என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிறுமி கண் முன்னே தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மஜீத் ரோடு தெருவை சேர்ந்தவர் பஞ்சு (வயது60). இவரது மனைவி ராதா (45). இவர்களுக்கு சந்தோஷ் (23) என்ற மகனும், ஜீவா (13) என்ற மகளும் உள்ளனர். பஞ்சு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று இரவு வீட்டில் ராதாவும் மகள் ஜீவாவும் இருந்துள்ளனர். அப்போது பஞ்சுவும் மற்றொருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஞ்சு அங்கிருந்த வாளால் ராதாவை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராதா மகள் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் நகர் போலீசார் விரைந்து சென்று ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், ராதாவின் கணவர் பஞ்சுவை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சு உடன் சென்ற மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரெயில்வே ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 2016-ம் வருடம் 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் உத்தரபிரதேச மாநிலம் சாத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் (வயது22) என்பவர் தங்கி ரெயில்வேயில் கேட் கீப்பராக பணிபுரிந்து வந்தார்.

    விபின் குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுதொடர்பாக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி விபின் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ராஜகுமாரி ஆஜரானார்.

    வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட விபின்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    சிறுமி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 15 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 22) என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் சிறுமியின் தாயார் அங்கு வந்தனர். இதையடுத்து அரவிந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைதொடர்ந்து அரவிந்தின் தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது தம்பி அஜித் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கக்கூடாது என்று கூறி சிறுமியை மிரட்டியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக சிறுமி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனுப்பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அரவிந்த், ராஜேந்திரன், அஜித் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அரவிந்த் மட்டும் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே அரவிந்தனின் காரை சிறுமியின் உறவினர்கள் சிலர் தாக்கியதாக கூறி காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை கண்டித்தும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மீதமுள்ள இரண்டு பேரை கைது செய்யக் கோரியும் சிறுமியின் உறவினர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரியும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெண் விடுதலை கட்சியின் மாநில நிறுவனர் சபரிமாலா, வீர யாதவர் இளைஞர் பேரவை மாநில பொதுச்செயலாளர் குரு யாதவ் ஆகியோர் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், முருகேசன், வெள்ளைச்சாமி, செந்தாமரை மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சிறுமியின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதன் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    காரைக்குடி அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் கவுல்கொல்லை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 40). கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குமரேசனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

    இந்நிலையில் குமரேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நெற்குப்பை பேரூராட்சியில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

    அதன்படி செயல் அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நேர்முக உதவியாளர் துளசிராமன், திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் திருப்பத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர்கள் சகாய ஜெரால்ட்ராஜ், ராஜாராம், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சிற்றரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி மோகனா, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன், மாவட்ட நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியதாவது:- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்வது தான் இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் நோக்கம் ஆகும். இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்து இயங்கும் குழந்தைகள் இல்லங்களை தூய்மையுடன் பாதுகாத்திட வேண்டும். இளஞ்சிறார் நீதி சட்டம் 2015-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிறார்களின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு விரைந்து முடித்திட காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்திடவும், அதனை காலமுறையாக கூட்டம் நடத்திட சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். குழந்தை திருமணங்களிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தையல் பயிற்சி வழங்கவும், பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு தையல் எந்திரம் வழங்கி சமூக நலத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுவது மட்டுமல்லாது, குழந்தை திருமணங்களிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைகளின் கல்வி தடைபடாது, தொடர்ந்து கல்வி கற்பதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுத்து, அவர்களின் கல்வி கற்பது எந்த விதத்திலும் தடைபடாமல் இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
    சிவகங்கை உழவர் சந்தையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் தேங்காதபடி சரி செய்ய உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேற்று காலையில் சிவகங்கை உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த வியாபாரிகளிடம் அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள காய்கள் அவர்கள் உற்பத்தி செய்ததா அல்லது விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறார்களா என்று கேட்டறிந்தார். பின்னர் அவர் உழவர் சந்தை பகுதியில் போதுமான வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டார். கலெக்டர் வரும்போது உழவர் சந்தையில் மழைநீர் தேங்கி இருந்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மழைநீர் தேங்காதபடி நீரை வெளியேற்றி சரி செய்ய அவர் உத்தரவிட்டார். மேலும் உழவர்சந்தையில் காய்கள் விற்பனை செய்பவர்கள் தங்களுக்கு பயன்படுத்துவதற்கு வசதியாக கழிப்பறை அமைத்து தர வேண்டும் என்றும், உழவர்சந்தையில் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு தரையை சரிபடுத்தி தர வேண்டும் என்றும் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    பின்னர் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சிவன்கோவில் அருகேயுள்ள அம்மா உணவகத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள சமையல் அறை சுத்தமாக உள்ளதா என்று பார்வையிட்ட கலெக்டர் தினசரி எவ்வளவு உணவு தயாரிக்கப்படுகிறது என்றும் கேட்டறிந்தார். பின்னர் அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களிடம் உணவு தரமாக உள்ளதா என்ற கேட்டறிந்தார். ஆய்வின் போது சிவகங்கை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    இளையான்குடி அருகே பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 42). பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த போலீசார் பெட்டிக்கடையில் சோதனையிட்டபோது 20 மதுபாட்டில்கள் இருந்தன. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    தேவகோட்டையில் சிறுவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என பயிற்சியாளர் கருத்து தெரிவித்து உள்ளார்.
    தேவகோட்டை:

    தமிழர்களின் வீர விளையாட்டாக இன்று வரை கருதப்பட்டு வருவது சிலம்பாட்டம். அந்த காலக்கட்டத்தில் சிலம்பாட்டத்தில் ஒரு மனிதன் சிறந்து விளங்கினால் அவனை ஞான குருவாக கடைப்பிடித்து தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம். அதன் பின்னர் அறிவியல் வளர்ச்சி, மனிதனின் அவசர வாழ்க்கை உள்ளிட்டவைகளால் படிப்படியாக சிலம்பாட்டம் மக்களின் மனதை விட்டு மறைய தொடங்கியது.

    இருப்பினும் இன்னும் சில கிராமங்களில் உள்ள சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் தங்களுக்கு பின்னால் இந்த கலை அழிந்து விடக்கூடாது என்ற சிந்தனையில் இன்றைய இளம் தலைமுறையினரை அழைத்து வந்து அவர்களுக்கு சிலம்பாட்டம் கற்று கொடுத்து வருகின்றனர். இவ்வாறு தினந்தோறும் இந்த சிலம்பாட்ட கலையை பின்பற்றும் சிறுவர்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகரிப்பு, சுறுசுறுப்பு, ஞாபக சக்தி உள்ளிட்டவைகள் தானாக வருவது உண்டு.

    இவ்வாறு தேவகோட்டை பகுதியில் சிலம்பாட்ட பயிற்சியாளர் ஒருவர் தங்கள் பகுதியில் உள்ள சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தினந்தோறும் காலையில் ராம்நகர் பகுதியில் சிலம்பாட்ட பயிற்சியை அளித்து வருகிறார். இதுகுறித்து சிலம்பாட்ட பயிற்சியாளர் பக்கீர்முகமது கூறியதாவது:-

    இன்றைய காலக்கட்டத்தில் வீடுகள் தோறும் அறிவியல் வளர்ச்சி காரணமாக டி.வி, செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுது போக்கு சாதனங்கள் உள்ளன. தற்போது கொரோனா காலக்கட்டமாக இருப்பதால் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீடுகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் எப்போதும் செல்போன், டி.வி.யே கதி என்று இருந்து வருகின்றனர்.

    தினந்தோறும் சிறுவர்கள் வீடுகளில் செல்போன் மற்றும் டி.வி.யை அதிகளவில் பயன்படுத்தும் போது அவர்களின் கண் திறன் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் நாளடையில் அவர்களின் சிந்தனை திறனும் வேகமாக குறைகிறது. சிலம்பம் என்பது தமிழர்களின் வீரத்தின் அடையாளம். ஒரு மனிதன் தனது திறமையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கு முதல்படி தான் இந்த சிலம்பாட்ட பயிற்சி. அந்த வகையில் தற்போது தேவகோட்டை பகுதியில் 20 சிறுவர்களை வரை அழைத்து வந்து அவர்களுக்கு தினந்தோறும் சிலம்பாட்ட பயிற்சி வழங்கி வருகிறேன். சிலம்பாட்டத்தில் குத்து வரிசை, அடிமுறை வரிசை மற்றும் போர்சிலம்பம், அலங்கார சிலம்பம் ஆகிய வகைகள் உள்ளது. இதில் முதலில் தன்னை தானே பாதுகாக்கும் வகையில் உள்ள போர் சிலம்பம் என்று அழைக்கப்படும் இந்த சிலம்பம் வகையை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். தற்போது சிலம்பம் கற்பதால் சிறுவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை மாவட்ட கலெக்டராக மதுசூதன்ரெட்டி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் நேரடியாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயகாந்தன் மீன்வளத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இணை ஆணையாளராக பணிபுரிந்த மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

    புதிய கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.அவரிடம் கலெக்டர் ஜெயகாந்தன் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய கலெக்டராக மதுசூதன் ரெட்டி பொறுப்பு ஏற்றதும் அவரை மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதா மணி மற்றும் அரசு அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள மதுசூதன் ரெட்டி ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவர் பொறியியல் பட்டப்படிப்பில் முதுகலை படிப்பை முடித்துள்ளார்.

    2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் வேலூர் மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராகவும் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சப்-கலெக்டராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் வருவாய் துறையில் நில நிர்வாக ஆணையாளராக 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இணை ஆணையாளராக பணியாற்றினார்.

    புதிய கலெக்டராக மதுசூதன் ரெட்டி பொறுப்பு ஏற்றவுடன் உடனடியாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அங்குள்ள கொரோனா வார்டை பார்வையிட்ட அவர் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதா மணி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இது தொடர்பாக தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒரு கிராமத்தில் சம்பவத்தன்று 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் அரவிந்த்(22) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து உள்ளார். பின்னர் அந்த வாலிபர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே சென்றிருந்த சிறுமியின் தாயார், அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து சிறுமியை மீட்டு உள்ளார். அங்கிருந்து அரவிந்த் தப்பி ஓடி விட்டார்.

    பின்னர் அரவிந்த், அவருடைய தந்தை ராஜேந்திரன், தம்பி அஜீத் ஆகியோர் சிறுமியிடம் இது குறித்து போலீசுக்கு புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து அந்த சிறுமி சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனுப்பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அரவிந்த் அவரது தந்தை ராஜேந்திரன், தம்பி அஜீத் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவர்கள் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
    கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், நர்சுகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    சிவகங்கை: 

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு மற்றும் பொதுசுகாதாரத்துறையின் மூலம் உலக தர தின விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்) டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் யோகவதி, மருத்துவ அலுவலர் மீனா, துணை மருத்துவ நிலைய அலுவலர்கள் ரபீக், மிதுன், வித்யாஸ்ரீ மற்றும் செவிலியர்கள், தூய்மைபணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

    நாம் ஒவ்வொருவரும் சுகாதாரமான இடத்தில் வசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து, கலப்படமற்ற தரமான உணவு பொருட்களை உட்கொண்டு ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும். இதை நாம் அனைவரும் கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    வாழ்க்கையின் நோக்கமே ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ்வதே. இங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொரு டாக்டர்களும், நர்சுகளும், தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவரும் இந்த சேவையை இறைவனுக்கு ஆற்றுகின்ற தொண்டாக எண்ணி மிகவும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

    தரமான சிகிச்சை வழங்கப்பட்டதால் தான் இன்று தமிழகத்திலேயே நமது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டை பெற்றது. அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×