என் மலர்tooltip icon

    சிவகங்கை

    கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், நர்சுகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    சிவகங்கை: 

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு மற்றும் பொதுசுகாதாரத்துறையின் மூலம் உலக தர தின விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்) டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் யோகவதி, மருத்துவ அலுவலர் மீனா, துணை மருத்துவ நிலைய அலுவலர்கள் ரபீக், மிதுன், வித்யாஸ்ரீ மற்றும் செவிலியர்கள், தூய்மைபணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

    நாம் ஒவ்வொருவரும் சுகாதாரமான இடத்தில் வசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து, கலப்படமற்ற தரமான உணவு பொருட்களை உட்கொண்டு ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும். இதை நாம் அனைவரும் கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    வாழ்க்கையின் நோக்கமே ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ்வதே. இங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொரு டாக்டர்களும், நர்சுகளும், தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவரும் இந்த சேவையை இறைவனுக்கு ஆற்றுகின்ற தொண்டாக எண்ணி மிகவும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

    தரமான சிகிச்சை வழங்கப்பட்டதால் தான் இன்று தமிழகத்திலேயே நமது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டை பெற்றது. அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை அருகே 237 குடும்பங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா இடையமேலூர் குரூப் காந்தி நகர் கிராமத்தில் வசிக்கும் 237 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் வரவேற்று பேசினார்.

    விழாவில் கதா் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் பாஸ்கரன் 237 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி பேசியதாவது:-

    வீடற்ற ஏழை மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென்பதே அரசின் நோக்கமாகும். தகுதி வாய்ந்த வீடற்ற ஏழை மக்களுக்கு கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களிலிருந்து வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

    சிவகங்கை தாலுகா இடையமேலூர் குரூப், காந்தி நகர் பகுதியில் பா்மாவிலிருந்து வந்து வசித்து வரும் குடும்பங்களுக்கு கடந்த 1972-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 50 ஆண்டுகளாக வீட்டுமனைபட்டா இல்லாமல் இருந்தது. பட்டா பெறுவதற்காக அவர்கள் பலமுறை முயன்றும் பயனில்லாமல் போனது. தற்போது அவா்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் அடிப்படையில் வீட்டுமனைபட்டா வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜா, சிவகங்கை தாசில்தார் மைலாவதி, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவா் சசிக்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனா் பாலசந்தர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர். கேசவன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
    காளையார்கோவில் அருகே பல நாட்களாக மின் வினியோகம் இல்லாததை கண்டித்து கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து மறவமங்கலம், ஏரிவயல், சூராணம், வலையம்பட்டி, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி, பெரியகண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் ஒரே மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) மட்டுமே உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் அளிக்க முடியவில்லை. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குறைந்த அழுத்த மின்சாரமே வினியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பெரியகண்ணனூர் பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மின் உபயோக பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாமல் பயிர்கள் காய்ந்து வருகின்றன. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை.

    இதுகுறித்து மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெரியகண்ணனூர் கிராம மக்கள் நேற்று காளையார்கோவில் துணை மின்நிலையம் முன்பு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களது பகுதியை மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து பிரித்து காளையார்கோவில் துணை மின்நிலையத்துடன் இணைக்க வேண்டும், சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். மின்வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தேவகோட்டை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி வணக்கமேரி (வயது 48). இவர் பாகனேரி அருகே உள்ள மாங்காட்டுப்பட்டியில் வசிக்கும் தனது அக்காள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று அவர் மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    திருவேகம்பத்து போலீஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், வணக்கமேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
    தேவகோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சமையல்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 52). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் 7 வயது சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த துன்பத்தை அந்த சிறுமி அழுதுக்கொண்டே தனது பாட்டியிடம் தெரிவித்து உள்ளாள்.

    தாய், தந்தை மனநலம் பாதிக்கப்பட்டு வெளியூரில் உள்ளதால் இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வரும் சூழ்நிலையில் இச்சம்பவத்தால் பாட்டி அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சபாபதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
    பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஊராட்சி மன்ற தலைவி, சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரச கூட்டத்துக்கு பிறகு பதவியில் நீடிக்க சம்மதித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கால்பிறவு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் ராஜேஸ்வரி(வயது 42). தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவரை அந்த ஊராட்சி மன்றத்தில் துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் புறக்கணிப்பதாகவும், ஊராட்சி சம்பந்தப்பட்ட காசோலை, பதிவேடுகளை அவரிடம் வழங்காமல் உள்ளதாகவும், ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாக ராஜேஸ்வரி குற்றம்சாட்டியதுடன், இந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உடனடியாக கால்பிறவு ஊராட்சிக்கு சென்று விசாரணை நடத்தும்படி சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவனுக்கு உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் நேற்று சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம், கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா, மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர மகாலிங்கம், அழகு மீனாள், ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி, துணை தலைவர் நாகராஜ், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் துணைத்தலைவரை தனித்தனியாக அழைத்து பேசினார். பின்னர் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து பேசி சமரசம் செய்தார்.

    பின்னர் கோட்டாட்சியர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்பிறவு ஊராட்சியில் தலைவர், துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. தலைவருக்குரிய அதிகாரங்களை அவருக்கு தரும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊராட்சியின் காசோலை புத்தகம், மற்றும் பதிவேடுகள், ஊராட்சி மன்ற தலைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி செயலர் ஒவ்வொரு மாதமும் அந்த ஊராட்சியில் நடைபெறும் அனைத்து விவரங்களையும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு தெரிவிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்த ஊராட்சிக்கு அடிக்கடி சென்று, அங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதை செய்வதாக அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கூறும் போது, “கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் எனக்கு உரிய அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு எனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்கிறேன். மக்கள் பணிக்காக தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து செயலாற்ற உள்ளேன். தொடர்ந்து பதவியில் நீடிப்பேன்” என்றார்.
    இளையான்குடி அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள முள்ளியரேந்தல் கண்மாய்க்குள் ஒரு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து அங்கு சென்ற இளையான்குடி போலீசார் பணம் வைத்து சூதாடிய முள்ளியரேந்தல் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் (வயது 42), விஜயசாமி (40), கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் (44), சிறுபாலை கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் (38), நகரகுடியைச் சேர்ந்த சம்பத் (29), பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர். சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள், ரூ.4 ஆயிரத்து 100-ஐ பறிமுதல் செய்தனர்.

    இளையான்குடி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள சாத்தணிகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 37). இவர் அந்த ஊரின் மயானத்திற்கு அருகில் உள்ள புளியமரத்தின் அடியில் இருந்து கொண்டு சட்டவிரோதமாக மது விற்றார். இதை அறிந்த இளையான்குடி போலீசார் அவரை கைது செய்து 13 மதுபாட்டில்களும், ரூ.1,070-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதேபோல தாயமங்கலம் டாஸ்மாக் கடையின் அருகில் மது விற்ற விளங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துமணியை (34) போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

    தேவகோட்டை அருகே கூலிப்படை அமைத்து ரேஷன்கடை விற்பனையாளரை வெட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பூசலாகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் பாஸ்கர் (வயது 50). இவர் மங்கலம் மற்றும் வெங்களூர் ரேஷன் கடைகளில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி மாலை 6 மணி அளவில் பாஸ்கர் ரேஷன் கடையை மூடிவிட்டு வெங்களூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார்.

    குலக்குடி அருகே சென்ற போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை போலீசார் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் கடை ஊழியர் பாஸ்கரை வெட்டிய கும்பல் குறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அது பற்றிய விவரம் வருமாறு:-

    பூசலாகுடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ராமு என்ற ராமநாதன் என்பவரின் அண்ணன் ஆக்கிரமித்து உள்ளார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசுக்கு பாஸ்கர் புகார் தெரிவித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராமு கூலிப்படை அமைத்து பாஸ்கரை கொல்ல முயன்றது தெரியவந்தது. ராமுவுக்கு அருணகிரி பட்டினத்தை சேர்ந்த சரிதா(37) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி அவரிடம் பாஸ்கரை கொலை செய்ய வேண்டும் என கேட்டு உள்ளார்.

    அதற்கு சரிதா ரூ.4 லட்சம் பேசி கூலிப்படை அமைத்து கொடுத்து உள்ளார். அந்த கூலிப்படையினர் பாஸ்கரை வழிமறித்து வெட்டியுள்ளனர். அவர்கள் பாஸ்கரை வெட்டிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி இருவரும் வந்து உள்ளனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதனால் படுகாயங்களுடன் பாஸ்கர் உயிர் பிழைத்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதுகுறித்து தேவகோட்டை கூத்தாடி முத்து பெரியநாயகி தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோத்குமார் (26), சரிதா (37), ராமு என்ற ராமநாதன் (38), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தலைமறைவான பாவனாக்கோட்டை காளிமுத்துவை தேடி வருகின்றனர்.
    தீபாவளியை முன்னிட்டு திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் ஒரு ஜோடி ஆடு 40,000 வரை விலை போனது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஆட்டு சந்தை நடந்தது. இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் ஆடு வாங்க வந்திருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்புவனம் சுற்று வட்டாரத்தில் இருந்தும் மதுரை, திருச்சி போன்ற மாவட்டத்தில் இருந்தும், வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.

    இதை வாங்குவதற்காக, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்தனர்.  தீபாவளி பண்டிகை வர இருப்பதால் இன்றைய சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது. பொதுவாகவே இந்த திருப்புவனம் சந்தையில் ஆடுகள் பண்டிகை காலங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும்.

    இதில் குறைந்தபட்சம், 15,000 இருந்து, அதிகபட்சம், 25000 வரை ஆடுகள் விலை போனது. சுமார் 80 கிலோ எடையுள்ள, ஒரு ஜோடி உயர் ரக வெள்ளாடு, 40,000 வரை விலை போனது. இதுகுறித்து ஆட்டுச்சந்தைக்கு வந்திருந்த வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்புவனம்  ஆட்டுச்சந்தையில் 2 கோடி முதல் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என்றனர்.

    மேலும் இந்த சந்தையில்தான் அனைத்து ரக ஆடுகளும் கிடைக்கும். அதனால்தான் வியாபாரிகள் மற்றும் ஆடு வாங்குபவர்கள் என அனைவருமே இந்த சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தன்னை மிரட்டுவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கால்பிரிவு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் ராஜேஸ்வரி (வயது 42). இந்த ஊராட்சியில் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது ராஜேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    அந்த ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜ் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரியை புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு ஊராட்சியின் காசோலை, ஊராட்சி அலுவலகத்தின் சாவிகள் ஆகியவற்றை அவரிடம் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை மரங்களை குத்தகைக்கு விட மறுத்ததாகவும், அவரை ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி, எனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக திடீரென அறிவித்தார். மேலும் அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தை காண்பித்தார். இதனால் கலால்பிரிவு ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் இந்த கடிதத்தை கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக கூறினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள், ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, ஊராட்சி கூட்டமைப்பின் தலைவர்கள் சண்முகநாதன், பொறுப்பாளர்கள் தேசிங்கராஜா, சடையப்பன், முத்துராக்கு ஆகியோர் கால்பிரிவு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர்.

    அவர்கள் ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியிடம் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து புகாராக எழுதி தரும்படி கேட்டனர். பின்னர் அவர் புகார் எழுதி கொடுத்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதற்காக இந்த ஊராட்சியில் பணியாற்றும் துணைத்தலைவர் மற்றும் அவரை சார்ந்த ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து எனக்கு எதிராக பல வேலைகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து நான் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்து வந்தேன். தற்போது இதுகுறித்து எனது புகார்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்துள்ளேன்.

    அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கிறார்கள். சில சமயங்களில் ஊராட்சி துணைத்தலைவரின் ஆட்கள் என் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து சென்று உள்ளனர். இது குறித்தும் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்று உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனா கூறுகையில், “ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரை ராஜினாமா செய்யும் முடிவை விலக்கி கொள்ளுமாறு கேட்டு இருக்கிறோம். அவரும் எங்கள் நடவடிக்கைக்காக தனது முடிவை ஒத்தி வைத்து இருப்பதாக தெரிவித்தார்” என்று கூறினார்.
    எஸ்.புதூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    எஸ்.புதூர்:

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுகுடிபட்டி கிராமத்தில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ரோந்து சென்றார். அப்போது மேலவண்ணாரிருப்பு கிராமத்தை சேர்ந்த மென்னன் (வயது 65) அங்குள்ள கடைவீதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார். 

    அவரை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் கைது செய்தார். விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×