என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்
- கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கற்றல் மற்றும் பேச்சு பயிற்சி வழங்கிட தலா ரூ.24,250 மதிப்பீட்டில் ஆவாஸ் செயலியுடன் கூடிய கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 294 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கற்றல் மற்றும் பேச்சு பயிற்சி வழங்கிட தலா ரூ.24,250 மதிப்பீட்டில் ஆவாஸ் செயலியுடன் கூடிய கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
மேலும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,350 மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரமும் என ஆகமொத்தம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,29,350 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
- தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2022 ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக 24.06.2022 முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம்-1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஜூலை –2022 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.07.2022 ஆகும்.
மேலும், விபரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அரசு தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 04322-221584, 9486311243, அரசு தொழிற் பயிற்சி நிலையம், விராலிமலை 9865447581, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை, 9443184841 ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பெற்றுவருகிறார்.
- மாமியாருக்கு சிறை தண்டனை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் உள்ள எம்.தெற்குதெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி வினோசியா(வயது22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கா தல் திருமணம் செய்த இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வினோசியாவை, அவரது மாமியாரான சீனிவாசனின் மனைவி காந்திமதி(55) வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கடந்த 17-ந் தேதி மழையூர் போலீஸ் நிலையத்தில் வினோசியா புகார் கொடுத்தார். அந்த புகார் மனு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வினோசியாவை காந்திமதி திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வினோசியா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். மேலும் இது குறித்து வினாசியாவின் பெற்றோரக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வினோசியா பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் காந்திமதியை, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர்.
- ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சண்டையை கிளப்பி அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. திட்டம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில யெலாளர் முத்தரசன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் உட்பட நாடு முழுவதும் எல்லாவற்றிலும் ஒரே முறையே இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது.
நாட்டில் ஏழை, பணக்காரர், வீடின்றி நடைபாதையில் குடும்பம் நடத்துவோர், மாட மாளிகையில் வாழ்வோர் என்று பல்வேறு வாழ்க்கை முறை இந்தியாவில் உள்ளது. இதை மாற்றிவிட்டு ஒரே நாடு ஒரே வாழ்க்கை முறைைய கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளதா. மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், 2 முறை மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்கிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சி நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கான ஆட்சியாக இல்லை. குறிப்பிட்ட சில நபர்களுக்கான ஆட்சிதான் நடக்கிறது. இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் யாரும் அச்சமின்றி வாழ முடியவில்லை. அ.தி.மு.க.வில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சண்டையை கிளப்பி, கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. திட்டமிடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
- மன விரக்தியில் செய்து கொண்டார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே கீழாத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் அண்ணாத்துரை (வயது 52) . இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது.
சம்பவத்தன்று வலி அதிகமாக இருக்கவே, மன விரக்தியில் வீட்டில் இருந்து பினாயிலை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
- பிளஸ்-2 படித்து வந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மான்குறிச்சிபட்டியை சேர்ந்தவர் முத்துமுருகன். இவரது மகன் சூர்யா(வயது 17). இவர் நற்சாந்துபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்கிடையே சூர்யா, தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தற்போது படிப்பில் கவனம் செலுத்தும்படியும், படித்து முடித்தபிறகு செல்போன் வாங்கி தருவதாகவும் சூர்யாவிடம் முத்துமுருகன் கூறியதாக தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த சூர்யா கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறி கொக்கியில் வயரால் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துமுருகன் பனையப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ெசல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- காங்கிரசார் நடத்தினர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ராகுல்காந்தி மீது பொய்வழக்கு போட்டு அமலாக்கத்துறை மூலம் விசாரணை செய்ததை கண்டித்தும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமைவகித்தார். திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்புராம் பங்கேற்று போராட்ட கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.
போராட்டத்தில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. வட்டார காங்கிரஸ் தலைவர் வி.கிரிதரன், நகரத்தலைவர் எஸ்.பழனியப்பன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்பி.ராஜேந்திரன் நிர்வாகிகள் ச.சோலையப்பன், எஸ்பி.மணி, ஆர்.பாலுச்சாமி, நாட்டுக்கல் ராஜேந்திரன், வேலாயுதம், சரவணபவன் மணி, தங்கமணி, மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஊதிய உயர்வு வழங்கிடக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் 102 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றிற்கு ரூ 385 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழி லாளர்களுக்கு ஆண்டுக்கொரு முறை ஊதியம் உயர்த்தி வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ரூ 449 ஊதியம் உயர்த்தி வழங்கிட மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களை கடந்த நிலையில், நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு இன்னும் பழைய முறைப்படியே ரூ385 வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இதனைக் கண்டித்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி ஊதியம் உயர்த்தி வழங்கிடக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க அறந்தாங்கி கிளைச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்று வருகின்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதுஅலிஜின்னா, டி ஒய்எஃப்ஐ மாவட்ட தலைவர் கர்ணா, சிபிஎம் நகரச் செயலாளர் கணேசன் 100க்கும் மேற்பட்ட ஓப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாெமாழி கூறினார்.
- நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தடி கொண்ட ஐயனார் திடலில் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. இயக்கத்திற்காக பல்லாண்டு உழைத்த தொண்டர்களை பாராட்டி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகஸே் பொய்யாெமாழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டிய ஒரு காலம் இந்த காலம். புதிய கல்விக் கொள்கை என்பது வரும் போது அதிலுள்ள சாராம்சங்களை எடுத்துக் கூறி நாம் ஏன் அதை எதிர்க்கின்றோம் என்பதை ஏற்கனவே நமது தமிழக முதல்வர் கூயுள்ளார்.
தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தேவையான கல்விக் கொள்கையை உருவாக்க 13 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அதற்கான கூட்டம் கூட கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. மாதந்தோறும் சனிக்கிழமை அதற்கான கூட்டம் நடத்தப்பட்டு ஒரு ஆண்டு காலத்திற்குள் அதற்கான கொள்கையை வடிவமைக்க தமிழக முதல்வர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.
ஆசிரியர் தகுதிதேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டு காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். அதே போல் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தற்போது 13,331 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அனுமதியை முதல்வரிடம் பெற்றுள்ளோம். நிரந்தர பணி என்பது பெரிய செயல் திட்டம்.அதற்கான தேர்வை 5 முதல் 6 லட்சம் பேர் எழுதுவார்கள். இந்த பணிகள முடிய நான்கு அல்லது ஐந்து மாத காலங்கள் ஆகு. அதுவரை ஆரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக கூடாது என்பதால் தான் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் தற்போது பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
13 ஆயிரத்து 331 ஆசிரியர்களில் 8 ஆயிரம் பேரை இந்த ஆணடு தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் நியமனம் செய்து விடுவோம். எஞ்சிய ஆசிரியர்களை அடுத்த ஆண்டுக்குள் பணி நியமனம் செய்வோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- கந்துவட்டி கொடுமைக்கு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- 6 பேர் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜா மகள் அனிதாராஜ்(வயது33). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவர் தான் நடத்தி வரும் கடைக்கு வியாபாரத்திற்காக சின்னப்பா நகர் 2ம் வீதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி இந்திராவிடம்(53) ரூ.1லட்சம் கடன் வாங்கியுள்ளர்.
இதற்காக வட்டியை அவர் செலுத்தி வந்துள்ளார். அசோக் நகரை சேர்ந்த ராதா, காமராஜபுரத்தை சேர்ந்த சித்ரா ஆகியோர் வட்டியை வசூல் செய்துள்ளனர். அனிதாராஜ் வாங்கி ஒரு லட்சத்திற்கு 6லட்சம் வரை கட்டியுள்ளார். இருப்பினும் அசலும் வட்டியும் சேர்த்து மீண்டும் 3லட்சம் தரவேண்டும் என இந்திரா, தனது மகன்கள் மணிகண்டன், பூ பாண்டி, உடன் சென்று அனிதா ராஜை தகாத வார்தைகள் சொல்லி திட்டி மிரட்டியுள்ளனர்.
இதனால் அனிதாரஜ் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை புதுக்கோட்டை தனியா ர் மருத்துவமனையில்த்து சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்நிலையில் அவர் கொடுத்த புகாரின்பேரில் கனேஷ்நகர் போலிசர் இந்திரா உட்பட ஆறு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவினையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் எஸ்.ரகுபதி , சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலினிடம் மன்னர் குடும்பத்தினர் மற்றும் நூற்றாண்டு விழாக்குழுவினர், புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைத்திட அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்அ வர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
- தேசிய சாலையில் கார் அடுத்தடுத்த வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது
- 3 பேர் காயமடைந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு அருகே மேலப்பழுவஞ்சியில் பெருமாநாடுலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் ஒன்று அதிவேகமாக சென்ற நிலையில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களில் மோதிவிட்டு பின்னர் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் புதுக்கோட்டை பெருமாநாடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






