என் மலர்
சேலம்
- சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது.
- நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது.
சேலம்:
சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்களான சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தபுஷ்பராஜ் (வயது 23), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த மணி, வீரன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த வீட்டையொட்டி மின்சார கம்பம் இருப்பதுடன் ஒயரும் செல்கிறது. நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது. மின்சார கம்பி மீது படாமல் இருக்க தடுப்புகளால் மறைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் புஷ்பராஜ் அலுமினியத்தால் ஆன மட்டை பலகையை எடுத்த போது, அது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார கம்பி மீது உரசியது.
இதனால் புஷ்பராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்த வீரன், மணி ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார். வீரன், மணி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே மின்சாரம் தாக்கி பலியான புஷ்பராஜ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புஷ்பராஜ் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்.
- மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 28). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவி உள்ளார்.
புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.
இதை கண்டு அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக கருப்பூர் போலீசாருக்கும், ஓமலூர் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த புகழேந்தியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், புகழேந்திக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ரேவதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த புகழேந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகாவில் நாளை சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிரது.
- சேலம் மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.
சேலம்:
கர்நாடகாவில் நாளை சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிரது. சேலம் மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தேர்தலில் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் விதமாக அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலம் தொழிலாளர் ஆணையாளர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ல செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு, போக்குவரத்து நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நூற்பாலைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாக்குரிமையுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்தில் எவ்வித பிடித்தமும் செய்யாமல் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐ.டி. டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
- அந்த நிறுவனத்தில் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ஒரு வருடத்தில் ரூ. 2.16 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐ.டி. டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ஒரு வருடத்தில் ரூ. 2.16 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதனை நம்பி சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்தனர். தொடக்கத்தில் அவர் கூறியபடியே அதிக வட்டியு டன் கூடிய கவர்ச்சி திட்டத்தை உறுப்பினர் களுக்கு கொடுத்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினராக இணைந்து முதலீடு செய்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணி தனது உறுப்பினர்கள் யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என்று புகார் எழுந்தது.
இதே போல் வேலூர் மாவட்டத்திலும் அவர் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. வேலூரில் இருந்து பாலசுப்பிர மணியனிடம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த பலர் சேலம் வந்து பாலசுப்பிர மணியை பிடித்து போலீசில் ஒப்படைக்க சென்றபோது அடியாட்கள் வந்து மிரட்டி முதலீடு செய்தவர்களை கடுமையாக தாக்கி பாலசுப்ரமணியை அழைத்து சென்று விட்டனர்.
இது குறித்து சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. முதலீட்டாளர்கள் இவர் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாலசுப்ர மணியம், அவரது மகன் வினோத் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். அவரது மகன் தலைமறைவானார். இதை தொடர்ந்து இன்ஸ்
க்டர் முத்தமிழ்செல்வன் தலைமையில் போலீசார் தலைமறைவான வினோத்குமாரை தேடி வந்தனர். இதை தொடர்ந்து இன்று வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவரை கோவை டான் பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
- ஆவடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் விஸ்லி (வயது 41). இவர் நேற்று இரவு புடவைகளை ஆம்னி காரில் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
- வாகனம் சந்தை பேட்டை வந்தபோது எதிர்பாராத விதமாக வாகனத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஜலகண் டாபுரம், ஆவடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் விஸ்லி (வயது 41). இவர் நேற்று இரவு புடவைகளை ஆம்னி காரில் ஏற்றி சென்று கொண்டிருந்தார். வாகனம் சந்தை பேட்டை வந்தபோது எதிர்பாராத விதமாக வாகனத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஜான்விஸ்லி உடனடியாக காரை நிறுத்தி விட்டு வெளியேறியதுடன் காரில் இருந்த சேலை மூட்டைகளை அப்புறப்படுத்தினார். அப்போது
தீ மளமளவென பரவியதில் ஆம்னி வாகனம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் ஆம்னி வாகனம் முழுதும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 மில்லிமீட்டர் வரை மழை பதிவானது.
சேலத்தில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- சங்ககிரி - 22.3, காடயாம்பட்டி - 18, தம்மம்பட்டி - 14, ஏற்காடு - 8.4, எடப்பாடி - 3.2, ஆணைமடுவு - 3, சேலம் - 2.9 என மொத்தம் 106.80 மில்லிமீட்டர் மழை பதிவானது.
- பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று சக தி.மு.க. கவுன்சிலர்களே தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
- ஒப்பந்த பணிகளிலும் முறைகேடு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவியாக தி.மு.க.வை சேர்ந்த கவிதா ராஜா உள்ளார். இவர் நகர தி.மு.க. செயலாளர் ராஜாவின் மனைவி ஆவார். இங்கு 13 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும், 2 காங்கிரஸ் கவுன்சிலர்களும் உள்ளனர்.
இந்த பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று சக தி.மு.க. கவுன்சிலர்களே தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் ஒப்பந்த பணிகளிலும் முறைகேடு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றக்கோரி தம்மம்பட்டி பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 கவுன்சிலர்கள் இன்று சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர்.அவர்கள் கூறுகையில், தம்மம்பட்டி பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கும் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக் கையும் இல்லை. தொடர்ந்து மேலும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் 15 வார்டு கவுன்சிலர்களும் ராஜி னாமா செய்வதாக முடிவு செய்துள்ளோம் என்றனர்.
- ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று இந்த பகுதியில் போதிய மழை இல்லை.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 4,906 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை குறைந்து விநாடிக்கு 3,992 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 102.74 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 102.88 அடியாக உயர்ந்தது.
- சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ரவிச் சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிக்கும், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சிங்காரப்பேட்டைக்கும், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் எஸ்.ரவி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசேகர், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சி.குமரன், சேலம் மாவட்டம் கருமலைக் கூடல் போலீஸ் நிலையத் திற்கும், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியம், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ் பெக்டர் ஜாபர் உசேன், ராயக் கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பி.செல்வ ராஜூ, நாமக்கல் மாவட்டம் வேலக வுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், சேலம் மாவட்டம் கருமலைக் கூடல் இன்ஸ்பெக்டர் சுகுமார், பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி, குமாரபாளை யத்திற்கும், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பிறப்பித்து உள்ளார்.
- சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 323 அரசு மேல்நிலைப்பள்ளி, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.
- எனது பெற்றோரும், பள்ளியும் உறுதுணையாக இருந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 323 அரசு மேல்நிலைப்பள்ளி, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இதில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குட்டப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவன் சக்திவேல் 600-597 மதிப்பெண்கள் பெற்று சேலம் மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் எடுத்துள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-99, இயற்பியல்-100, வேதியியல்-100, உயிரியல்-100, என மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த சாதனை பற்றி மாணவன் சக்திவேல் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வுக்கு பல்வேறு பாட புத்தகங்களை வாங்கி படித்தேன். இதனால் என்னால் 597 மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. இதற்கு எனது பெற்றோரும், பள்ளியும் உறுதுணையாக இருந்தது. நான் டாக்டர் ஆவதே லட்சியமாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
- இதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சேலம்:
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடி வடைகிறது.
இதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கர்நாடக போலீசார் மற்றும் துணை ராணுவம் பாது காப்பு பணீயில் ஈடுபட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் கோவை மேற்கு மண்டல காவல்துறையி லிருந்து 210 போலீஸாரும், 60 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுகின்றனர். இவர்கள் நேற்று சேலம் லைன் மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.
- கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
சேலம்:
தமிழக உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.






