என் மலர்tooltip icon

    தேனி

    • பெண் கைதியை தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர்.
    • திடீரென பெண் கைதி பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தங்கம் (வயது48). இவர் அதே ஊரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது மனைவி சரோஜாவையும் கடுமையாக தாக்கி கொள்ளையடிக்க முயன்றார்.

    அப்போது அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் தங்கம் தப்பி ஓடினார். இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர்.

    பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தலைமைக் காவலர் முத்தையா, பெண் காவலர் ராஜேஸ்வரி ஆகியோர் அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென தங்கம் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
    • மேலும் விவரங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின்மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு ேபாலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ அன்றில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை.

    ஆண்டிபட்டி:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தனது 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரை வந்த அண்ணாமலை நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வந்தார்.

    உசிலம்பட்டி வழியாக ஆண்டிபட்டிக்கு வந்த அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.ஜி.ஆர். சிலை வழியாக ஜக்கம்பட்டி வரை 2 கி.மீ தூரம் நடந்து சென்றார். அப்போது லேசான சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலையை அண்ணாமலைக்கு அணிவித்தனர்.

    அப்போது கொட்டும் மழையில் பொதுமக்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு தரப்பினருக்கும், நம்பிக்கை இல்லாத சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.

    கடவுள் நம்பிக்கை கொண்ட யாரும் சனாதன தர்மத்தை ஒழிக்க நினைப்பவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஊழல் பேர்வழிகளை தங்கள் கட்சியில் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் வருகிற பாராளுமன்ற தேர்தலாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ அன்றில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை.

    ஊழல், வாரிசுகளை கட்சியில் வைத்துள்ள ஒரு கூட்டணிக்கும், நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் மோடி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள். மகாபாரத யுத்தத்தைப் போன்று ஒரு பக்கம் கவுரவர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பாண்டவர்கள் போல நின்று கொண்டு இருக்கிறோம். மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.

    இந்து மதத்தை தொடர்ந்து கொச்சைபடுத்தி வரும் தி.மு.க.வினர் வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினரை ஆதரித்து வருகின்றனர். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் கூட இந்து மதத்தை அழிக்க முடியவில்லை. தற்போது முளைத்து 3 இலை கூட விடாத உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அழித்து காட்டுகிறேன் என சவால் விடுகிறார். இந்த சவாலுக்கான தீர்வு தேர்தல் முடிவில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.
    • மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது.

    இதையொட்டிய வனப்பகுதியான வண்ணாத்திப்பாைற, சுருளியாறு உள்ளிட்ட இடங்களில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக வன விலங்குகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் கூட்டமாக முகாமிட்டு ள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. அங்கு வனத்துறை அலுவலக குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பகுதியிலேயே நீண்ட நேரம் காத்திருக்கிறது.

    வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் இங்கு முகாமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டி வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • யூனியன் அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
    • மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயி லாடும்பாறை கிராமத்தில் கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கட்டப்பட்டு40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

    அதனால் அலுவலக கட்டிடம் அதிக அளவில் சேதமடைந்து காணப்படு கிறது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் கட்டி டத்தின் சில அறைகளுக்குள் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதனால் ஆவணங்கள் மழை நீரில் நனைந்து விடும் அபாயம் உள்ளது.

    மேலும் மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல அலுவலக கட்டிடத்தில் குறைந்த அறைகள் மட்டுமே உள்ளது. இதனால் பணியாளர்கள் இட நெருக்கடிக்கு மத்தியில் அமர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

    எனவே ஒன்றிய அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை எடுத்து கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்க ப்பட வில்லை. மாவட்ட அதிகாரி கள் உரிய நடவ டிக்கை எடுத்து புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி களை விரை வில் தொடங்க வேண்டும் என பொது மக்கள் கோரி க்கை விடுத்து ள்ளனர்.

    • ரேசன் கடை பகுதியில் தூங்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • தகராறில் தொழிலாளி தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருச நாடு அருகே கீழபூசனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது72). இவரது மனைவி இறந்து விட்டதால் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.

    இரவு நேரத்தில் அப்பகுதி யில் உள்ள ரேசன் கடை வராண்டாவில் தூங்குவார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவரும் தூங்கினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து லட்சுமணன் சதீஷ்குமாரின் பெற்றோரி டம் தெரிவித்தார். அவர்கள் சதீஷ்குமாரை கண்டித்தனர்.

    இந்த நிலையில் வெளியூர் சென்ற சதீஷ்குமார் மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது ரேசன் கடையில் தூங்குவதற்காக சென்றார். அங்கு தூங்கிக்கொண்டி ருந்த லட்சுமணனுடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் கல்லை எடுத்து லட்சுமணன் தலையில் போட்டார். இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியும், உயர் நிலைப்பள்ளியும் உள்ளது.
    • மைதானம் இல்லாததால் மாணவிகள் தற்பொழுது சாலையில் விளையாடி வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியும், உயர் நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் இதுவரை இல்லை.

    இதனால் மாணவ - மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு அருகிலேயே இவ்வளவு நாட்களாக விளையாடி வந்த மாணவ- மாணவிகள் தற்பொழுது சாலையில் விளையாடி வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு கல்வியுடன் கூடிய விளையாட்டு அவசியம் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் பொருளா தாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவி கள் மைதானம் இல்லாததால் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் இப்பிரச்சினை யில் உரிய கவனம் செலுத்தி மைதானம் அமைக்க முன்வர வேண்டும்.

    • இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக இருந்தபோதும் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 27 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்து வந்த நிலையில் 400 கனஅடி நீர் திறக்கப்படுவதால் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. 590 கனஅடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்போக சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக இருந்தபோதும் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.

    தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர குடிநீர் திட்டத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு பின்னர் 300 கனஅடிநீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டு ள்ளது.

    இதனால் லோயர்கே ம்பில் கூடுதல் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 27 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்து வந்த நிலையில் 400 கனஅடி நீர் திறக்கப்படுவதால் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. 590 கனஅடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.04 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 20.6, தேக்கடி 14.6, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2.4, போடி 5.6, வைகை அணை 1.4, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 4.8, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • அரசு சார்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
    • விஷகடிகளுக்கான மருந்துகள் அனைத்தும் சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என பேசினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு, ஹைவேவிஸ் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது, தேனி மாவட்டம் கூடலூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கட்டிடம், பெரியகுளத்தில் ரூ.45லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிலமலை பகுதியில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    அழகர்சாமிபுரம், மேலசிந்தலைச்சேரி பகுதியில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் 2 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் தேனி மாவட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளுக்கு அரசாணை பெறப்பட்டு மிகவிரைவில் பணிகள் தொடங்க உள்ளது. அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க மற்றும் உடற்கூறு ஆய்வு மையம் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    ஓடைப்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், தேவாரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது. காமயகவு ண்டன்ப ட்டி மற்றும் கோம்பை பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் இந்திய மருத்துவ முறை புறநோயாளிகள் பிரிவு ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ளது.

    பாம்புகடி மற்றும் நாய்கடிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவை யான மருந்து கையிருப்பில் உள்ளது.

    இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் மாரடைப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்க 3 வகையான 14 மாத்திரைகள் 8713 துணைசுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர்.
    • திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள நாயக்கர் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (43). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரையில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக பழனி செட்டிபட்டியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் இருந்தார். பஸ் கொண்டமநாயக்கன்பட்டி 8கண் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது தங்க பாண்டியன் கண் அயர்ந்து விட்டார்.

    அப்போது பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார். கட்டுப்பாட்டை இழந்து சென்ற பஸ் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

    இதனால் தங்கபாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டக்டர் வினோத்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பஸ் பலத்த சேதமடைந்த நிலையிலும், அதில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் கபடி வீராங்கனை உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியபாண்டி மகள் தமயந்தி(19). சம்பவத்தன்று அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தமயந்தி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் சரவணன் மகள் சங்கனி(19). இவர் திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். குலதெய்வ வழிபாட்டுக்காக சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

    அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜயோக்கியம் மகள் சரண்யா(17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கபடி வீராங்கனையாக உள்ளார். சம்பவத்தன்று அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த சரண்யா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சரண்யாவை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி மகள் மஞ்சுளா(17). இவர் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலை யில் அவர் திடீரென மாயானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.

    • பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார்.

    கூடலூர்:

    குமுளி அருகே வாகமன் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்க வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் கேரள அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இடுக்கி டி.டி.பி.சி மற்றும் பெரும்பாவூரில் உள்ள பாரத்மாதா வென்சஸ் பிரைவேட் லிமிடெட், கி.கி ஸ்டார்ஸ் இணைந்து வாகமனில் கேன்டிலீவர் கண்ணாடி பாலம் மற்றும் சாகச பூங்காவை உருவாக்கி உள்ளனர்.

    ரூ.3 கோடி மதிப்பில் கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. 35 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் ஏறி நின்று சுற்றுவட்டார பகுதியான முண்டகயம், கூட்டிக்கல், கொக்கையாறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சாகச பூங்காவில் ஸ்கைசுவிங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கைரோலர், ராக்கெட் எஜெக்டர், பீரிபால், ராட்சத ஸ்விங், ஜிப்லைன் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார். இதன்மூலம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×