என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது
    • அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு மற்றும் தொழிற்பயிற்சி பெற பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    13 நாள்களுக்கு காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை இலவசமாக காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு, தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இதில், நகை வடிவமைப்பு, வெளிப்புற, உள்புற வடிவமைப்பு, மூட்டு வடிவமைப்பு, நகைகளின் வெவ்வேறு பகுதிகளை அசெம்பிளிங் செய்து புதிய நகைகளை உருவாக்குதல், மோதிரம், நெக்லஸ், வளையல்கள், சங்கிலி, ஸ்டெட், டாலா்கள் செய்தல், டெரகோட்டா, மணப்பெண் நகை அலங்கார செட், நகைகளை பேக்கிங் செய்யும் முறை மற்றும் விலை நிா்ணயம் செய்தல் ஆகியவவை வல்லுநா்களால் பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்,

    விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

    தேவையான சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைத்து, ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்பவா்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, ஆவினங்குடியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஹரிஷ் (வயது 20). தொழுதூர் அருகே பாளையத்தை சேர்ந்த கருப்பையாவின் மகன் பூபதி. பெண்ணாடத்தை சேர்ந்தவர் சந்துரு. நண்பர்களான இவர்கள் 3 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஹரிஷ், பூபதி, சந்துரு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வூதியா்களின் வாழ்நாள் சான்றிதழுக்கான நோ்காணல் நடைபெற்றது
    • சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க அலுவலகத்தில், ஓய்வூதியா்களின் வாழ்நாள் சான்றிதழுக்கான நோ்காணல் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்டக் கருவூல அலுவலா் பாா்வதி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் முத்துசாமி, செயலா் மருதமுத்து, பொருளாளா் ஆதிசிவம் முன்னிலை வகித்தனா். கருவூல அலுவலா்கள் வகிதாபானு, வெற்றிவேல், சுரேந்தா், அண்ணாதுரை ஆகியோா் நோ்காணல் மேற்கொண்டனா். இதில் ஓய்வூதியா்கள் பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலா் மணி, மகளிரணிச் செயலா் வசந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா். 

    • இரும்புக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மத்திய சிறையில் அடைத்தனா்.

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் வடக்குமாதவி சாலை, மல்லிகை நகரைச் சோ்ந்தவா் ஜெ. பரத்குமாா் (எ) பகடுராம் (35). ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இவா், கடந்த 15 ஆண்டுகளாக பெரம்பலூரில் குடியிருந்து, சொந்தமாக இரும்புக் கடை வைத்திருந்தாா். கடந்த 6- ஆம் தேதி இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற பரத்குமாரை, பெரம்பலூா் ஆலம்பாடி சாலை ஆ. கமல் (25), திருநகா் சூரி மகன் காா்த்தி (27) ஆகியோா் பீா் பாட்டிலால் குத்தியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடலை அருகிலுள்ள கிணற்றில் போட்டுச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கமல், அவரது மனைவி நித்யா (25), காா்த்திக் (27) , சஞ்சய்ரோஷன் (19), பரதன்ராஜ் (30) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். கைது செய்யப்பட்ட 5 பேரையும் பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்திய காவல்துறையினா், பின்னா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

    • பாரம்பரிய விதைத் திருவிழா நடைபெற்றது
    • இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் பாரம்பரிய விதைத் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் பங்கேற்றனா். தமிழன் விதை இயற்கை வேளாண்மை அமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவில் மரபு நெல், தானியங்கள், சிறு தானியங்கள், கீரைகள், நாட்டுக் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள், மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மூலிகைகள் ஆகியவற்றின் விதைகள், துணிப்பைகள், மரக்கன்றுகள், இயற்கை விவசாய முறைகளை விவரிக்கும் புத்தகங்கள், சமையல் பொருள்கள் ஆகியவை விற்பனைக்காகவும், பாா்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.

    மேலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப், குளியல் பொடி, பல்பொடி, கல்லிமடையான் அரிசியில் செய்யப்பட்ட பொங்கல், பச்சரிசிப் புட்டு, வரகு அரிசி தயிா் சாதம், மாப்பிள்ளை சம்பா சாம்பாா் சாதம், கேழ்வரகு பாயாசம், சோளக்கூழ், கொய்யா தேநீா் ஆகிய உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்களும், இயற்கை ஆா்வலா்களும் பங்கேற்று, பாரம்பரிய விதைகளைப் பாா்வையிட்டு வாங்கிச் சென்றனா். இதில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் இயற்கை ஆா்வலா்களுக்கு, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    • மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது
    • குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்

    பெரம்பலூா்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில், செயற்பொறியாளா்கள் முன்னிலையில், பெரம்பலூரிலுள்ள அலுவலகத்தில் மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம் நாளை (12-ந் தேதி) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். எனவே பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து, பயன்பெறலாம் என செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

    • பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பீல்வாடி கிராமத்தில் உள்ள கல்குவாரியை தடை செய்ய வேண்டும். குவாரிக்கு அதிகமான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பேச்சுவார்த்தை தர்ணாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்டிருந்த பேப்பரை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்குட்பட்ட பீல்வாடி கிராம மக்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பீல்வாடி கிராமத்தில் உள்ள கல்குவாரியை தடை செய்ய வேண்டும். குவாரிக்கு அதிகமான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இது தொடர்பாக சித்தளி ஊராட்சி மன்றத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளை மீறி குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. குவாரி உரிமத்தை ரத்து செய்து மூடக்கோரி ஒரு ஆண்டு காலமாக மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றனர். பேச்சுவார்த்தை தர்ணாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்டிருந்த பேப்பரை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

    பெரம்பலூர் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களில் சிலரை பேச்சுவார்த்தைக்காக கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து தர்ணாவை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

    • போலீசாரின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது.
    • இதில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ்குமார், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்

    திருச்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் போலீசாரின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது.

    இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், மணிகண்டன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசாரான ரமேஷ், பாலமுருகன், இளவரசன், ஜெயலட்சுமி, கார்த்திகேயன் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதியை வழங்கினார்.

    இதில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ்குமார், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மேலப்புலியூர் தலைவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் கிராம ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், என மொத்தம் 3 பதவியிடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர்.
    • நேற்று (9ம்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஓட்டுப்பதிவுகள் எந்தவித அசாம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்தது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது.

    பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 1 மற்றும் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண்- 4, வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 7, வேப்பூர் ஒன்றியம் கீழப்புலியூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 8 என மொத்தம் ஒரு கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதில் வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவி ஜெகவள்ளியும், இரூர் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மணி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள மேலப்புலியூர் தலைவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் கிராம ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், என மொத்தம் 3 பதவியிடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர்.

    இந்த தேர்லில் மொத்தம் 5 ஆயிரத்து 592 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 11 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    நேற்று (9ம்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஓட்டுப்பதிவுகள் எந்தவித அசாம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்தது.

    இதில் மேலப்பூலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் ஆயிரத்து 604 ஆண்களும், ஆயிரத்து 908 பெண்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 512 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது 71.87 சதவீதமாகும். அதே போல் பிலிமிசை ஊராட்சி 1 வது உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 76 ஆண்களும், 108 பெண்களும் என மொத்தம் 183 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இது 84.32 சதவீதமாகும். வி.களத்தூர் 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 86 ஆண்களும், 152 பெண்களும் என மொத்தம் 238 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது 64 சதவீதமாகும்.தேர்தல் பணியில் 44 அரசு அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 120 போலீசாரும் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருந்தனர்.

    ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஓட்டு பெட்டிகள் வைக்கும் அறையில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு அறை கதவு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

    வரும் 12ம்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வரும் 14ம்தேதியுடன் தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் வரும் 15ம் தேதி பதவி ஏற்கவுள்ளனர்.

    • கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
    • பார்வையாளராக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஜனனி கலந்து கொண்டு பேசினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பார்வையாளராக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஜனனி கலந்து கொண்டு பேசினார். இதில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதன்படி பள்ளி மேலாண்மை குழு தலைவியாக சரஸ்வதி, துணை தலைவியாக நதியா நந்தினி, வார்டு உறுப்பினர்களாக கணேசன், தேவி, இல்லம் தேடி உறுப்பினராக ராதா மற்றும் அன்பரசி ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    • வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புகூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் 12 பேர், உள்ளாட்சிபிரதிநிதிகள் இரண்டு பேர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஒருவர், ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ரவி என மொத்தம் 20 பேர் கொண்டகுழு உருவாக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி நடை பெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் ட்த்தோ எஸ்பி.ரகதீஷ்குமார் பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புகூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முரளி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் எஸ்.மோகன்ராஜ்,மற்றும் கட்டிட குழு தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மலேசிய தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும் போது மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் 12 பேர், உள்ளாட்சிபிரதிநிதிகள் இரண்டு பேர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஒருவர், ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ரவி என மொத்தம் 20 பேர் கொண்டகுழு உருவாக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குழுவினர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

    இந்தகூட்டத்தில் பெற்றோர்கள்ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்படுவது வழக்கம்.

    மேலும் அந்த நாட்களில் மாலை நேரத்தில் கோவிலில் உள்ள தங்கத்தேரை பக்தர்கள் உபயதாரர்களாக கட்டணம் செலுத்தி இழுப்பது வழக்கம். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்கு பிறகு கோவில் திருப்பணிகள், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தேர் இழுக்கப்படாமல் நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி கோவிலுக்கு ஆய்வுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தங்கத்தேரினை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் விரைவில் கோவிலில் தங்கத்தேர் இழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து திருச்சி இணை ஆணையர் செல்வராஜ் வழிகாட்டுதலின் பேரிலும், கோவில் செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலையில் 3 ஆண்டுகள் 10 மாதங்கள் 7 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை கோவில் தங்கத்தேர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்து இழுக்கப்பட்டது.

    பக்தர்கள் உபயதாரர்களாக கட்டணம் செலுத்தி தங்கத்தேரினை இழுத்து வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் உற்சவ அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். கோவில் உள்பிரகாரத்தில் ஒரு முறை வலம் வந்து தங்கத்தேர் மீண்டும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இனி கோவில் நடை திறக்கும் நாட்களில் மாலை 6.30 மணியளவில் தங்கத்தேர் இழுக்கப்படும்.

    தங்கத்தேரினை இழுத்து வழிபட பக்தர்கள் ரூ.1,000 கட்டணத்தை கோவில் நிர்வாகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.

    நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் காலை, மதியம் அம்மனுக்கு நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×