என் மலர்
சேலம்
- சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
- கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் விலை சரிந்தது.
சேலம்:
தமிழகத்தில் சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் விலை சரிந்தது. ஒரு பழம் ரூ.2 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தர்பூசணி, மூலம் பழம் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், கரும்பு சாறு, இளநீர், சர்பத் உள்ளிட்டவைகளை நாடி வருகின்றனர். இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எலுமிச்சை பழத்தின் வரத்து 20 சதவீதம் குறைந்துள்ளது.
வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை சற்று உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை, தினசரி சந்தை, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 30 முதல் 40 டன் எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் எலுமிச்சை பழத்தை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் ஜூஸ் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல்கள், விடுதி உணவகம் நடத்துபவர்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் தங்களது பல்வேறு ேதவைகளுக்காகவும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் எலுமிச்சை பழங்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் அதிக வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
- இந்த நிலையில் இதுவரை 3 முறை மட்டுமே பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் இதுவரை 3 முறை மட்டுமே பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கடந்த 5 மாதங்களாக மன்ற கூட்டம் நடத்தாமல் நாள் கடத்தி வந்தனர்.
மேலும் தங்கள் வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் பேரூராட்சி நிர்வாகம் உள்ளதாக ஆத்திரம் அடைந்த கவுன்சிலர்கள், கடந்த 13-ந் தேதி பேரூராட்சி அலுவலகம் முன்பு மன்ற கூட்டம் நடத்த வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் 15-ந் தேதி கூட்டம் நடக்காததால், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று 11 மணிக்கு பேரூராட்சி மன்றத்தில் மன்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவி கவிதா தலைமை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தங்கள் வார்டு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளுக்கு தீர்மானத்தை கொண்டு வரவில்லை எனவும், பேரூராட்சியில் செய்யப்படாத வேலைகளுக்கு போலியாக பில் போடப்பட்டு கவுன்சிலரிடம் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு கையெழுப்பும் பெற திட்டமிட்டு இருந்ததாக கூறி கேள்வி எழுப்பினர்.
மேலும் பேரூராட்சி செலவினங்களுக்கு பதில் கூறாமல் பேரூராட்சி தலைவி கவிதா கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு தலைவி கவிதா மற்றும் அவருடைய கணவர் ராஜா ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
- எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் மணி காலைக் கடனை கழிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது. இதில் ரெயிலில் சிக்கிய மணி, அரை கிலோ மீட்டர் இழுத்து செல்லப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் நகர போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று சூரமங்கலம் உதவி வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, வீரக்குமார் மற்றும் அலுவலர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நீண்ட நாட்களாக வாடகை பாக்கி வைத்துள்ள 15 கடைகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.
மேலும் சில கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் கண்டறியப்பட்டு பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின்னரும் வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றனர்.
- சுப்பிரமணி (வயது 55). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
- அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள துளசிமணியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இது குறித்து அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, கூலி தொழிலாளி சுப்பிரமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வக்கீல் வாதாடினார். சுப்பிரமணிக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து சிறுமியின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள, ஓட்டுநர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
- இதற்கான ஆட்கள் தேர்வு வருகிற 25-ந் தேதி சேலம் தமிழ்சங்கம் அண்ணா நூலக வளாகம் முதல் மாடியில் நடக்கிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள, ஓட்டுநர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு வருகிற 25-ந் தேதி சேலம் தமிழ்சங்கம் அண்ணா நூலக வளாகம் முதல் மாடியில் நடக்கிறது. மருத்துவ உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக பி.எஸ்.சி நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்.,டி.எம்.எல்.டி. அல்லது உயிர் அறிவியல் பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி, பிளாண்ட் பயாலஜி ஆகியவை படித்திருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மாத ஊதியமாக ரூ.15,435 வழங்கப்படும். முறையாக எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முகம்-உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, நேர்முகத்தேர்வில் பின்பற்றப்படும்.
இதேபோல், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இலகுரகவாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
முறையாக எழுத்துத்தேர்வு, தொழில்நுட்ப தேர்வு மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வ நடத்தப்படும். மாத ஊதியம் ரூ.15,235 வழங்கப்படும் என்று 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
- இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.
இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in (http://www.tnprivatejobs.tn.gov.in/) என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, jobfairmccsalem@gmail.com (mailto:jobfairmccsalem@gmail.com) என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
பணிக் காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில்நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுகொண்டுள்ளார்.
- வருவாயினை பெருக்கிடவும், தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொப்பரை என்ற வீதத்தில், குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம்:
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைத்திடவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும், தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த அரவை கொப்பரையினை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொப்பரை என்ற வீதத்தில், குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் 300 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் சேலம், மேச்சேரி மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்படவுள்ளது.
இம்மையங்களில் அரவை கொப்பரை குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 வீதம் 2023-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள அரவை கொப்பரை அயல்பொருட்கள் 1 சதவீதமும், பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீத எண்ணிக்கையிலும், சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீத எண்ணிக்கையிலும், சில்லுகள் 10 சதவீத அடிப்படையிலும், ஈரப்பதம் 6 சதவீத அடிப்படையிலும் நியாயமான சராசரி தரத்தினை கொண்டிருத்தல் வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.
மேட்டூர்:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் - ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் உள்ள சிறிய பாலங்கள், கல்வெட்டு கள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலைய 4 ரோடு அருகே உள்ள கல்வெட்டை அகலப்படுத்தும் பணிக்காக சாலையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் போலீசார், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கிரேன் மூலம் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
- தற்போது நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொருத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அமைகிறது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று விநாடிக்கு 1,260 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,410 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்று 103.23 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.20 அடியாக சரிந்தது.
- அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அ.தி.மு.க பிரமுகர் தத்து எடுத்தார்.
- இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக அவரும், அவரது வீட்டில் குடியிருக்கும் மற்றொருவரும் தினந்தோறும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொந்தரவு தந்தனர்.
சேலம்:
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இன்று ஒரு சிறுமி தனது மாமாவுடன் வந்தார். கமிசனரிடம் மனு கொடுத்த பின்னர் சிறுமி கூறியதாவது:-
நான் அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அ.தி.மு.க பிரமுகர் தத்து எடுத்தார். தத்து எடுத்த நாள் முதல் சரிவர உணவு வழங்காமல், அவ்வப்போது திட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக அவரும், அவரது வீட்டில் குடியிருக்கும் மற்றொருவரும் தினந்தோறும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொந்தரவு தந்தனர்.
இது குறித்து தாய் கேட்க சென்றாள், தாயையும் மிரட்டுகின்றனர். இதையடுத்து வளர்ப்பு தந்தை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி வரும் வேளையில், எனக்கு சரிவர உணவு வழங்காமல் மது அருந்திவிட்டு பாலியல் தொந்தரவு செய்வதால் என்னால் படிக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து நான் வசிப்பதற்கும், படிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள தாகவும் கூறினார்.
- 5-வது ஊட்டச்சத்து இருவார விழா இன்று முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடுகிறது.
- ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்தவும் இந்த இரு வார விழாவின் நோக்கமாகும்.
சேலம்:
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக 5-வது ஊட்டச்சத்து இருவார விழா இன்று முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடுகிறது.
மக்கள் இயக்கம், மக்கள் பங்கேற்பு மூலம் ஊட்டச்சத்தின் முக்கியத்து வத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்தவும் இந்த இரு வார விழாவின் நோக்கமாகும். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து இயக்கம் , மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை முன்னுக்குக் கொண்டு வருவதிலும் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.
சேலம் மாவட்டம்
நடப்பாண்டு 5-வது ஊட்டச்சத்து இருவார விழா சேலம் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் நடத்த பல்வேறு துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி விரைவில் கிரா மங்கள் ேதாறும் ஆரோக்கிய மான ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.






