாக நீர்வளத்துறை அலுவலகத்திற்கு விவசாயிகளுடன் நேரில் சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ அங்கிருந்த செயற்பொறியாளர் நித்தியானந்தத்தை சந்தித்து கரையை பலப்படுத்தவும், காவிரி ஆற்றில் குறம்பு தேக்கி வாய்க்கால்களில் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த கோரிக்கை மனு அளித்தார்.

    இதனை தொடர்ந்து அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் மணல் மூட்டைகளுடன் பணியில் ஈடுபட்டனர். இந்த வேளையில் அங்கு சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஆற்றுக்குள் இறங்கினார்.

    ஆற்று தண்ணீரின் அளவை கண்டு, அதற்கு ஏற்றார் போல் கரையின் உயரத்தை உயர்த்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எம்.எல்.ஏ. வின் இந்த நடவடிக்கை அதிகாரிகளை ஒரு கணம் திகைக்க செய்தது. அதே வேளையில் அந்த பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.
    • படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகளை மீட்கும் ஒத்திகைக் காட்சிகள் நடந்தன.

    திருச்சி:

    ரெயில் விபத்துகளின் போது எப்படி துரிதமாக செயல்படுவது என்பது குறித்து மீட்புக் குழுவினர் திருச்சியில் தத்ரூபமாக நடத்திய காட்டினர்.

    திருச்சி, முதலியார் சத்திரம், குட்ஷெட் யார்டில் ரெயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கை குறித்தும் துரிதமாக செயல்படுவது குறித்தும் பாதுகாப்புக் குழுவினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.

    இதற்காக ஒரு ஏசி மற்றும் 2 பொது பெட்டிகள் என 3 பெட்டிகள் கவிழ்க்கப்பட்டது. இதை விபத்தாகக் கருதி திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.


    உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேனுடன் கூடிய விபத்து, மீட்பு ரெயில் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து குட்ஷெட் யார்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 300 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.

    இரண்டு ரெயில் பெட்டிகளை கவிழ்த்து, அதில் சிலர் சிக்கியது போன்றும், அவர்களை மீட்புக் குழுவினர் நவீன இயந்திரங்கள் உதவியுடன் உயிரோடு மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ரெயில்வே மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். விபத்து காட்சிகளை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில், விபத்தில் சிக்கிய பயணிகள் அலறுவது போன்றும், ரெயில்வே மீட்புக் குழுவினர் நவீன இயந்திரங்கள் மூலம், ரெயில் பெட்டியை துளையிட்டும், ஜன்னல் கம்பிகளை அறுத்தும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகளை மீட்கும் ஒத்திகைக் காட்சிகள் நடந்தன.


    விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து ஒத்திகை தத்துரூபமாக நடத்தி காட்டப்பட்டது.

    இதை ஒத்திகை என அறியாத பயணிகள் சிலர் ரெயில் விபத்து நடந்ததாக கருதி பதட்டம் அடைந்தனர். பின்பு ஒத்திகை என அறிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த அஜஸ் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார்.
    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.

    திருச்சி:

    திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. பஸ்சை சாத்தூரைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த அஜஸ் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார்.

    இதில் 28 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்து.

    உடனே சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். இதை அடுத்து சில நொடிகளில் டயர் வெடித்த பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் பஸ்ஸில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி அனைவரையும் கீழே இறக்கினர்.

    இதற்கிடையே சற்று நேரத்தில் தீ வேகமாக மளமளவென பரவி பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் உதவி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் நாலாபுறமும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் தீக்கிரையாகி எலும்பு கூடானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. ஆனால் பயணிகள் அவசர அவசரமாக இறங்கியதால் சிலரது உடைமைகள் பஸ்ஸில் சிக்கிக் கொண்டது.

    அந்த உடமைகள் தீக்கிரையாகின. பின்னர் அந்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்று பேருந்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் கூறும்போது, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். பஸ்ஸின் டீசல் டேங்க் வெடித்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பாலத்தில் கூட சேதாரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

    இந்த தீ விபத்தும் காரணமாக மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

    • கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள்.
    • யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டார். பின்னர் மணப்பாறையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை இணைப்பை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 24-ந் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023-24 ம் ஆண்டு அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்தவர்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள்.

    அந்த அறிவிப்பு வந்த பின் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்ற அமைச்சர்கள் கருத்துக்களை என்னிடம் வழங்கினார். அதுகுறித்து அறிக்கை உள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

    பல அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதை எயல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போரட்டம் நடத்தலாம்.

    ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் வியூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்ல.

    கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்வர் முடிவெடுத்த பின் தங்களின் கருத்தக்களை தெரிவிக்கலாமே தவிர யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.

    அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை என்பதை நானும் உறுதி செய்கிறேன். 3 ஆண்டுகளில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தருவேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.

    இதில் எதிர் கட்சித் தலைவர் எந்த குரலும் கொடுக்காத நிலையில் இறுதி முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது தேவையில்லாதது.

    எடப்பாடி பழனிசாமி 2026-ம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். ஆர்ப்பாட்டம்-பேராட்டத்தை கைவிடுங்கள். தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×