என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ஒரு வருட காலம் காவலில் வைக்க உத்தரவு
    • ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த, ஆற்காடு அப்பாய் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன்(எ) செல்லா (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்செல்வன் (எ) செல்லாவை ஒரு வருட காலம் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    • நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோவிந்ததாங்கலை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 30). தொழிலாளி. இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டின் மேல் மாடிக்கு சென்று கதவை உடைத்தனர். பீரோவில் இருந்த 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை குடும்பத்தினர் அனைவரும் எழுந்து வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது .

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன
    • அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க எடுத்து சென்றனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவே ரிப்பாக்கம், நெமிலி, வாலாஜா, சோளி ங்கர், அரக்கோணம் மற்றும் ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

    இந்நிலையில், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட பொருளாளர் ரகு, ஆட்டோ சங்க துணை தலைவர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருப்பாளர் தினகரன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ், பொதுச் செயலாளர் ஜெகன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமுருகன், ஆகியோர் கலந்து விஜர்சன ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

    இந்த ஊர்வலம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் தொடங்கி, பஜார் வீதி வழியாக சென்று சோமநாத ஈஸ்வரர் கோயில் குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.

    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்தது வாலாஜா நகரம் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமையும் உடையது.

    வர்த்தக நகரமாகவும் விளங்கி வருகிறது. சிறப்புகள் வாய்ந்த வாலாஜா நகரத்திற்கான பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் வாலாஜா நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ளது.

    சிறிய அளவிலேயே இருந்தாலும் இந்த பஸ் நிலையத்தின் வழியே தான் சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கான பஸ்கள் வந்து செல்கிறது.

    சுற்றுப்புற கிராமங்களுக்கான அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வருவதால் கிராமங்களிலிருந்து வேலை நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வரும் பொதுமக்கள், பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு அதிகம் வந்து செல்கின்றனர்.

    இவ்வாறு பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் இருந்த கடைகளின் முன்பாக வெயில், மழை காலங்களில் ஒதுங்கி நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் வாலாஜா நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 8லட்சம் மதிப்பில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புனரமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்து பூமி பூஜையும் போடப்பட்டது.

    பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணிக்காக பஸ் நிலையத்திலிருந்த அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு விட்டதால் பொதுமக்கள் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றபடியே காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.

    மழைக்காலம் தொடங்கி விட்டதால் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் மழையில் நனையாமல் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலைய பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள், பயணிகள் பயன் பெறும் வகையில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 359.1 மி.மீ.,
    • விடிய விடிய கொட்டி தீர்த்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நேற்று நள்ளிரவிலிருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் மழைதூறல் பெய்த வண்ணம் உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்:-

    ராணிப்பேட்டையில் 67.8.மி.மீ., பாலாறு அணைக்கட்டு 14.8 மி.மீ., வாலாஜாவில் 42.5 மி.மீ., அம்மூரில் 41 மி.மீ., ஆற்காட்டில் 92.6.மி.மீ., மின்னலில் 8.4 மி.மீ., காவேரிப்பாக்கத்தில் 43 மி.மீ., பனப்பாக்கத்தில் 2.8 மி.மீ., கலவையில் 46.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 359.1 மி.மீ., மாவட்ட சராசரி 32.6 5மி.மீ.ஆகும்.

    • பொதுமக்கள் அச்சம்
    • செடி, கொடிகளை அகற்ற வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பாரதி நகரில் 4 மாடி கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த ஆண்டு முதல் பல்வேறு துறை அலுவலகங்க ளுடன்செ யல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள், பிரமுகர்கள் என பலர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று கீழ் தளம் எப்.ப்ளாக்கில் செயல்பட்டு வரும் மருத்துவ காப்பீடு அலுவலகம் எதிரே நேற்று மாலை பாம்பு ஒன்று திடீரென புகுந்தது.

    இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு பணியாற்றிய ஊழியர்களே அந்த பாம்பினை விரட்டினர்.

    கலெக்டர் அலுவலக பின்புறம் அதிகளவில் செடி,கொடிகள் நிறைந்து காணப்படுவதால் அங்கிருந்து பாம்பு வந்திருக்கலாம் . எனவே அங்குள்ள செடி, கொடி களையும், தேவையற்ற பொருட்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது
    • மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேலப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 56)விவசாயி. இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன் 4 பைக்குகளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

    பின்னர் நள்ளிரவில் வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார். பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து புகை வருவது கண்டு பிடிக்கட்டது.

    இதனையடுத்து வெளியே சென்று பார்த்த போது, வீட்டின் முன்பகுதி வழியாக செல்லும் மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது.

    இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 பைக்குகளும் தீப்பற்றி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வண்டிகளும் எரிந்து சாம்பலாகியது.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவளூர் போலிசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • கல்வெட்டினை திறந்து வைத்தார்

    காவேரிப்பாக்கம்:

    வாலாஜா அஐகே உள்ள திருப்பாற்கடல் ஊராட்சியில் உள்ள எஸ்.தேவராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில், 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நபார்டு திட்டத்தின் கீழ் திருப்பாற்கடல், வி.கே.மாங்காடு, ஆற்காடு, திமிரி, கலவை, ஒழுகூர், பனப்பாக்கம், புலிவலம், மகேந்திரவாடி, ரெண்டாடி, சோளிங்கர் உள்ளிட்ட 11 பள்ளிகளில் ரூ.18.23 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் கல்வெட்டினை திறந்து வைத்து பணியினை தொடங்கி வைத்து பேசினார்.

    மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா. ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், ஓச்சேரி பாலாஜி, தெய்வசிகாமணி, மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி கணேசன், சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி சுந்தரம், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்னம் கலந்துகொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

    முன்னதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மயூரநாதன், நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குலோத்துங்கன், சாரதி, செந்தமிழ்செல்வன், சகிலா விநாயகமூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து நெமிலி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் வழங்கினார்.

    இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • குளியல் அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் இடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது
    • நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி 11-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.24லட்சத்து 96ஆயிரம் மதிப்பில் புதியதாக சமூக கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இதனை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்த சமூக கழிப்பறை கட்டிடம் குளியல் அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் இடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் விநாயகம்,பொறியாளர் பரமுராசு, நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத்,குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா உள்பட நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 247 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
    • கலெக்டர் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 380 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் 247 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட 247 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

    மேலும் 162 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 30 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மாற்றுத்திறனாளி களுக்கான மாதாந்திர உதவித் தொகை வேண்டி 13 பேரும், வங்கிக் கடனுதவி வேண்டி 22 பேரும்,வேலைவாய்ப்பு வேண்டி 32 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 12 பேரும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார்உள்பட மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பயணிகள் கடும் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    வேலூரில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் வந்தார். அப்போது அரக்கோணம் ெரயில் நிலையத்தில் தொண்டர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்காக 30-க்கும் மேற்பட்ட இரும்பு தடுப்புகள் கொண்டு போலீசார் முதலாவது நடைமேடையில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.

    தற்போது 4 நாட்கள் ஆகியும் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.

    இந்த இரும்பு தடுப்புகள் சிதறி கிடக்கும் முதலாவது பிளாட்பாரம் சென்னையில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றன.

    இப்பகுதியில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் பயணிகள் குறிப்பாக இரவு நேரங்களில், இரும்பு தடுப்புகளால் பிளாட்பாரத்தில் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    பயணிகள் ரெயிலில் ஏறுவதற்கும் கடும் அவதி அடைகின்றனர்.

    எனவே போலீசார் ஆங்காங்கே கிடக்கும் இரும்பு தடுப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×