search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அறந்தாங்கி அருகே வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் குத்தி ரூ.9 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை

    வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் தாக்கி, கத்தி முனையில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது59). பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி சாந்தி.இந்த தம்பதியருக்கு கற்பகம் (31) என்ற மகளும், விக்னேஷ் (28) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. விக்னேஷ் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நாளை மறுதினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சுந்தரலிங்கம் தனது மனைவியுடன், சென்று வல்லம்பக்காட்டில் உள்ள மகள் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

    பின்னர் அவர் மட்டும் தனியாக மூக்குடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது இரவு 8 மணி அளவில் தனியாக இருந்த சுந்தரலிங்கத்திடம் 3 இளைஞர்கள் வந்து முகவரி கேட்டு விசாரித்துள்ளனர்.

    இதையடுத்து அவர் பதில் கூறிக் கொண்டிருக்கையில், திடீரென ஒருவன் கையில் இருந்து மயக்கப் பொடியை சுந்தரலிங்கம் முகத்தில் தூவினான். இதில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

    பின்னர் கொள்ளையர்கள் வேகவேகமாகபடுக்கை அறைக்கு சென்றனர். மேலும் கொள்ளையன் ஒருவன் சுந்தரலிங்கத்தின் கையில் கத்தியால் கீறிவிட்டு பீரோ சாவியை கேட்டான். அவர் கொடுக்க மறுக்கவே அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளான்.

    இதனால் பயந்துபோன அவர் பீரோ சாவியை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பீரோவில் இருந்த ரூ. 9 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடம் பிரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சுந்தரலிங்கத்தை மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்தீபன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் தாக்கி, கத்தி முனையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×