என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே திருமணமாகி 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் அமரேசன். இவரது மகன் தியாகராஜன் (வயது 30). இவருக்கு கடந்த 13-ந்தேதி ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை தியாகராஜன் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கழிவறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை.

    இதனால் அவரது குடும்பத்தினர் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழிவறையின் ஜன்னலில் நைலான் கயிற்றை கட்டி, அதில் தியாகராஜன் தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தியாகராஜனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தியாகராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 4 நாட்களிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சிறுபான்மை இயக்கங்கள், பெரியாரிய அம்பேத்கரிய முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சிறுபான்மை இயக்கங்கள், பெரியாரிய அம்பேத்கரிய முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். 

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைத் தலைவரும், கந்தர்வக்கோட்டை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வுமான சின்னதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். 

    டெல்லி பெண் போலீஸ் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், விசாரணையின்றி சிறையில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள், முற்போக்காளர்களை விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், பீமா கோரேகான் சதி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய கோரியும், உபா என்னும் அடக்குமுறை சட்டத்தை திரும்ப பெற கோரியும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    100 நாள் வேலை கேட்டு வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சியில் ஒவ்வொரு வார்டு பொதுமக்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென சில வார்டுகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கலியமூர்த்தி, துணைத்தலைவர் பானுமதி செங்கமலை, ஊராட்சி செயலாளர் பாலுசாமி ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது முறையாக ஒவ்வொரு வார்டு பகுதி மக்களுக்கும் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை வழங்க இயலாது. எனவே அனைவருக்கும் அந்தந்த வார்டுகளில் வேலை வழங்கும்போது வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மங்களமேடு அருகே பட்டா கேட்டு நரிக்குறவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீக்குளிக்க போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மங்களமேடு:

    மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் நரிக்குறவ மக்கள் காலனியையொட்டியுள்ள சுமார் 333 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20 வருடங்களாக அப்பகுதி மக்கள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என தமிழக அரசு உத்தரவின்பேரில் மேற்படி இடத்தில் பயிரிட தடை விதித்தது. ஆனால் நரிக்குறவ மக்கள் இந்த இடத்திற்கு பட்டா கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நரிக்குறவ மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வருவாய் துறையினருக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் டிராக்டர் உடன் தடையை மீறி நிலத்தை உழவு செய்ய தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எறையூர் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி, விவசாயம் செய்வதை தடுத்தார். அப்போது நரிக்குறவர் மக்கள் டிராக்டருக்கு வைத்திருந்த டீசல் கேனை காட்டி தங்களது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து கொள்ளபோவதாக மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வேப்பந்தட்டை துணை வட்டாட்சியர் சீனிவாசன், வாலிகண்டபுரம் வருவாய் ஆய்வாளர் தங்கமணி, கிராம நிர்வாக அலுவலக பெரியசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதில் சமாதானம் அடைந்த நரிக்குறவ மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் பாதாங்கியை சேர்ந்தவர் மணி (வயது 40) விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த மணி நேற்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேர்வு எழுத வந்திருந்த 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் தொடக்க கல்வி பட்டய தேர்வினை ஆன்லைன் வழியாக நடத்தவும், தேர்வுக்கான மதிப்பெண் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தி மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் தேர்வு எழுத வந்திருந்த 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தமிழ் கற்பித்தல் தேர்வு நடந்தது. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 7 மாணவர்கள், 81 மாணவிகள் என மொத்தம் 88 பேரில், 4 ஆண்கள், 47 மாணவிகள் என மொத்தம் 51 பேர் தேர்வு எழுதினர். மற்ற 37 பேரில் பலர் தேர்வு எழுத மையத்திற்கு வரவில்லை. சிலர் தேர்வை புறக்கணித்து மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (வியாழக்கிழமை) முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் கற்பித்தல் தேர்வு நடக்கிறது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை சாலை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்லசாமி தலைமையில், அச்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவித்து தர ஊதியம் ஆயிரத்து 900 ரூபாய் என மாற்றி புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவை தொகை வழங்கிட வேண்டும். சீருடை சலவைப்படி, விபத்து படி, சைக்கிள் படி வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.

    வேப்பந்தட்டை, குன்னம் உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்களின் வீட்டு வாடகைப்படியை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களில் சிலரை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அவர்கள் சாலை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கொடுத்தனர்.
    பெரம்பலூர் அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த 21 ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் புறவழிச்சாலையோரத்தில் காட்டு கொட்டகையில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 65). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என மொத்தம் 63 ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு, மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து கட்டியுள்ளார்.

    பின்னா் ஆடுகளுக்கு காவல் இருந்த செல்வராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் இரவில் மழை பெய்ததால் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை செல்வராஜ் எழுந்து வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 63 ஆடுகளில், 21 ஆடுகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். காவலுக்கு ஆட்கள் இல்லாமல் இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி, ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் கால்நடை வளர்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனூர், சிறுவயலூர், தெரணி, பிலிமிசை, இரூர், கூத்தூர், கொளக்காநத்தம், அல்லிநகரம், இலந்தைக்குழி ஆகிய 9 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர், செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோரையும், இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயசுதா (தேனூர்), ரேவதி (சிறுவயலூர்), ரமேஷ் (தெரணி), முத்துச்சாமி (பிலிமிசை), காந்திமதி (இரூர்), சுதா (கூத்தூர்), ராகவன் (கொளக்காநத்தம்), மருதமுத்து (அல்லிநகரம்), அகிலா (இலந்தைக்குழி) ஆகியோரை பாராட்டி நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் விருதுகளை வழங்கினார்.
    பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தொழுதூர் பஸ் நிறுத்தத்திற்கு எதிரே உள்ள நிழற்குடையில் நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கிசின் வழிகாட்டுதலின்பேரில், குரும்பலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்திட வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு உரிய பாதுகாப்பினை தருகிறது. எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகள் செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. வன்கொடுமைகளை எந்த வடிவில் ஏற்படுத்தினாலும், அவற்றை தடுப்பதற்கும், அதற்கான வழக்குகளை நடத்துவதற்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் செயல்படுகிறது. மேலும் அவர் பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வினை அடைந்து, சட்ட பாதுகாப்பினை பெற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகிறது என்பதனை விளக்கி பேசினார்.

    இதையடுத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா பேசுகையில், பொதுமக்களுக்கான சட்ட உதவியினை எளிமையாக கிடைத்திடும் வகையில் சட்ட உதவி மையம் குரும்பலூர் பேரூராட்சியில் செயல்படுகிறது. உடனடி சட்ட உதவியும், விழிப்புணர்வும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது, என்றார்.

    பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி பேசுகையில், அரசின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள், பயன்களை அடைவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். முகாமில் குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டார். முடிவில் வக்கீல் பகுத்தறிவாளன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
    ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கும் சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்காக சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க.வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் செய்தனர்.

    அதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் அ.தி.மு.க. வினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டசெயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில், மறியல் செய்து கண்டண கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சாலை மறியலால் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் அதிமுகவினரை கைது செய்தனர்.
    ×