search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்பிறவு ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.
    X
    கால்பிறவு ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.

    ராஜினாமா அறிவித்த ஊராட்சி தலைவி பதவியில் நீடிக்க முடிவு : காசோலைகள், பதிவேடுகள் ஒப்படைப்பு

    பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஊராட்சி மன்ற தலைவி, சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரச கூட்டத்துக்கு பிறகு பதவியில் நீடிக்க சம்மதித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கால்பிறவு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் ராஜேஸ்வரி(வயது 42). தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவரை அந்த ஊராட்சி மன்றத்தில் துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் புறக்கணிப்பதாகவும், ஊராட்சி சம்பந்தப்பட்ட காசோலை, பதிவேடுகளை அவரிடம் வழங்காமல் உள்ளதாகவும், ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாக ராஜேஸ்வரி குற்றம்சாட்டியதுடன், இந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உடனடியாக கால்பிறவு ஊராட்சிக்கு சென்று விசாரணை நடத்தும்படி சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவனுக்கு உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் நேற்று சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம், கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா, மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர மகாலிங்கம், அழகு மீனாள், ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி, துணை தலைவர் நாகராஜ், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் துணைத்தலைவரை தனித்தனியாக அழைத்து பேசினார். பின்னர் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து பேசி சமரசம் செய்தார்.

    பின்னர் கோட்டாட்சியர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்பிறவு ஊராட்சியில் தலைவர், துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. தலைவருக்குரிய அதிகாரங்களை அவருக்கு தரும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊராட்சியின் காசோலை புத்தகம், மற்றும் பதிவேடுகள், ஊராட்சி மன்ற தலைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி செயலர் ஒவ்வொரு மாதமும் அந்த ஊராட்சியில் நடைபெறும் அனைத்து விவரங்களையும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு தெரிவிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்த ஊராட்சிக்கு அடிக்கடி சென்று, அங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதை செய்வதாக அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கூறும் போது, “கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் எனக்கு உரிய அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு எனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்கிறேன். மக்கள் பணிக்காக தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து செயலாற்ற உள்ளேன். தொடர்ந்து பதவியில் நீடிப்பேன்” என்றார்.
    Next Story
    ×