என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நக ரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இதனை செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • மின்சார கட்டண விவரம் குறித்து விசாரணை
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வாலாஜா நகராட்சிக்குட்பட்ட கச்சால் நாயக்கர் தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றை பார்வையிட்டும், குடும்ப ஆண்டு வருமானம், சொந்த நிலம் உள்ளதா, குடும்பத்தில் உள்ள நபர்கள் விவரம், வேலை, கார் உள்பட வாகனம் உள்ளதா, மின்சார கட்டண விவரம் ஆகியவை குறித்து வீடு வீடாக சென்று கலெக்டர் கேட்டறிந்தார்.கலெக்டர் ஆய்வின்போது தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசன் உள்பட வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.

    • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்த கரண் (வயது 21), கணபதி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (22) மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவர்கள் மூவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை வாலாஜாபேட்டையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மெடிக்கல் பார்ம் வாங்குவதற்காக 3 பேரும் ஒரே பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த மலைமேடு அருகே வரும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் பாதையை மாற்றுவதற்காக வைத்திருந்த தடுப்ப கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கரண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பலத்த காயமடைந்த சரண்குமார் மற்றும் சுபாசை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிைலயில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகள் ராசாத்தி (வயது 22).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 31-ந் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர் .

    இந்நிலையில் நேற்று காலை கட்டளைபாட்டை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு இளம் பெண்ணின் உடல் மிதப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் விசாரணையில் மாயமான துரைராஜ் மகள் ராசாத்தி என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இளம் பெண்ணின் தந்தை துரைராஜ் நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லஞ்சம் வாங்கியதால் நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே செல்வமந்தை கிராமத்தில் கடந்த 29-ந் தேதி மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர் வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கம் ஆகிய இருவரும் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராணிப் பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கத்தை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
    • அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த செங்காடு மோட்டூர் கிராம பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் அள்ளுவதற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் முயற்சித்துள்ளது.

    ஏற்கெனவே கிராம பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, ஏரியில் மண் அள்ளுவதற்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஏரியில் மண் அள்ள கூடாது என வாலாஜாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா. வெங்கட் மற்றும் அதிகாரிகளிடம் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை வழங்கினர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீடு, வீடாக சென்று வழங்கினர்
    • தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு)முத்து உத்தரவின் பேரில் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அரங்கநாதன் தலைமையில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கினர்.

    அப்போது, டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கும், ஆற்காடு பழைய பஸ் நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கும் என மொத்தமாக ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    ஆற்காடு எம்.எல்.ஏ.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும், கட்டிட, பணிகளை தரமாக மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியா ளரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    இதில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனலட்சுமி, நகரமன்றத் துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகராட்சி பொறியாளர் எழிலரசன், நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.4 கோடியில் கட்டப்பட உள்ளது
    • விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரைப்பெ ரும்பாக்கம் பகுதியில், கொசத்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய உயர் மட்ட மேம்பால பணிக்கு பூமி பூஜை விழா இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்சிக்கு சோளிங்கர் ஏ. எம்.முனிரத்தினம் எம்.எல்ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, இந்த உயர் மட்ட மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதில் ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைபுத்தீன், வெங்கடேசன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமு ருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்லக்கிளி மூர்த்தி, திவ்யபாரதி தினேஷ் காந்தி, சுலோச்சனா பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர் இந்திரா, மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, காங்கிரஸ் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரகாஷ், நகர செயலாளர் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்தது
    • விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்

    கலவை:

    கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சப்- இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, உஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல தீய செயல்களை செய்கின்றனர்.

    இதை தடுக்க போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

    தங்களது பகுதிகளில்போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசார் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    இதேபோல் பாணாவரம் அருகே சூரை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதை பொருள் தடுப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    • சோளிங்கரில் நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    சோளிங்கரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகள் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

    சோளிங்கரில் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேநிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

    முகாமில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தனி யார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12 ம் வகுப்புகள்,ஐ.டி.ஐ., டிப்ளமோ , டிகிரி, நர்சிங், என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த சிறப்பு முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
    • கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே மேல்விஷாரம் ரஷீத் பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான நபர்கள் குறித்தும், கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.

    ×