என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சேக்முகமது ( வயது 35). இவர் சம்பவத்தன்று இரவு புதுக்கோட்டையில் இருந்த ஆலங்குடி வழியாக கறம்பக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மரவம்பட்டி என்ற இடத்தில் வரும்போது திடீரென நாய் சாலையின் குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறிய சேக்முகமது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பகுடிபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேக் முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பத்தரசர் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (வயது 51). விவசாயியான இவர், தனது வீட்டருகே உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தனது 11 வயது மகன் சோமையாவையும் அழைத்து சென்று, அவனை குளிக்க வைத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.
பிறகு அவர் கண்மாயில் இறங்கி குளித்துள்ளார். அப்போது திடீரென கைலாசம், நடு கண்மாயின் ஆழப்பகுதியில் மூழ்கிய நிலையில் கையை மட்டும் அசைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், கைலாசத்தை காப்பாற்ற முயற்சி செய்தும், முடியாததால், போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை கைலாசம் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். உடலை பெற்ற போலீசார், அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது59). பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி சாந்தி.இந்த தம்பதியருக்கு கற்பகம் (31) என்ற மகளும், விக்னேஷ் (28) என்ற மகனும் உள்ளனர்.
இதில் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. விக்னேஷ் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நாளை மறுதினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று சுந்தரலிங்கம் தனது மனைவியுடன், சென்று வல்லம்பக்காட்டில் உள்ள மகள் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.
பின்னர் அவர் மட்டும் தனியாக மூக்குடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது இரவு 8 மணி அளவில் தனியாக இருந்த சுந்தரலிங்கத்திடம் 3 இளைஞர்கள் வந்து முகவரி கேட்டு விசாரித்துள்ளனர்.
இதையடுத்து அவர் பதில் கூறிக் கொண்டிருக்கையில், திடீரென ஒருவன் கையில் இருந்து மயக்கப் பொடியை சுந்தரலிங்கம் முகத்தில் தூவினான். இதில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
பின்னர் கொள்ளையர்கள் வேகவேகமாகபடுக்கை அறைக்கு சென்றனர். மேலும் கொள்ளையன் ஒருவன் சுந்தரலிங்கத்தின் கையில் கத்தியால் கீறிவிட்டு பீரோ சாவியை கேட்டான். அவர் கொடுக்க மறுக்கவே அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்துபோன அவர் பீரோ சாவியை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பீரோவில் இருந்த ரூ. 9 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடம் பிரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சுந்தரலிங்கத்தை மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்தீபன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் தாக்கி, கத்தி முனையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முன்பு இல்லாத வகையில் இந்த வருடம் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் விராலிமலை வட்டார பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்கள் நிரம்பி கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பெரிய குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பி நேற்று காலை கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது.
இதையறிந்த அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்ததுடன் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்கும் விதமாக மலர்கள் தூவியும், பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர் காவல் தெய்வத்திற்கு தேங்காய் உடைத்து வழிபட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.






