என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணத்தில் மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் நேருஜிநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர், அரக்கோணம் இரும்பு தொழிற்சாலையில் வேலை பாா்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி வச்சலா (வயது 68). இவர், நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகில் நடந்து வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென வச்சலா அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த வச்சலா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டார். அங்கிருந்தவர்கள் வருவதற்குள் மர்மநபர்கள் வேகமாக சென்று விட்டனர்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் வச்சலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை, காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 25). இவர் நேற்று ராணிப்பேட்டை, முத்துக்கடை அருகே உள்ள அம்மூர் சாலையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.

    இதேபோல் வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள குறவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் பாலு (36). இவர் ராணிப்பேட்டையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.

    கஞ்சா விற்ற 2 பேரையும், ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டால் அதை தீர்க்க தேவையான அனைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மக்கள் தொகை 12 லட்சத்து 15 ஆயிரத்து 778 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 94 ஆயிரத்து 204 பேர் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 827 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சிய மக்களுக்கு வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தவேண்டும்.

    இப்பணிகளை முழுக்க முழுக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்னின்று மேற்கொள்ள வேண்டும்.

    அரக்கோணம் வட்டத்தில் குறைவான சதவீதம் உள்ளது. அப்பகுதியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம பகுதிகளில் தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்கு அதிக அளவில் செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்புகளை ஆட்டோக்களில் தெரிவிக்க வேண்டும்.

    பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டால் அதை தீர்க்க தேவையான அனைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். வரும் வாரங்களில் கட்டாயமாக கிராமப் பகுதி, நகரப்பகுதி அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் சதவீதம் அதிகரிக்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து பணியாற்றிட வேண்டும். அலுவலர்கள் இப்பணியில் யாரும் மெத்தனம் காண்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ரத்தினகிரி அருகே வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோல் ஊற்றி லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த கீழ்மின்னல் பகுதியைச் சேர்ந்தவர் எழில்மாறன் (வயது 38), லாரி டிரைவர்.இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி கல்பனா ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அனத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). படித்துவிட்டு வேலை இல்லாததால் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நிலத்திற்கு மாடுகளை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே மின்சார வயர் அறுந்து கீழே விழுந்துள்ளது. அதனைப் பார்க்காமல் நந்தகுமார் மின்வயரை மிதித்து உள்ளார்.

    இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் மின்சாரத்துறை மற்றும் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவையில் புகையிலை, மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவை:

    கலவை மேலாண்மை பேட்டை- திமிரி ரோட்டில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அகமது (வயது 36) என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் என்ற புகையிலையை விற்றுக்கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    அதேபோன்று கலவையை அடுத்த கலவைபுத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (60) என்பவர் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். அவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    காவேரிப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் பி.ஆர்.நகர் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முருகன் (வயது 30) பனப்பாக்கத்தை அடுத்த கல்பனாம்பட்டில் நடந்த திருவிழாவுக்காக பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். பனப்பாக்கம் ரோட்டில் பன்னீயூர் கூட்ரோடு பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவேரிப்பாக்கம் போலீசார், முருகனின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெமிலி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பள்ளூர் மேலாண்ட தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 56). அங்குள்ள கோவிலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    அரக்கோணம் அருகே பல ஆண்டுகளாக பூட்டி கிடந்த வீட்டில் நள்ளிரவில் பூஜை நடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அருகே உள்ள கிழவனம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிழவனத்தில் உள்ள வீட்டை பூட்டிக்கொண்டு தற்போது வெளியூரில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் ஒரு குழந்தை மற்றும் சிலருடன் கிழவனம் வந்த ஆசீர்வாதம் பூட்டி கிடந்த வீட்டை திறந்து உள்ளே சென்று பூஜைகள் செய்தனர்.

    மேலும் வீட்டிற்குள் பள்ளம் தோண்டியுள்ளனர். நள்ளிரவில் பூட்டிக் கிடந்த வீட்டைத் திறந்து பூஜைகள் நடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    வீட்டிற்குள் புதையல் இருக்கலாம் அதற்காக குழந்தையை அழைத்து வந்து நரபலி கொடுப்பதற்காக பள்ளம் தோண்டி பூஜை செய்கின்றார்களா? என்று சந்தேகமடைந்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பூஜையில் ஈடுபட்ட ஆசீர்வாதத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 3-வது மகளின் கணவர் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து விட்டார். அதனால் மகளை தன் வீட்டில் தங்க வைப்பதற்காக கூலி ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் வீடு ஆண்டு கணக்கில் பூட்டிக் கிடந்ததால் பேய் இருக்கலாம் என்று மந்திரவாதி ஒருவர் கூறினார் அதனால் நள்ளிரவில் பூஜை செய்ததாக தெரிவித்துள்ளார்.

    பகலில் வீட்டை சுத்தம் செய்யாமல் நள்ளிரவில் என் வீட்டை சுத்தம் செய்தீர்கள்? புதையல் எடுப்பதற்காக குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராணிப்பேட்டையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை, காரை பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் ரித்திகா (வயது 19). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கர்ப்பிணிப் பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால நிதி, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்காததை கண்டித்து இந்திய புரட்சி மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால நிதி, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்காததை கண்டித்து மருத்துவமனை எதிரில் இந்திய புரட்சி மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் நாராயணசாமி, தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட தலைவர் சுரேஷ் சந்திரன் உள்படபலர் கலந்து கொண்டனர்.
    நெமிலி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வெங்கடாபுரம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசு மதுபான கடையில் மதுவை வாங்கி விற்பனை செய்ததாக நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் கைது செய்தார். அவரிடமிருந்து மது பாட்டில், ரூ.320 பறிமுதல் செய்யப்பட்டது. அரசு அனுமதியின்றி மது அருந்த இடமளித்ததாக கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த வேணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோன்று திருமால்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் என்ற முருகன் (47), மது விற்பனை செய்தபோது அவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 மது பாட்டில்கள், ரூ.320 பறிமுதல் செய்யப்பட்டது.
    ×