என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் பயனடைந்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் 6-வது வார்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அபிஷேக் மருத்துவமனை மற்றும் ஷாலினி பல் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் அரக்கோணம் நகர மன்ற உறுப்பினர் கே.எம்.பி.பாபு தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம், ரத்த அழுத்த அளவு, சர்க்கரை அளவு கண்டறிதல் போன்ற நோய்களுக்கான மருத்துவம் இலவசமாக பார்க்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகரத் துணைச் செயலாளர் தமிழ்வாணன் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார் டாக்டர் அபிஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.

    முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை
    • நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகரின் பிரதான பகுதியான காந்தி ரோட்டின் இருபக்கமும் சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகலாகி தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சாலையின் இருபக்கமும் உள்ள மின் கம்பங்களால் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் மின் வாரியத்தினர் ஜோதி நகர் முதல் தாலுகா அலுவலகம் வரை சாலையின் ஓரத்தில் இருந்த கம்பங்களை 10 அடி தூரத்தில் அகற்றி சாலையின் ஓரத்தில் நட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை நெடுஞ்சா லைத் துறையினர் பொக்லைன் மூலம் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    இதனால் மின் கம்பங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தொலை தொடர்பு கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பது போல் காட்சியளிக்கிறது.

    • துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பங்குத் தொகையை அதானிக்கு தாரை வார்ப்பதாக கூறி மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திமிரி பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.

    திமிரி பேரூர் தலைவர் எல்லப்பன், திமிரி வட்டார தலைவர் கள் பி.மண்ணு, லீலா கிருஷ்ணன், விளாப்பாக்கம் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்.

    முன்னதாக கையோடு கைகோர்ப்போம் நிகழ்ச்சியாக மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டிக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    • கொலை வழக்கில் நடவடிக்கை
    • ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அருகே அவளூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டஜாகீர்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு ராணிப் பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பாபு இருந்துள்ளார். இதையடுத்து பாபுவை கைது செய்ய நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    இதனையடுத்து அவளூர்போலீசார் நேற்று பாபுவை கைது செய்து, ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாசி மாத திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்றது. ஊர்வலத்தின் போது கோலாட்டம், புலி ஆட்டம், சுருள் விளையாட்டுகள் மற்றும் நையாண்டி, பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பக்தர்களும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்தனர்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருவலம் அருகே உள்ள குகை யநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மகன் லோகேஷ் (வயது 21). இவர் நேற்று வீட்டிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருவலம் புதிய ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது, முன்னால் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோகேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கல்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதி யில் இருந்து ரூ.33 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி தலைமை தாங்கினார். சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டுமான பணியை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி முருகேசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தோரத்தெருவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பழுதடைந்து பராமரிப்பின்றி உள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் இதனை சீர்செய்யாமல் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த 3ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளதாகவும் எந்திரப்பழுதை சரிசெய்து குடிநீர் வழங்குமாறு பலமுறை அப்பகுதியினர் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.

    பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாகவும் தற்போது கோடைகாலம் தொடங்கவுள்ள சூழலில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே கட்டப்படுகிறது

    வாலாஜா:

    வாலாஜா நகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தேசிய நெடுஞ்சாலயில் வாகன விபத்து ஏற்பட்டால் இங்கு தான் சிகிச்சைக்காக கொண்டு வருவர்.

    மேலும் வாலாஜா சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களும் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தான் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவார்கள்.மேலும் இம்மருத்துவமனையானது நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ளது.

    இந்த மருத்துவமனை சாலையின் இருபக்கமும் கட்டிடங்கள் உள்ளன. நோயாளிகள் சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் நோயாளிகளும் கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் ரூ.13½ கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

    இதில் சித்தூர்- பெங்களூர் சாலையில் வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் மற்றும் நோயாளிகள் சென்று வர இலகுரக வாகன சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

    இதன் ஆரம்ப கட்ட பணிக்காக வாலாஜா சித்தூர் பெங்களூர் சாலையில் இருபுறமும் கடந்த 3-ந் தேதி ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி வாலாஜா எம்.பி.டி சாலையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.13.½ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

    • திருமணமான 8 மாதத்தில் விபரீதம்
    • அரக்கோணம் உதவி கலெக்டர் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த பெரப்பேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 30). இவருக்கும், சோளிங்கரை அடுத்த சூரைமோட்டூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை-மகேஸ்வரி தம்பதியரின் மகள் வான்மதி (26) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் வான்மதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தக வல் அறிந்ததும் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட வான்மதிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா விசாரணை நடத்தி வருகிறார்.

    • எலக்ட்ரிக் சாதனங்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த வீரரெட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46).

    இவர் ராணிப் பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் சினிமா தியேட்டர் நடத்தி வருகிறார். இந்தநிலை யில் விஜய்யின் வாரிசு படத்தை நேற்று மாலை 6 மணி அளவில் முதல் ஷோ நடத்துவதற்காக சோதனை செய்துள்ளார்.

    அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு திரை மற்றும் ஸ்பீக்கர், ஒயர்கள் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்தினால் ஜெயபிரகாசுக்கும லேசான தீ காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்திய குடியரசு கட்சி மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) தமிழ்நாடு, மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கருமலை தலைமை தாங்கினார்.

    ஒருங்கிணைப்பாளர் என்.பி.வெங்கடேசன், பொதுச்செயலாளர் என்ஜினீயர் கே.பி. ஆறுமுகம், செயல் தலைவர் எம்.சிவன், பொருளாளர் எம். அண்ணாமலை, அமைப்பு செயலாளர் வி.எஸ்.குமரேசன், கொள்கை பரப்பு செயலாளர் எம்.கே.கே.வேலுசாமி ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஏ.மாரியப்பன், கே.ஆர். அண்ணாதுரை, பி.எஸ்.மணியன், தலைமை நிலைய செயலாளர் சி. ஏழுமலை, துணை செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், ஏ. கருணாகரன், டி.ராஜ்குமார், பி.சேட்டு, இளைஞரணி துணைத்தலைவர் வி.சம்பத், தொழிற்சங்க துணை செயலாளர் பி. பழனி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆர்.முரளி குமார் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய செயலாளர் ஏலகிரி எச்.கோபிநாதன், கடலூர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போலி சான்றிதழ் தமிழகம் முழுவதும் ஆதி திராவிட மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டது. இந்த பஞ்சமி நிலங்களை அவர்களை தவிர வேறு நபர்கள் சட்டத்துக்கு புறம்பாக அனுபவித்து வருகிறார்கள்.

    இதனை மீட்டெடுக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சட்டசபையில் அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் எஸ்.சி., எஸ்.டி. மக்களின் பெயரில் போலி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வழங்கும் அதிகாரிகளையும், முறைகேடாக சான்றிதழ் பெறுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ தனி வங்கி எஸ்.சி., எஸ்.டி. மக்கள் சுய தொழில் செய்து பொருளாதாரத்தில் முன்னேற தாட்கோ திட்டத்தின் தமிழகத்தில் தாட்கோ தனி வங்கி ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிராக சாதிய கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

    குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவத்தில் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து விரைவில் மாநில கவர்னரை இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) நிர்வாக குழுவினர் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ×