search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை தவறாக பேசியதால் துண்டு துண்டாக வெட்டிக்கொன்றேன்- டிரைவர் கொலையில் கைதான தொழிலாளி வாக்குமூலம்

    • கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
    • மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை கிராமம் மாட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 53). டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய லாரியில் மணி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 8-ந்தேதி கசுவரெட்டிப்பட்டியில் உள்ள கிணற்றில் மணி பிணமாக மிதந்தார். அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது. தாரமங்கலம் போலீசார், உடல் பாகங்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

    போலீசாரின் அதிரடி விசாரணையில், மணியின் நெருங்கிய நண்பரான தாரமங்கலம் அருகே உள்ள கருக்கப்பட்டி பகுதியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ் (வயது 55) என்பவர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம் வருமாறு:-

    நான், மரங்கள் அறுத்து அவற்றை லாரிகளில் அனுப்பும் தொழில் செய்து வருகிறேன். கொலையுண்ட மணியும், நானும் மற்றும் துட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் நண்பர்கள். நாங்கள் தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய தோட்டத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். நாங்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    வழக்கம்போல் கடந்த 7-ந்தேதி 3 பேரும் சேர்ந்து, பன்றிக்கறி சமைத்து எடுத்துச் சென்று எனது வீட்டில் வைத்து மது குடித்தோம். சிறிது நேரத்தில் சக்திவேல் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் நானும், மணியும் தொடர்ந்து மது குடித்தோம்.

    அப்போது போதையில் எனது மனைவி குறித்து தவறாக பேசினார். அதனை கண்டித்தும் கேட்காமல் ஆபாசமாக பேசினார். இதனால் எனக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து மணியின் பின்தலையில் தாக்கினேன். இதனால் மணி சரிந்து விழுந்தார். பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் கொலையை மறைக்க முழு உடலையும் துண்டு துண்டாக வெட்டி முடிவு செய்தேன்.

    கத்தியை கொண்டு அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டினேன். அவற்றை அப்படியே எடுத்துச் சென்று வெளியே வீசினால் பொதுமக்கள் பார்த்து விடுவார்கள் என கருதி உடல் பாகங்களை 3 சாக்குமூட்டைகளில் போட்டு கட்டினேன்.

    பின்னர் அந்த சாக்குமூட்டைகளை எடுத்து சென்று நாங்கள் பணியாற்றி வந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். மீண்டும் வீட்டிக்கு வந்து மது குடித்தேன்.

    இரவு நேரத்தில் பயமாகி விட்டதால், எனது மகள் வீட்டிற்கு சென்று மருமகனிடம் சம்பவத்தை கூறி கதறினேன். மறுநாள் மதியம் கிணற்றில் வீசப்பட்ட உடல் பாகங்கள் மிதக்க தொடங்கியதால் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×