search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.
    X
    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் - கலெக்டர் மதுசூதன்ரெட்டி

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி மோகனா, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன், மாவட்ட நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியதாவது:- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்வது தான் இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் நோக்கம் ஆகும். இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்து இயங்கும் குழந்தைகள் இல்லங்களை தூய்மையுடன் பாதுகாத்திட வேண்டும். இளஞ்சிறார் நீதி சட்டம் 2015-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிறார்களின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு விரைந்து முடித்திட காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்திடவும், அதனை காலமுறையாக கூட்டம் நடத்திட சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். குழந்தை திருமணங்களிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தையல் பயிற்சி வழங்கவும், பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு தையல் எந்திரம் வழங்கி சமூக நலத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுவது மட்டுமல்லாது, குழந்தை திருமணங்களிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைகளின் கல்வி தடைபடாது, தொடர்ந்து கல்வி கற்பதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுத்து, அவர்களின் கல்வி கற்பது எந்த விதத்திலும் தடைபடாமல் இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×