என் மலர்
பெரம்பலூர்
- தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
- ராமேஸ்வரத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஆட்டோ பயணம்
பெரம்பலூர்,
தமிழ்நாடு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்க மாநில தலைவரும், சமூக ஆர்வலருமான சாகுல் ஹமீது என்பவர் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை ரத்ததானம் குறித்தான விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த ஆகஸ்ட் 21ம்தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஆட்டோ பயணம்
விழிப்புணர்வு பயணம் சிவகங்கை, மதுரை , திண்டுக்கல், கோவை , ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம் வழியாக செப்டம்பர் 21-ந்தேதி சென்னையை சென்றடைந்தது. பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக பெரம்பலூர் வந்தடைந்தது.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் சார்பில் பெரம்பலூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையில் எஸ்ஐ வரதராஜன் முன்னிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து இவரது ரத்த விழிப்புணர்வு ஆட்டோ பயணம் புது பஸ்ஸ்டாண்ட், பாலக்கரை, சங்கு பேட்டை, காமராஜர் வளைவு , ஆத்தூர் சாலை, பெரம்பலூர் காந்தி சிலை வரை மேற்கொள்ளப்பட்டன. அப்போது ரத்த தான அவசியம் குறித்து துண்டு பிரசுரம் மற்றும் துணி பை வழங்கப்பட்டது. பெரம்பலூரில் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன் வழி அனுப்பி வைத்தார்.
பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், சபரி துரைராஜ், செங்குணம் குமார் அய்யாவு, பெரம்பலூர் ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
- ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மையத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் அருகே செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதில் வெள்ளாடு வளர்ப்பு - இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவுசெய்து இலவசமாக பயிற்சி பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை பள்ளிகளில் கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்
- ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்
பெரம்பலூர்,
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 263 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அடுத்த மாதத்திற்கு (அக்டோபர்) தேவையான உணவு பொருட்கள் கடந்த 22-ந்தேதி அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சுகாதாரமான சுவையான உணவு வழங்கப்படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணிக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 95 பொறுப்பு அலுவலர்கள், மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பு அலுவலருக்கும் 2 முதல் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பொறுப்பு அலுவலர்கள், உணவு பொருட்கள் அடுத்த மாதத்தில் பள்ளி வேலை நாட்களுக்கு போதுமான அளவு உள்ளதா? என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் செலவினங்களுக்காக மைய பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.
- பாடாலூரில் உள்ள மக்கள் பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்
- கலெக்டர் கற்பகத்திடம் மனு அளித்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பாடாலூரில் உள்ள குலாலர் சமூகத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாடாலூர்-தெரணி சாலையில் வடபகுதியில் மண்பாண்ட தொழில் செய்யும் குலாலர் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அந்தப்பகுதியில் உள்ள எங்கள் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட காலிமனையில் கடந்த 2002-ம் ஆண்டில் அரசு மூலம் பொது கழிவறைகள் கட்டப்பட்டன. அந்த கழிவறைகள் தற்போது 7 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளன. இந்த நிலையில் தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கழிவறைகளை திறக்க வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் துர்நாற்றம் ஏற்படும். எனவே அந்த கழிவறைகளை முற்றியிலும் இடித்து, நாங்கள் சுகாதாரமாக வாழவும், எங்களின் குல தொழிலான மண்பாண்ட தொழிலை செய்வதற்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
- ஓய்வு பெற்ற பெண் பொறியாளரிடம் 11 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார், மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்
பெரம்பலூர்,
தூத்துக்குடி ராமசாமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 64). ஓய்வு பெற்ற இளமின் பொறியாளரான இவர் பெரம்பலூர் கோல்டன் சிட்டி 8-வது தெருவில் வாடகை வீட்டில் உள்ள தனது மகன் விஷ்ணு சக்கரவர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். விஷ்ணு சக்கரவர்த்தி வேப்பூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குமாஸ்தாவாகவும், அவரது மனைவி சத்யபிரியா அரியலூரில் உள்ள வங்கி ஒன்றில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.இதனால் இவர்களின் 3½ வயது ஆண் குழந்தையை முனீஸ்வரி கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் முனீஸ்வரி பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள கடை ஒன்றில் காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முனீஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக முனீஸ்வரி பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்
- வரும் எம்பி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்
- பெண்களுக்கு இருபது தொகுதி, ஆண்களுக்கு 20 தொகுதி ஒதுக்கி இந்த தேர்தலை சந்திப்போம் என்று உறுதி
பெரம்பலூர்,
பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறும்போது,
நீண்ட காலமாக காவிரி தண்ணீரை தர கர்நாடகா மறுத்து வருகின்றனர். முதல்வர் சீத்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் அந்த மண்ணின் மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பது போல் உங்களுக்கு வாக்கு செலுத்திய மக்களுக்கு திமுக ஏன் உண்மையாக இருக்கக் கூடாது.
காவிரி நதிநீர் உரிமை, முல்லை பெரியார் நதி பிரச்சினை, நீட் தேர்வு, கச்சத்தீவு பிரச்சினை என்று அனைத்திற்கும் உச்சநீதிமன்றம் சென்று தான் தீர்வை பெறவேண்டும் என்றால் என்றால், இந்த நாட்டை நிர்வகிப்பது நீதிபதிகளா? சட்டமன்றம் , பாராளுமன்றம் எதற்கு? தி.மு.க. காங்கிரஸ் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் நாங்கள் வரவேற்போம். உலக மயம், தனியார் மயம், தாராள மயம், என்பதுதான் பாஜக, காங்கிரஸ் கொள்கை.
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராய் இருக்கிறது. வரும் எம்பி தேர்தலில் யாருடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடு கிறோம். பெண்களுக்கு இருபது தொகுதி, ஆண்க ளுக்கு 20 தொகுதி ஒதுக்கி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அமைப்பு எங்களோடு வருமானால் அது குறித்து யோசிப்போம், இப்போது அதற்கு சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
- அகரம்சீகூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- திருமணம் நிச்சயமான நிலையில் பரிதாபம்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமம் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது 32). விவசாய கூலித்தொழிலாளியான இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ்குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயமான நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெரம்பலூரில் தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடந்தது
- கூட்டத்தில் 55 தொண்டு நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். துளிகள் அறக்கட்டளை நிறுவனர் சூர்யகுமார் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் மற்றும் மாநில துணை தலைவர்கள் சசிக்குமார், இளங்கோவன் உட்பட பலர் பேசினர்.
புதிய நிர்வாகிகளாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆசைத்தம்பி , மாவட்ட தலைவராக ராமலிங்கம், மாவட்ட செயலாளராக சிற்றம்பலம், பொருளாளராக சூர்யகுமார், துணை தலைவராக ஞானபிரகாஷ், துணை செயலாளராக சரஸ்வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் 55 தொண்டு நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சிற்றம்பலம் வரவேற்றார். முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார்.
- பெரம்பலூர் நான்கு ரோட்டில் தவறவிட்ட மணி பர்ஸ் உரிய நபரிடம் ஒப்படைத்த எஸ்.ஐ.
- மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவர் எஸ்ஐக்கு நனறி கூறினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்கு ரோட்டில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் டிராபிக் எஸ்ஐ வரதராஜன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்ததை கண்டு அதனை எடுத்த அவர், அந்த மணிபர்சில் உள்ளே 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 70 குவைத் தினார், ஆதார், பேன் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிலிருந்து செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது அந்த மணிபர்ஸ் பெரம்பலூர் அருகே உள்ள அரசலூர் கிராமத்தைசேர்ந்த கிஷோர் குமார் என்ற மாணவர் டூவிலரில் சென்றபோது தவறவிட்டுவிட்டார் என தெரியவந்தது. அவரை வரவழைத்த எஸ்ஐ வரதாராஜன் மணிபர்சை ஒப்படைத்தார். மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவன் எஸ்ஐ வரதராஜன் மற்றும் ஊர்க்காவல் படை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- பெரம்பலூரில் பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடந்தது
- முதல்வர், பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தங்கராசு, ராமராஜ், கண்ணன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் கண்ணன், மாநில பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இதில் ஆவண எழுத்தர் நலநிதிக்குழுவிற்கு பத்திரம் -நகல் எழுவோர் சங்கத்தினை அங்கீகாரம் செய்தமைக்கும், சங்க நபர்களை நலநிதிய இயக்குநர்களாக தேர்வு செய்தமைக்கும் , நல நிதிய பயனாளிகளுக்கும் பலனளித்தமைக்கும் அரசுக்கும், முதல்வர், பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடத்துவது, நலநிதியின் செயலாளர் பொறுப்பு மற்றும் நலநிதிய இயக்குநர்கள் கூடுதலாக 5 நபர்களை கோருதல், மாநில பொதுக்குழு கூட்டம் நடத்துதல் என்பது உட்படபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கமலக்கண்ணன் வரவேற்றார். முடிவில் அப்துல் அலிம் நன்றி கூறினார்.
- பெரம்பலூரில் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் தலைமை சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
- விழாவிற்கு முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் தலைமை சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. விழாவிற்கு முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சாசன தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தார். சின்னசாமி சங்க செயல் அறிக்கை குறித்து பேசினார். மாநில தலைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் நஜிமுதீன் சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினார். கவுர தலைவர் கருணாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ரெங்கராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் புருஷேத்தமன், குமரவேல், அருண் உட்பட பலர் பேசினர்.
புதிய தலைவராக செல்வம், செயலாளராக சுப்ரமணியன், பொருளாளராக துரை, கௌரவதலைவராக கருணாகரன், துணை தலைவர்களாக அப்துல்லா, சுந்தரம், துணை செயலாளராக சிவராஜ், இணை செயலாளராக பாஸ்கரன், செய்தி தொடர்பாளராக நடராஜ், ஆலோசகர்களாக ரெங்கராஜ், குமரவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முன்னாள் செயலாளர் விக்னேஷ்வர், பொருளாளர் சின்னசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் துரை நன்றி கூறினார்.
- பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்கள் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், 8 மண்டல தலைவர்கள், 38 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படை வீரர்கள் மற்றும் வீரமங்கையர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கேசவராஜன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் பொய்யாமொழி, ஆலயம் திலக், மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் வில்வலிங்கம், மாநில மகளிர் அணி தலைவி சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் படைவீரர்கள் நலன் குறித்தும், அரசின் திட்டப்பலன்கள் பெறுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முன்னாள் முப்படை சங்கங்களை ஒருங்கிணைப்பது, அமைப்புக்கு தேவையான உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் சிஎஸ்டி கேண்டீன், இசிஹெச்எஸ் மருத்துவமனை, உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் அலுவலகம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், 8 மண்டல தலைவர்கள், 38 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சுப்புராஜ் வரவேற்றார், முடிவில் துணை பொதுசெயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.






