என் மலர்tooltip icon

    சேலம்

    • கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
    • மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை கிராமம் மாட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 53). டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய லாரியில் மணி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 8-ந்தேதி கசுவரெட்டிப்பட்டியில் உள்ள கிணற்றில் மணி பிணமாக மிதந்தார். அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது. தாரமங்கலம் போலீசார், உடல் பாகங்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

    போலீசாரின் அதிரடி விசாரணையில், மணியின் நெருங்கிய நண்பரான தாரமங்கலம் அருகே உள்ள கருக்கப்பட்டி பகுதியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ் (வயது 55) என்பவர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம் வருமாறு:-

    நான், மரங்கள் அறுத்து அவற்றை லாரிகளில் அனுப்பும் தொழில் செய்து வருகிறேன். கொலையுண்ட மணியும், நானும் மற்றும் துட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் நண்பர்கள். நாங்கள் தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய தோட்டத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். நாங்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    வழக்கம்போல் கடந்த 7-ந்தேதி 3 பேரும் சேர்ந்து, பன்றிக்கறி சமைத்து எடுத்துச் சென்று எனது வீட்டில் வைத்து மது குடித்தோம். சிறிது நேரத்தில் சக்திவேல் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் நானும், மணியும் தொடர்ந்து மது குடித்தோம்.

    அப்போது போதையில் எனது மனைவி குறித்து தவறாக பேசினார். அதனை கண்டித்தும் கேட்காமல் ஆபாசமாக பேசினார். இதனால் எனக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து மணியின் பின்தலையில் தாக்கினேன். இதனால் மணி சரிந்து விழுந்தார். பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் கொலையை மறைக்க முழு உடலையும் துண்டு துண்டாக வெட்டி முடிவு செய்தேன்.

    கத்தியை கொண்டு அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டினேன். அவற்றை அப்படியே எடுத்துச் சென்று வெளியே வீசினால் பொதுமக்கள் பார்த்து விடுவார்கள் என கருதி உடல் பாகங்களை 3 சாக்குமூட்டைகளில் போட்டு கட்டினேன்.

    பின்னர் அந்த சாக்குமூட்டைகளை எடுத்து சென்று நாங்கள் பணியாற்றி வந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். மீண்டும் வீட்டிக்கு வந்து மது குடித்தேன்.

    இரவு நேரத்தில் பயமாகி விட்டதால், எனது மகள் வீட்டிற்கு சென்று மருமகனிடம் சம்பவத்தை கூறி கதறினேன். மறுநாள் மதியம் கிணற்றில் வீசப்பட்ட உடல் பாகங்கள் மிதக்க தொடங்கியதால் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,570 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,327 கனஅடியாக சரிந்தது.
    • இன்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1,547 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில், நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.

    இதே போல்,மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,570 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,327 கனஅடியாக சரிந்தது. இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1,547 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக, நேற்று 113.54 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 112.89 அடியாக சரிந்தது.

    • சேலம் - திருப்பத்தூர் செல்லும் தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • பெற்றோர் மற்றும் ஆனந்தின் சகோதரி, அவர் கூறிய செல்போன் எண்ணிற்கு ரூ.5000 கூகுள்-பே மூலம் அனுப்பி உள்ளார்.

    சேலம்:

    திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஆனந்த் (வயது 26).

    இவர் சேலம் - திருப்பத்தூர் செல்லும் தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பஸ்சில் மாற்று டிரைவராக சங்ககிரியைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்த் தனது தந்தைக்கு போன் செய்து, தன்னை சிலர் கடத்தி வைத்துக் கொண்டு, தான் வாங்கிய கடன் தொகை ரூ.70 ஆயிரம் கட்டினால் தான் விடுவிப்பதாக மிரட்டுவதாகவும் கூறினார். இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் மற்றும் ஆனந்தின் சகோதரி, அவர் கூறிய செல்போன் எண்ணிற்கு ரூ.5000 கூகுள்-பே மூலம் அனுப்பி உள்ளார்.

    பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதால் பதட்டம் அடைந்த ஆனந்தின் பெற்றோர், உடனடியாக புறப்பட்டு சேலம் வந்தனர்.

    மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆனந்தின் செல்போன் என்னை வைத்து விசாரணை மேற்கொண்டதில், ஆனந்த் மற்றும் சதீஷ் ஆகியோர் குமாரபாளையத்தில் இருப்பது தெரியவந்தது.

    இருவரையும் போலீசார் இன்று காலை சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இருவரும் குடிபோதையில் இருந்தபோது விளையாட்டாக இவ்வாறு செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஆனந்த் மற்றும் சதீஷை போலீசார் கடுமையாக எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

    • ஒரு சொகுசு கார் அதிவேகமாக ஏ.வி.ஆர் ரவுண்டானா நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு முதியவர் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம், ஜங்ஷன் பகுதியில் இருந்து இன்று காலை 9.30 மணி அளவில் ஒரு சொகுசு கார் அதிவேகமாக ஏ.வி.ஆர் ரவுண்டானா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த சொகுசு கார், 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவிகளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் லேசான காயத்துடன் தப்பினார்.

    இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் அந்த சொகுசு காரை ஓட்டி வந்த இளைஞர் உட்பட 2 பேரை சாரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த இளைஞர்கள் குடி போதையில் இருப்பது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், சேலம் அழகாபுரம் சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகள் கிருத்திகா (வயது 19), பெருமாள் மகள் சிவரஞ்சனி (19) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதில் ஒரு மாணவிக்கு கால் முறிவும், மற்றொரு மாணவிக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டு உள்ளது.மேலும் சொகுசு காரை ஓட்டி வந்தவர்கள், சேலம் சித்தனுர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் விஜய் (26), சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் அருள் (35) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாறுமாறாக வந்த கார் மோதி கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்ததும், அந்த வழியே சென்றவர்கள் சிதறி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது.
    • இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    இந்த பூஜையில் 1008 வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஞான அகஸ்தியருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் 1008 சங்கு வைத்து பூஜை செய்து, பக்தர்கள் தங்கள் கைகளால் சங்காபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட இடம்புரி சங்குகள் 900 பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதேபோல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்டையூர் பகவதி சாமிகள், பண்ணவாடி சாமிகள், சன்னியாசிகள், அகோரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ நவகோடி சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் சித்தரசு சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • முரளி (வயது 50). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
    • சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற கார் எதிர்பாராதவிதமாக முரளி கார் மீது மோதியது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த எலத்தூர் அண்ணாநகர் பகுதி சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தேவையான வாழை இலை வாங்க முரளி தனது மகனுடன் இன்று காலையில் காரில் தீவட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை முரளி ஓட்டினார்.

    எலத்தூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள நெடுஞ்சாலையை கார் கடக்கும்போது சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற கார் எதிர்பாராதவிதமாக முரளி கார் மீது மோதியது. மேலும் அந்த கார் நிற்காமல், சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தூண், மற்றும் இரும்பு தகட்டில் பயங்கரமாக மோதி நின்றது.

    அப்போது கார் முழுவதும் உடனடியாக தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இந்த காரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 4 பேர் இருந்தனர்.

    இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காரை திறந்து காருக்குள் இருந்த 4 பேரையும் காப்பாற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் லேசான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    முரளி ஓட்டி வந்த காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.இந்த விபத்தில் முரளி, அவரது மகன் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கர்நாடக காரில் பிடித்த தீைய அணைத்தனர். இந்த சம்பவத்தால் சாலையின் இருபுறமும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிகிச்சை

    காயம் அடைந்த கார்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • மண்பானையில் பஞ்சவர்ண நிறம் பூசி அழகூட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் வந்தாலும், தமிழர் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பனை ஓலைகளால் தீ மூட்டி மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவதையே அனைவரும் விரும்புகின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் விறகு அடுப்பு, அடுப்புக்கட்டி, மண்பானைகள், கரும்பு, பனை ஓலைகள், பனங்கிழங்கு போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மண்பானையில் பஞ்சவர்ண நிறம் பூசி அழகூட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம் காந்தி ரோடு பகுதியில் இதற்காக நூற்றுக்கணக்கான பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சிறியது முதல் பெரிய வகையான பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது பானைகளில் வண்ண வண்ண வகையான கோலமிட்டு அவை விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சி பொங்க வாங்கிச் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் வண்ணக் கோலத்திற்கு தேவையான வண்ணச் சாயப் பொடி விற்பனைக்கு வந்துள்ளது. கோலப் பிரியர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கோலப்பொடியை வாங்கிச் செல்வது விற்பனை யாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பானை விற்பனை குறித்து மண்பாண்ட தொழிலா ளர்கள் கூறுகையில், ''15 நாட்களுக்கு முன்பாகவே பலரும் பஞ்சவர்ண பானை கேட்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மண்பானைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அனைவரும் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்றனர்.

    இதேபோல் கரும்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதேபோல் வகை வகையான வண்ணங்களில் கோலப்பொடிகளும், வெல்லம் மற்றும் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டம் முழுவதுமே, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டி உள்ளது.

    • தை மாதத்தில் விளைநிலங்களில் பயிர் செய்தவதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என, இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
    • வங்காநரி வனவிலங்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும், ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்–பாளையம், ரெங்கனூர், கொட்டவாடி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில், தை மாதத்தில் விளைநிலங்களில் பயிர் செய்தவதற்கு முன், 'நரி' முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என, இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், வங்காநரி பிடிப்பதை தவிர்த்து பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாழப்பாடி வனத்துறை சார்பில், ரெங்கனூர், சின்னம்ம நாயக்கன்பாளையம், கொட்டவாடி கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தப்பட்டது.

    வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் நடந்த இம்முகாமில், வங்காநரி வனவிலங்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும், ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வங்காநரி பிடிப்பதை கைவிட வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால், பல நூறு ஆண்டுகளாக முன்னோர்கள் வழியில் பொங்கல் பண்டிகை தோறும் நடந்து வரும் வங்காநரி வழிபாடு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறையும், தமிழக அரசும் அனுமதிக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    • மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக தகவல்.
    • மதுபாட்டில்களை வாங்கி, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், பழனியாபுரம் பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, அவ்வழியாக சென்ற ஜெயராமன் (40) என்பவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில், 2 கைப்பைகளில் 200 குவாட்டர் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இவரை கைது செய்த வாழப்பாடி போலீசார், இவரிடம் இருந்த 200 மது பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் ஈரோடு வேளாளர் கல்வியியல் அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் இருபால் கல்லூரியில் 8 நாட்கள் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் சிறப்பாக பயிற்சி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற உள்ளார்கள்.

    சேலம்:

    15 ஆவது தமிழ்நாடு பாடாலியன் சார்பாக வருடாந்திர ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் ஈரோடு வேளாளர் கல்வியியல் அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் இருபால் கல்லூரியில் 8 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    3-ந் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாமில் ஈரோடு, கோவை,சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இப்பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு துப்பாக்கி சுடுதல், வரைபட பயிற்சி, தூரத்தை கணக்கிடுதல், உடற்பயிற்சிகள், யோகா பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், தலைமை பண்பு, ஆளுமை பயிற்சிகள் ஆகியவைகள் அளிக்கப்படுகின்றன.

    இந்த துப்பாக்கி பயிற்சியில் சிறப்பாக பயிற்சி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற உள்ளார்கள்.இப்பயிற்சி முகாம் ஈரோடு 15 -வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஜெய்தீப் மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேலம் 11-வது தமிழ்நாடு பட்டாலியனை சேர்ந்த கர்னல் சூரஜ் எஸ்.நாயர் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    மேலும் பயிற்சியை கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராம் பார்வையிட்டார்.

    இதில் 10 தேசிய மாணவர் படை அலுவலர்கள் சுபேதார் மேஜர் உட்பட 15 ராணுவ பயிற்சியாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு தினசரி பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    • 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்–பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). இவர் ஜவ்வரிசி (சேகோ) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி சந்தைப்பேட்டை பழைய வணிக வளாகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மதிவாணனிடம் நகை, பணம் பறித்த சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அன்சர் மகன் குட்டி என்கிற பக்ருதீன் (48), அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த கமல்பாஷா மகன் சதாம் உசேன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில், கடந்த 27-ந் தேதி சேலம் கந்தம்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம் சேகோ பேக்டரி நடத்தி வரும் ராமசாமி (75) என்பவரை, கத்தி முனையில் மிரட்டி ரூ.10,200 பறித்ததாக பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் மீது சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் அன்னதானப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா (தெற்கு) ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா பக்ருதீன் மற்றும் சதாம் உசேனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் இன்று தியேட்டர்களில் வெளியானது.
    • இதற்காக ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர்களில் குவித்து உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது.

     


    தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு திரைப்படங்களையும் பார்க்க நேற்று இரவு முதல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.



    துணிவு மற்றும் வாரிசு படங்கள் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 70 தியேட்டர்களில் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று திரையிடப்பட்டன. துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் தியேட்டர்களில் ரிலீசானது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.



    இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் முண்டி அடித்தபடி நுழைந்தனர். அப்போது கூட்ட நெரிசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தன. மேலும் 2 ரசிகர்கள் கேட்டின் மீது இருந்து கீழே குதித்ததில் கண்ணாடிகள் குத்தி ரத்த காயமடைந்தனர். இது தவிர மற்றொரு ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்தார். மேலும் அதிவேகத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரை கைது செய்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

    ×