என் மலர்
பெரம்பலூர்
- மனவிரக்தியில் தாய் தற்கொலை செய்து ெகாண்டார்.
- வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 20) இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து விஜயலட்சுமி தனது குழந்தைக்கு புகட்ட தாய்ப்பால் சுரக்கவில்லையாம்.
சில தினங்கள் காத்திருந்தும் தாய்ப்பால் சுரக்காததால் மனம் உடைந்த விஜயலட்சுமி கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக விஜயலட்சுமியை அரியலூர், பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜயலட்சுமி இறந்தார்.
இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை தகவலின் பேரில் குன்னம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விஜயலட்சுமியின் கணவர் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்தும், விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகி 1 வருடங்களே ஆகின்ற காரணத்தால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். அதன் பேரில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் குறித்து கொளப்பாடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தை இறப்பு சம்பவத்தில் தந்தைக்கு ரூ.8 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது
- 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும்
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தவசி மகன் ராஜா . இவரது ஒரு வயது குழந்தையான சந்தோஷ்க்கு சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சனைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையை அனுகியுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறினர். இதையடுதது அறுவை சிகிச்சை செய்யயும் முன் எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டு குழந்தை சந்தோஷ்க்கு கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 30ம்தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை செய்யும் முன் மயக்க மருந்து நிபுணர்களின் தவறான சிகிச்சையால் அதாவது மருந்தால் தூண்டப்பட்ட மூச்சுதிணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்ததை போலீசுக்கு தெரிவிக்காமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் குழந்தை பெற்றோரிடம் இயற்கையாக இறந்துவிட்டது என கூறி இயற்கை மரணம் என தவறான இறப்பு சான்றிதழ் கொடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவிட்டனர். இதை நம்பிய பெற்றோர் உடலை பெற்று கொண்டு அடக்கம் செய்துவிட்டனர். இந்த குழந்தை இயற்கையான இறப்பு என நகராட்சியும் சான்றிதழ் கொடுத்துள்ளது.
பின்னர் சிறிய அறுவை சிகிச்சை என்பதால் இயற்கையான மரணம் ஏற்பட வாய்ப்பில்லை, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்திருக்கும் என சந்தேகமடைந்த குழந்தையின் தந்தை ராஜா, தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தவறான மருத்துவ சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என கண்டறியப்பட்டதால் குழந்தையின் தந்தைக்கு நஷ்ட ஈடாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், மருத்துவம் மற்றும் இதர செலவுக்ககாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ 10 ஆயிரம் என மொத்தம் 8 லட்சத்து 10 ஆயிரம் தொகையை மருத்துவமனை நிர்வாகம் 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும், இல்லையென்றால் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.
- உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
- 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு மட்டும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண் 4 மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய வி,களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண் 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (9ம்தேதி.) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது .
இதன்காரணமாக தேர்தல் நடைபெறும் கிராம பகுதிகளுக்கு மட்டும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்நாளில் மேற்கூறிய கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
- காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டது.
- 15-ந் தேதி வரை செயல்படும்
பெரம்பலூர்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவும் வகையில் பெரம்பலுர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் வரும் 15ம்தேதி வரை செயல்படும். உதவி மைய எண் 98406 93775.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது உதவி மைய எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என எஸ்பி மணி தெரிவித்துள்ளார்.
- பூலாம்பாடி பேரூர் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் மக்கள் மற்றும் பிரபல தொழிலதிபர் பிரகதீஷ் குமார் முயற்சியால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
முன்னதாக யாகசாலைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கும்பாபிஷேக விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது. இந்த மண்டல பூஜை தொடக்க விழாவில் தொழிலதிபர் பிரகதீஸ் குமார், ரந்தினி பிரகதீஸ் குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. 48 நாட்கள் மண்டல பூஜைக்கு பின்னர் மறு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தடைபட்டு நின்ற கோவில் கும்பாபிஷேக விழா சிறப்புற நடந்ததால் பூலாம்பாடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நகராட்சி ஆணையர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 16, 17-வது வார்டு பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்டவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது 17-வது நகர்மன்ற வார்டு உறுப்பினர் துரை காமராஜ் உடனிருந்தார். மேலும் வார்டுகளில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்."
- மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
- உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.7.2022 முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10ம் வகுப்பு தோல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து 30.6.2022 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2022 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும் இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் ஆகஸ்ட்30-ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க ஆகஸ்ட்30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சரிவர பணி வழங்காததை கண்டித்து நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் அருகே உள்ள நத்தகாடு பகுதியில் 150-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற்று ஒவ்வொரு நாளும் பகுதி வாரியாக வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டும் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு சரிவர பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் டீ களத்தூர்- மணச்சநல்லூர் செல்லும் சாலையில் நத்தக்காடு பஸ் நிலையத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், இணையவழி சேவை பாதிப்பு காரணமாக அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. இதன்காரணமாக எங்களுக்கு சரிவர வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இணையவழியில் பதியாத தொழிலாளர்கள் வேலை செய்தால்கூட அன்றைய சம்பளமும் அவரது கணக்கில் வரவு வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு நாள்தோறும் பணி வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
- பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
பெரம்பலூர்:
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் இந்திரா நகர் பிரிவு சாலை அருகே நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த கார் சாலையோரத்தில் டயர் பஞ்சராகி நின்ற கார் மீதும் மோதி விட்டு நிற்காமல், அருகே உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்த தஞ்சை சிராஜ் நகரை சேர்ந்த ஜானி பாஷாவின் மனைவி மேரிஜான் (வயது 65) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த காரில் பயணம் செய்த தஞ்சை சிராஜ் நகரை சேர்ந்த ஜஹாங்கீர் மனைவி ஜீனத்பேகம், ரஹீம் மனைவி மகபூபி, பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு ஆசியா நகரை சேர்ந்த அன்வரின் மனைவி சம்சாத்பேகம், மல்லிகை நகரை சேர்ந்த தவுலத் பாஷாவின் மனைவி சுபேதா பேகம், கார் டிரைவர் பட்டுக்கோட்டை பெரிய கடை தெருவை சேர்ந்த தமிழ்வாணனின் மகன் கிருபாகரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
பஞ்சராகி நின்ற காரின் டயருக்கு பஞ்சர் ஓட்டிக்கொண்டிருந்த தண்ணீர்பந்தலை சேர்ந்த மெக்கானிக் அருண், அந்த காரில் வந்த சென்னை அண்ணா நகரை சேர்ந்த முனிசாமி, கொளத்தூரை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரும், மோட்டார் சைக்கிளில் வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, வடபாதியை சேர்ந்த பெரியசாமி (65), நடராஜனின் மனைவி பூபதி (35) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெரியசாமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் நிலைய சுற்றுச்சுவரில் ஓவியங்களை வரைந்து ஓவியர் அழகுப்படுத்தி உள்ளார்.
- பொருட்கள் வாங்க நிதி கொடுத்து நிர்வாகம் உதவியது
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அரியலூர், துறையூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே சுற்றுச்சுவரில் பயணிகள் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் அந்த சுற்றுச்சுவர் மோசமாக காணப்பட்டு வந்ததுடன், துர்நாற்றமும் வீசி வந்தது.
இதனை கண்ட பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள எம்.எம்.நகரை சேர்ந்த செல்வராஜ்-கோகிலா தம்பதியின் மகனும், ஓவியருமான அஜீத் (வயது 23) என்பவர் அந்த சுற்றுச்சுவரை அழகுபடுத்த எண்ணினார்.இதையடுத்து அவர் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் அந்த சுற்றுச்சுவரில் துர்நாற்றத்துக்கு இடையே நின்று தனது சொந்த செலவில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். பின்னர் அவருக்கு நகராட்சி நிர்வாகம் ஓவியங்கள் வரைவதற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க நிதி கொடுத்து உதவியது.
சுற்றுச்சுவரில் தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிடா சண்டை, சேவல் சண்டை மற்றும் கோவில் யாழி சிற்பம், பூம் பூம் மாடு, கோவில் திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதும், பூ கட்டும் பெண்மணியும், பரத நாட்டியம் மற்றும் தண்ணீர் குடங்களை தலையில் சுமந்து செல்லும் சிறுமிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் ஆகியவற்றின் படங்கள் ஓவியங்களாக தத்ரூபமாக வரைந்தார். அஜீத் வரைந்த ஓவியங்களால் அந்த சுற்றுச்சுவர் தற்போது அழகாக காட்சியளிக்கிறது.
- தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளை தோளில் சுமக்கும் அவல நிலையாக உள்ளது.
- வாகனங்களை பழுது நீக்கி தர வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் மூன்று சக்கர தள்ளும் வாகனம் மூலம் காலையில் வீடு தோறும் குப்பைகளை வாங்குவது வழக்கம். தற்பொழுது குப்பை கொண்டு செல்லும் வண்டி பழுதடைந்த நிலையில் உள்ளதால் தூய்மை பணியாளர்கள் தினமும் அதிகாலை நேரங்களில் குப்பை தொட்டியை தோளில் சுமந்து வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாமல் குப்பைகளை அள்ளுவதால் நோய் தொற்று ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் பழுதடைந்த வாகனங்களை சீரமைத்து, தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுதந்திர தினவிழாவில் சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்த பெண் சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- இவ்விருதிற்கான கருத்துருக்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
சுதந்திர தினவிழாவில் சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்த பெண் சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிப்பவர்கள் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 75020 34646, 88388 72443 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






