search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமி பாலியல் வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

    சிறுமி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 15 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 22) என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் சிறுமியின் தாயார் அங்கு வந்தனர். இதையடுத்து அரவிந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைதொடர்ந்து அரவிந்தின் தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது தம்பி அஜித் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கக்கூடாது என்று கூறி சிறுமியை மிரட்டியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக சிறுமி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனுப்பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அரவிந்த், ராஜேந்திரன், அஜித் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அரவிந்த் மட்டும் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே அரவிந்தனின் காரை சிறுமியின் உறவினர்கள் சிலர் தாக்கியதாக கூறி காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை கண்டித்தும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மீதமுள்ள இரண்டு பேரை கைது செய்யக் கோரியும் சிறுமியின் உறவினர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரியும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெண் விடுதலை கட்சியின் மாநில நிறுவனர் சபரிமாலா, வீர யாதவர் இளைஞர் பேரவை மாநில பொதுச்செயலாளர் குரு யாதவ் ஆகியோர் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், முருகேசன், வெள்ளைச்சாமி, செந்தாமரை மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சிறுமியின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதன் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    Next Story
    ×