என் மலர்
பெரம்பலூர்
- சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
- சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் பிச்சை மகன் பாலாஜி (வயது25). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார். இதையறிந்த அச்சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பாலாஜியை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அடிக்கடி நெஞ்சு வலியால் அவதிபட்டு வந்தவர்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன் தீனா (வயது 22). இவர் 12-ம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, அதே பகுதியில் ஒலிபெருக்கி (மைக்-செட்) ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீனா மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்ததாம். இதனால் அவரது பெற்றோர் அவரை அவ்வப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் வீட்டில் உள்ள அறையில் தீனா தூங்க சென்றார். நேற்று அதிகாலை தீனாவின் தாய் அவரது அறையை பார்த்தபோது, தீனா சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப்பார்த்த அவரது தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் அவர் சுற்றி திரிந்த போது கைது
- போலீசாரின் ரோந்து பணியின் போது சிக்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையிலான போலீசார் அன்னமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னையன்(வயது 45) என்பவர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சின்னையனை கைது செய்து அவரிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளின் பிரசவத்திற்காக வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
செந்துறை தாலுகா, அயன் தத்தனூர், காலனி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அசலாம்பாள் (வயது 53). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் 2-வது மகள் லலிதாவை (25) பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே லலிதாவுக்கு முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான லலிதா கடந்த 25-ந்தேதி காலை பிரசவத்திற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மதியமே லலிதாவுக்கு சுகப்பிரசவம் நடந்து 2-வதும் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லலிதாவை அவரது தாய் அசலாம்பாள் கூடவே இருந்து கவனித்து வந்தார். அப்போது ஒரு குளியலறையின் கதவு நீண்டநேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குளியலறையில் துணிகளை தொங்கவிடும் கம்பியில் அசலாம்பாள் தான் உடுத்தியிருந்த சேலையால் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அசலாம்பாளின் உடலை அவரது குடும்பத்தினர் பார்த்து கதறி அழுதனர்.இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசலாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசலாம்பாள் மனநலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மகளுக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருததுவமனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முடி திருத்தும் தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார்
- சலூன் கடை நடத்த அனுமதி வழங்க லஞ்சம்
பெரம்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 45). இவர் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் எதிரே உள்ள கட்டிடத்தில் முடி திருத்தும் கடையை (சலூன்) பல ஆண்டுகளாக வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சலூன் கடையை தொடர்ந்து நடத்துவதற்கு உரிமம் பெற சிங்காரத்திடம் அக்கோவில் எழுத்தரான பெரம்பலூர் மேட்டு தெருவில் வசித்து வரும் ரவி(58) என்பவர் லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத சிங்காரம் இதுகுறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை சிங்காரத்திடம் கொடுத்து, இதனை கோவில் எழுத்தர் ரவியிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி சிங்காரம் நேற்று மதியம் 2 மணியளவில் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமாசித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரம் லஞ்ச பணத்தை அலுவலகத்தில் பணியில் இருந்த கோவில் எழுத்தர் ரவியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று ரவியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரவியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டதாக தெரிகிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து சலூன் கடையை நடத்துவதற்கு லஞ்சம் வாங்கிய கோவில் எழுத்தர் கைதான சம்பவம் கோவில் அலுவலர்கள், ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான ரவியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதி ஆகும். மேலும் அவர் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலில் தற்காலிக எழுத்தராக பணியில் சேர்ந்தார். அவருக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் பணி நிரந்தரம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
- வலைதளம் மூலம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்தவர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிைறயில் அடைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 20). இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சனப்டீல் என்ற வலைதளத்தில் பொருட்கள் வாங்கியதில் கார் பரிசு விழுந்திருப்பதாக குறுந்தகவல் வந்தது. மேலும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறிய குற்றவாளிகள் ரூ.6.34 லட்சம் பணத்தை 8 வங்கி கணக்குகள் மூலம் பெற்று ஏமாற்றி விட்டனர்.
இதனால் பணத்தை பறிகொடுத்த ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
டெல்லி ரோகினி என்ற பகுதியில் குற்றவாளிகளான உத்திரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த ரோகித் பால், கிஷன் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அங்கித் பன்சால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் பணத்தையும், ஒரு லேப்டாப், ஒரு பிரிண்டர், 13 செல்போன்கள், 62 சிம்கார்டுகள், 33 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கவர்கள், ஏடிஎம் கார்டுகள், கீ போர்டுகள் மற்றும் பேங்க் செக்புக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி டெல்லி ரோகினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் வழக்கு சொத்துக்களுடன் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பாதல் என்கிற சுஜித் குமார் திவாரி என்பவர் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீஸ்காரர்கள் சதீஷ்குமார், திலிப்குமார், முத்துசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் குற்றவாளிகளை தேடி டெல்லி சென்று கடந்த 25-ந்தேதி அங்குள்ள ரோகினி என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளி பாதல் என்கிற சுஜித் குமார் திவாரியை கைது செய்தனர். பின்னர் கடந்த 26-ந்தேதி அங்குள்ள கோர்ட்டில் அனுமதி பெற்று நேற்று பெரம்பலூர் குற்றவியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்
- மாவட்ட கலெக்டரிடம் கண்டன மனு அளிக்கப்பட்டது
பெரம்பலூர்,
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கொடுமைப்படுத்திய ராஜஸ்தான் அரசை கண்டித்தும், டாக்டர்களை பாதிக்கும் மசோதாவை உடனடியாக ராஜஸ்தான் மாநில அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். பின்னர் மாலை அந்த சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தனர்.
- உப்பு நீர் அதிகளவில் கலந்து வருவதாக குற்றச்சாட்டு
- கல்லாற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க கோரிக்கை
பெரம்பலூர்,
வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த கிணற்று நீரில் உவர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால் கல்லாற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கல்லாற்றில் இருந்து குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணி கடந்த சில நாட்களாக ஆமை வேகத்தில் நடப்பதாக கூறி, நேற்று அந்த பகுதி மக்கள் வி.களத்தூர்- வேப்பந்தட்டை சாலையில் மேட்டுச்சேரி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரபு மற்றும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது விரைவில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தவுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மறியலால் வேப்பந்தட்டை- வி.களத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மே மாதம் விடுமுறை, அங்கன்வாடிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை
- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், வெங்கடேசபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும். ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ேமனகா தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட தலைநகரில் மாலை நேர தர்ணா போராட்டமும், 25-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டமும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.
- புல் வெளிகள் தீயில் கருகி நாசமாகின
- அருகில் கியாஸ் குடோன் உள்ளநிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் காய்ந்த புல்வெளி பகுதியில் நேற்று மாலை தீ பற்றி எரிவதாக பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருகே சோளம் அறுக்கப்பட்டு சோளத்தட்டைகள் இருந்தமையால் காற்றின் மூலம் அங்கு பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் குடோன் உள்ளது. இதனால் தீயணைப்பு துறையினர் கவனமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 200 மீட்டர் வரை புல்வெளிகள் எரிந்து கருகின. அருகில் இருந்த சில குறு மரங்களும் தீயில் கருகின. இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- கள்ளக்காதல் விவகாரத்தை அம்பலப்படுத்தியதால் வெறிச்செயல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்,
மங்களமேட்டை அடுத்துள்ள நம்பியூர் கிராமத்தில் உள்ள நரியோடையை சேர்ந்த அல்லித்துரையின் மகன் அஜித்(வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வதாக அஜித் திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரஜினிக்கும்(45), அஜித்துக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த ரஜினி, அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.அப்போது ஆத்திரம் அடைந்த ரஜினி, தான் உரிமமின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அஜித்தை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அஜித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினிக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை அஜித்தின் உறவினரான ஒரு பெண் கண்டித்ததோடு, மற்றவர்களிடம் இது பற்றி தெரிவித்ததாகவும், இதனால் அந்த பெண்ணுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டபோது, அவரை அஜித் தட்டிக்கேட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ரஜினியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- யாகசாலை பூஜை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள புலியூர் திருப்பதியான ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 25-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் கும்பகோணம் திவ்யதேச தலமான சாரநாதசுவாமி பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ராமன்பட்டர் மற்றும் புலியூர் திருப்பதி கோவில் ஸ்தானீகர் டி.என்.கோபாலன் அய்யங்கார், வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் பட்டாச்சாரியர் குழுவினர் மகா சாந்திஹோமம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. . திராவிட வேதமும், சதுர்வேத மந்திரங்களும் முழங்க ராஜகோபுரம், மூலவர் தாயார் சன்னதி கோபுர கலசங்களில் பட்டர்கள் புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






