என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கறம்பக்குடி அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை சென்று முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை

    கரம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி மற்றும் பட்டத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சவேரியார் பட்டினம் கிழக்கு, சவேரியார் பட்டினம் மேற்கு, மயிலாடிதெரு மற்றும் புது தெரு ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இவற்றிற்கு மின் வினியோகம் செய்யும் புதுப்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒரு மாத காலமாக பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த நான்கு கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் தடை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை சென்று முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் மஞ்சு விடுதி விளக்கு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் புதுப்பட்டி உதவி மின் பொறியாளர் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வார காலத்திற்குள் மின் மாற்றியை சரி செய்து குடிநீர் மற்றும் மின்விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வீட்டிற்கு செல்ல பாதை வசதி கோரி குடும்பத்தினருடன் 4-ம் வகுப்பு மாணவன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டான்
    • இதையறிந்த கீரமங்கலம் போலீஸ், ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் மகன் இனியவன் (வயது 9). இவர், அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த பல மாதங்களுக்கு முன்பு அன்னதானக் காவேரி கால்வாய் சீரமைக்கப்பட்ட பிறகு கால்வாயின் தெற்கு கரை பக்கம் உள்ள தனது வீட்டிற்கு சென்று வர பாதை வசதி இல்லை. இதனால் கால்வாய் கரையின் தெற்கு பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவு முதல் மாவட்ட கலெக்டர், வருவாய்த்துைற அலுவலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் என பலருக்கும் மனு அனுப்பியிருந்தான். அமைச்சர் மெய்யநாதனிடமும் கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில் சாலை அமைக்க அமைச்சர் கூறியுள்ளார். பல மாதங்கள் கடந்தும் பாதை அமைத்து கொடுக்காததால் பள்ளியின் வெளியில் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த கீரமங்கலம் போலீஸ், ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு போலீசார் செல்போனில் பேசி ஒரு வாரத்திற்கு பிறகு பாதை அமைப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    பள்ளி மாணவன் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    • நண்பன் அறகட்டளையின் மதர் ஃபார் மதர் நேச்சர் தனது சமூகப்பணியாற்றி வருகிறது.
    • இந்த நீர் மேலாண்மை துவக்க விழாவில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நண்பன் அறகட்டளையின் மதர் ஃபார் மதர் நேச்சர் (mother for Mother Nature) இயற்கை விவசாயம் , மகளிர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை என்று பல்வேறு துறையில் தனது சமூகப்பணியாற்றி வருகிறது. தற்போது இந்த நண்பன் mothers for mother Nature, நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குளம், நாச்சான் குளம், வருசாக்குளம் ஆகிய ஊர்களின் நீர்பாசன குளங்கள், மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தும் வேலையை அமெரிக்க தமிழரான நண்பன் குழுமத்தின் நிறுவனர்களான ஜிகே, மணி மற்றும் சக்திவேல் (USA)ஆகியோர் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். இவர்களுடன் பிரீத்தா (USA) இணைந்து நண்பன் எம்எஃப்எம்என்-யை வழிநடத்தி செல்கின்றார்.

     

    இவர்களுடன் காவேரி டெல்டா பகுதியை சார்ந்த நண்பன் நிமல் ராகவன், தங்ககண்ணன், சித்தார்த் ஆகியோரும் கைகோர்த்துள்ளனர். இந்த நீர் மேலாண்மை திட்டத்தில் சுமார் 410 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வருவதன் முலம் 600 கோடி லிட்டர் தண்ணியை சேமிக்க முடியும். இதனால் சுமார் 12,000 விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவர். மேலும் இந்த குளத்தை தூர்வருவதன் முலம் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீர் 40 முதல் 100 அடிக்குள் கிடைக்க வாய்ப்பு ஏற்ப்படும் என்கின்றனர் இந்த அறக்கட்டளை குழுவினர்.

    இந்தப் பணியை செய்து முடிக்க இரண்டு மாதம் கால அவகாசம் ஆகும் எனவும் இந்த பணிக்காக புத்தம்புதியதாக ₹37.50 லட்சம் மதிப்புள்ள பொக்லைன் எந்திரத்தை நண்பன் MFMN மக்கள் பயண்பாட்டுக்காக வழங்கியுள்ளது. இந்த 410 ஏக்கர் பரப்பளவுள்ள குளங்களை தூர்வார ஆகும் எரிபொருள் செலவான ₹3 முதல் ₹4 லட்சத்தையும் நண்பன் அறங்கடளை ஏற்க்கும் என்றும் தெரிவித்தனர்.



    இந்த நீர் மேலாண்மை துவக்க விழாவில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நண்பன் என்பது எவ்வித பிறதி பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே, அதேபோல் இந்த நண்பன் அறக்கட்டளையின் வெளிநாடு வாழ் தமிழர்கள் எந்த பலனும் எதிர்பார்க்காமல் இந்த ₹37.5லட்சம் மதிப்புள்ள புத்தம்புதிய பொக்லைன் எந்திரம் வழங்கி நீர் மேலாண்மைக்கு உதவுகிறார்கள். நீரின் தேவை அறிந்து இவர்கள் செய்யும் உதவி மிகப்பெரியது. இந்த அறக்கட்டளை மேலும் வளர வேண்டும், இவர்கள் சமூகப் பணி தொடர வேண்டும். குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் முக்கியமோ அதே போல் மனித குலத்திற்கு நீரின் தேவை முக்கியம், அதை பாதுகாக்க வேண்டியது மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.

    • மாற்று தேதிகளில் ஜல்லிக்கட்டை நடத்த விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்று தேதிகளில் நடத்தவும் விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். விழா கமிட்டியினரும், பொதுமக்களும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏறபட்டது.

    • தாட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில் இளைஞர்களுக்கு மானிய உதவித்தொகை வழங்கப்பட்டது
    • ரூ.3.90 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, தென்னலூர் கிராமத்தில், தாட்கோ திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.இம்முகாமில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநரால் தாட்கோ திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.இந்த விழிப்புணர்வு முகாமில் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ், சுற்றுலா வாகனம் வாங்குவதற்கு திட்டத்தொகை ரூ.10,79,088ல் தாட்கோ மானியம் ரூ.2,25,000 மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பால்மாடு வாங்குவதற்கு திட்டத்தொகை ரூ.5,50,000ல் தாட்கோ மானியம் ரூ.1,65,000 வழங்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.இம்முகாமில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம், தனி வட்டாட்சியர் ஜமுனா, வட்டாட்சியர் வெள்ளைசாமி மற்றும் அலுவலர்கள், தென்னலூர் பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை
    • புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் தேடி வருகின்றனர்

    ஆலங்குடி

    ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் மேற்கு பகுதியைச் சேர்ந்த பவ ளத்தாள்புரம் குருநாதன் என்பவரின் மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் உறவினர்களிடம் சுற்றி தேடி பார்த்து வி சாரணை செய்தும் காணவில்லை. இது குறித்து குருநாதன் வடகாடு போலீசில் குருநாதன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து மாயமான கலைச்செல்வியை தேடி வருகிறார்.

    இதேபோல ஆலங்குடி அருகே உள்ள கல்லிக்கொல்லையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மனைவி செந்தமிழ் ( வயது 22 ), இவர்களின் குழந்தை கவின் (வயது 2). செந்தமிழ் தனது 2 வயது குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.இது குறித்து புள்ளான்விடுதி சீரியார் தெருவை சேர்ந்த செந்தமிழினின் தந்தை செல்லத்துரை வடகாடு போலீசில் மகள் குழந்தை ஆகிய இருவரையும் காணவில்லை என் று கொடுத்தார். புகாரின் பேரில் வடகாடு காவல் ஆய்வாளர் ஜெகதீசன் வழக்குபதிவு செய்து தாய் குழந்தையை தேடி வருகின்றனர்.

    • வீட்டிற்குள் நுைழந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு ஓட்டம்
    • தாக்குதலுக்கு உள்ளான முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    ஆலங்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் தெற்கு ரத வீதியில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 85). இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்தனர். இதனை பார்த்த சண்முகம் யார் நீங்கள், எதற்காக வீட்டிற்குள் வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். பதில் ஏதும் கூறத மர்மநபர்கள், சண்முகத்தை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த மோதிரங்கள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் காயமடைந்த சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்காததால் குழப்பம்
    • ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள்,மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி 2ம் தேதி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா ஆறாம் தேதி நடைபெறும் என்று விழா குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இன்று வரை அதற்கான எந்த அனுமதி உத்தரவும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. 6ம்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக தச்சங்குறிச்சி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவுற்ற நிலையில் உரிய அனுமதி வராததால் விழா குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழா தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டால், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள்,விழா குழுவினர் ,கிராம பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் தேவையற்ற குழப்பம் தீரும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • கோதைமங்களத்தில் வறட்சியால் பயிர்கள் வாடியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
    • அரசு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரிக்கை

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோதைமங்களம் பகுதியில் சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் என்ற நிலையில் இப்பகுதியில் போதிய மழை இல்லாததாலும், வரத்துவாரி மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வராததாலும் இப்பகுதி விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றனர். விவசாயம் செய்து 150 நாட்களை கடந்த நிலையில் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதால், விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் வட்டிக்கு மற்றும் வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்திருந்தோம், ஆனால் பயிர்கள் வளர்ந்து கதிர் அறுக்கும் தருவாயில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டது. எங்கள் பகுதி கண்மாய்க்கு வர வேண்டிய வரத்து வாய்க்கால்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கண்மாய் வர வேண்டிய உபரிநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அருகாமையில் ஓடக்கூடிய தண்ணீரை முறையாக வரத்து வாய்க்கால் தூர்வாரியிருந்தால் எங்கள் பகுதி விவசாயம் செழித்திருக்கும், ஆனால் அதிகாரிகள் யாரும் இதற்கு முற்படவில்லை.வரத்து வாரி தூர் வாரப்படாததாலும், போதிய மழை இல்லாததாலும் கைக்கு வந்த விவசாயம் கருகி போய்விட்டது.இந்த சூழ்நிலையில் இந்தாண்டு பொங்கல் எங்களுக்கு கசப்பான பொங்கலாக தோன்றுகிறது. எனவே தமிழ அரசு உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் கிடைக்கவும், வரத்து வாரியை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 44). பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் அருகே உள்ள வைராண்டி கண்மாயில் வெளியூரில் இருந்து வந்திருந்த தனது உறவினர்கள் 3 பேருடன் குளிக்கச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கே வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த அய்யப்பன், முத்துராமன் ஆகியோர் இந்த குளத்தில் நீங்களெல்லாம் குளிக்கக் கூடாது என கூறியுள்ளனர். அதற்கு ஸ்ரீதேவி உள்ளிட்ட பெண்கள் ஏன் என்று கேட்டுள்ளனர். அதற்கு அய்யப்பன், முத்துராமன் இருவரும் சேர்ந்து அவர்களின் சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசியதுடன் கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதனால் கடுமையான அவமானம் அடைந்த அவர்கள் காயங்களுடன் அங்கிருந்து அழுதுகொண்டே புறப்பட்டு சென்றனர். பின்னர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நாகுடி போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இரட்டை குவளை முறை, கோவிலுக்குள் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசி தாக்கிய சம்பவம் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் எச்சரிக்கை
    • இந்த பகுதியில் தேங்கி இருக்கும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் அகற்றி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபால பட்டினம் அவுலியா நகரில் 250க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடைகள், சகதிகள் தேங்கி கிடக்கின்றன. இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பல நோய்கள் உருவாக கூடிய வகையில் அவலமான நிலை இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அப்பகுதி மக்களுடன் பார்வையிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, குழந்தைகள், பெரியவர்களை பாதிக்ககூடிய வகையில் இந்த பகுதியில் தேங்கி இருக்கும் சாக்கடை, சகதி மற்றும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் அகற்றி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். துாய்மை பணி மேற்கொள்ளா விட்டால், இங்கு வாழும் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி மிக பெரிய மறியல் போராட்டம் நடத்தும் என்றுஅவர் கூறினார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள். எம்.எஸ் கலந்தர், அமீர் ஆகியோர் உடன் இருந்தனர்.


    • புதுக்கோட்டையில் நாளை கே.கே. செல்வகுமார் தலைமையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்
    • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் கலந்து கொள்கிறார்கள்

    புதுக்கோட்டை:

    வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பன்நெடுங்கால வரலாற்றை திரிக்கும் வகையிலான புதுக்கோட்டை நகர் மன்றத்தின் தீர்மானத்தை கண்டித்தும், புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலையை நிறுவிட வலியுறுத்தியும், முத்தரையர் சமூகத்தை தவறாக பேசியதை கண்டித்து நாளை(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தமிழர் தேசம் கட்சியின் தலைவருமான கே.கே. செல்வகுமார் தலைமை தாங்குகிறார். இதில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் கலந்து கொள்கிறார்கள்.

    ×