என் மலர்
பெரம்பலூர்
தர்மபுரியை சேர்ந்தவர் ராஜ்மோகன்(வயது 42). இவர் பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள கிரீன் சிட்டியில் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, தற்போது மின் வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார்.
இவரது மனைவி கயல்விழி, வாழப்பாடியில் தமிழ்நாடு வனத்துறையில் காப்பாளராக உள்ளார். இதனால் கயல்விழி தனது குழந்தையுடன் வாழப்பாடியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் ராஜ்மோகன் தினமும் வீட்டை பூட்டிவிட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். நேற்று ராஜ்மோகன் தனது வீட்டை பூட்டி விட்டு வங்கிக்கு சென்று விட்டார்.பின்னர் மீண்டும் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த அரை பவுன் தங்க நாணயங்கள் 3, வெள்ளிக்கொலுசு 3 ஜோடி வெள்ளியினாலான தட்டு, குங்கும சிமிழ், விளக்கு, அரைஞாண் கொடி ஆகியவற்றையும், சாமி அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சாமி காசு ரூ.3 ஆயிரத்தையும் திருடிச்சென்று இருந்தது தெரியவந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு குறித்து ராஜ்மோகன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார், ராஜ்மோகன் வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்:
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கொரோனா தாக்கம் சற்று தணிந்துள்ளது.
கடந்த மாதம் 5,000-ஐ தொட்ட கொரோனா தொற்று கடந்த வாரம் முதல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய பரிசோதனை முடிவில் மத்திய மண்டலத்தில் 3,865 பேருக்கு தொற்று உறுதியானது. ஆனால் நேற்று ஒரே நாளில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 22 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 15 பேரும், நாகப்பட்டினத்தில் 13 பேரும், கரூரில் 8 பேரும், புதுக்கோட்டையில் 7 பேரும், அரியலூர், திருவாரூரில் தலா 5 பேரும், தஞ்சாவூரில் 2 பேரும் கொரோனாவுக்கு இரையாகினர்.
நேற்றைய தினம் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 1,004 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால் திருச்சியில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. நேற்றைய தினம் 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த சில தினங்களில் தினசரி பாதிப்பு 500-க்குள் வந்து விடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருவாரூரில் 576 பேரும், நாகப்பட்டினத்தில் 516 பேரும், பாதிக்கப்பட்டனர். கரூரில் கொரோனா தொற்று 337 ஆக குறைந்துள்ளது.
மேலும் புதுக்கோட்டையில் 288 பேரும், அரியலூரில் 246 பேரும், பெரம்பலூரில் 209 பேரும் நேற்று தொற்றுக்கு ஆளாகினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடந்த 2 வாரங்களாக 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றும், தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். இதுவரை பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை 8,500-ஐ கடந்துள்ளது.
கொரோனா தொற்று பெரம்பலூர் நகரில் முன்பு இருந்ததை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் இருந்த அவரது கணவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பார்த்திபன் மற்றும் அவர்களது 2 மகன்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூப்பிரண்டு நிஷாபார்த்திபனும், அவரது கணவர் பார்த்திபனும் முதல்கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசி செலுத்த வேண்டிய கால இடைவெளியில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் துறைமங்கலத்தில் வசித்து வந்தவர் பொன்.கலியபெருமாள் (வயது 76). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரான இவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந்தேதி அவர் உயிரிழந்தார். இதேபோல் அருமடல் கிராமத்தை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் அய்யாசாமி (40) கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இதேபோல விஜயகோபாலபுரத்தை சேர்ந்த மனோகர் (62) என்பவர் கொரோனா பாதிப்புக்கு பின் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 7 பேர் பாதிப்படைந்திருந்தனர். அவர்களில் வெள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 55) மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






