என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் அன்னை சித்தரின் 2-ம் ஆண்டு குருபூஜை விழா நாளை நடை பெறுகிறது
    • பேரூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசவல அடிகாளார், சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னின்று குருபூஜையை நடத்தி வைக்கின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் பிரம்மரிஷி மலை காகபுஜண்டர் ஸ்ரீதலையாட்டி சித்தரின் சீடரான அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் மாக சித்தர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் சித்தர் கோவிலை ஸ்தாபித்து, ஆசிரமம், கோசாலை அமைத்து ஆன்மீக பணி, நோய்ப்பிணி போக்கும் பணி, தான, தர்ம காரியங்கள் செய்து வந்தார்.

    அவர் கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி ஜீவசமாதி அடைந்தார். அவரது இரண்டாமாண்டு குருபூஜை விழா நாளை (11-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. பேரூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசவல அடிகாளார், சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னின்று குருபூஜையை நடத்தி வைக்கின்றனர்.

    விழாவையொட்டி திருவருட்பா பாராயணம், கோ பூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்கள் யாகபூஜை, ஸ்ரீகாகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை, சாதுக்களுக்கு வஸ்திரதானம், அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உமாமகேஸ்வரி, குமரகுரு, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எஸ்.பி. மணி, எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி ரகுபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜேந்திரன், பெருமாள், இசையமைப்பாளர் கங்கை அமரன், திருச்சி தலைமை நீதிபதி கருணாநிதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினி மாதாஜி, இயக்குநர்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் ராதா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • தீக்குளித்த இளம்பெண் உடல் கருகி பலியானார்.
    • ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மதியழகி (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மதியழகி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதியழகி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்."

    • லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் ரோந்து சென்ற போது சிக்கினார்கள்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த மேட்டுத்தெருவை சேர்ந்த பெரியசாமி (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் காமராஜர் வளைவு சிக்னல் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த எசனை மாதா கோவில் தெருவை சேர்ந்த மரியதாஸ் (50), பெரம்பலூரில் பழைய நகராட்சி அலுவலகம் தெப்பக்குளம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த அரணாரையை சேர்ந்த குணசேகரன் (65) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 250 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்."

    • பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • மது குடிக்க மனைவி பணம் தராததால்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் வசித்து வருபவர் நடராஜ் (வயது 36), தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்து உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த நடராஜ் வயலுக்கும் அடிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • நகராட்சி பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் நகர தலைவர் ஜெயக்குமார் தலைமை வைத்தார். மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில், கட்சி உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது, அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றுவது, அரசு மருத்துவக் கல்லூரியை உடனே துவங்க தமிழக அரசை வலியுறுத்துவது, சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுவது, நகராட்சியில் தினமும் குப்பைகளை அகற்ற கேட்டுக் கொள்வது, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நகராட்சியை வலியுறுத்துவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திர பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொறுப்பாளர் பிரியன் வரவேற்றார். பொறுப்பாளர் ஆசை தம்பி நன்றி கூறினார்.

    • இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • மொகரம் பண்டிகையையொட்டி நடந்தது

    பெரம்பலூர்

    இஸ்லாமியர்கள் நாள்காட்டியின் முதல் மாதமான மொகரம் மாதத்தின் 10-வது நாள் ஆஸுரா நாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் மொகரம் 10-ம் நாளில் நிகழ்ந்ததால் இந்த நாளை சிறப்பு மிக்க நாளாக இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் கொண்டாடுகின்றனர். இதன்படி ஆஸுரா தினமான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் நோன்பிருந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சில மசூதிகளில் ஆஸுா தினம் குறித்த சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன. 

    • ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சி கடன் வழங்கப்பட்டது
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு

    பெரம்பலூர்:

    மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 265 மனுக்கள் பெறப்பட்டன.

    மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கணபதி, கலால் உதவி ஆணையர் ஷோபா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சரவணன் உட்பட அரசுத்துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பிர்களில் பண்ணை சாரா தொழில் புரிவோரை (டீக்கடை, மளிகை கடை, துணிக்கடை) மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக ஆலத்தூர் வட்டத்தில் 12 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் தொழில் வளர்ச்சிக் கடனுக்கான காசோலைகளை கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வழங்கினார்.

    குறதைீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்த பள்ளிகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    புகையிலை மற்றும் போைத பொருட்களை விற்பதால் ஏற்படும் விளைவுகள் மக்களுக்கு நேரிடும் பாதிப்புகள் ஆகியன குறித்து கிராமங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    • சமத்துவபுரம் உருவாக்கி வீடுகள் கட்டி தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெண்பாவூரை அடுத்த பெரிய வடகரை கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது :-

    பெரிய வடகரை கிராமத்தில் வசித்து வரும் 100-க்கும் அதிகமானோருக்கு மாவிலங்கை சாலையில் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப்பட்டா, 2010-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது.

    ஆனால் போதிய வருவாய் இல்லாததால் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் சமத்துபுரத்தை உருவாக்கி தரமான வீடுகள் கட்டித்தர அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

    • வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளி கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேப்பந்தட்டை வட்ட மாநாடு, வேப்பந்தட்டை காந்தி மகாலில் நடைபெற்றது. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் சாமிரை, செயலாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் செங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

    பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீர்தேக்க திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டை பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்புக்கு மானிய விலையில் தீவனம் வழங்கி பால் உற்பத்தியாளர்களுககு கறவை மாடு கடன் வழங்க வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரை வசதியாக பள்ளி கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

    மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வசதிகள் வழங்கி விவசாயிகள வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் அம்மைநோய் தடுப்பூசி உரிய காலத்தில் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாநில கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு நடைபெற உள்ளது
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் மாநில கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டி நாளை(10ம்தேதி) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக தலைவர் முகுந்தன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராஜ்குமார் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், மயிலாடுதுரையில் வரும் 19ம்தேதி முதல் 21ம்தேதி வரை நடைபெறவுள்ள சிறுவர்களுக்கான மாநில அளவிலான கபடி சேம்பியன்ஷிப் கலந்துகொள்வதற்கான அணி வீரர்கள் தேர்வு போட்டி நாளை (10ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

    ஜூனியர் சிறுவர்களின் தகுதி வயதுவரம்பு 20.11.22 அன்று 20 வயதுக்குள் இருக்கவேண்டும், எடை 70 கிலோவிற்கு மிகாமல் இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் ஆதார் கார்டு அல்லது 12 ம்வகுப்பு மார்க்சீட் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் பாளையம் கிராமத்தில் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரெஞ்சுக்காரர்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது.
    • 160 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேவாலயம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தில் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரெஞ்சுக்காரர்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் 61 அடி உயரம் மற்றும் 8,800 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    கும்பகோணம் டையோசிசன் வாயிலாக இந்த தேவாலயம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2009-ல் அதன் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தேவாலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்வது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2016-ல் அந்த தேவாலய வளாகத்தில் புதிய தேவாலயம் கட்டப்பட்டது.

    தற்போது அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பழமையான அந்த தேவாலயத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. 160 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேவாலயம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. கட்டுமானம் வலுவாக இருப்பதால் இடிப்பது கடினமாக உள்ளது என பாதிரியார் ஜெயராஜ் தெரிவித்தார்.

    இந்த தேவாலயத்தின் இரும்பு சிலை 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்டு புதிய தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த டேனியல் பிரகாஷ் என்பவர் கூறும் போது, இந்த தேவாலயத்தை என்னால் மறக்க முடியாது. எனது தாத்தா முதல் மகன் வரை நான்கு தலைமுறைகளுக்கு பெயர் சூட்டும் விழா இங்குதான் நடந்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு ஞானஸ்தானம் இந்த தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுவயதில் எங்கள் நேரத்தை அதிகம் தேவாலயத்தில் செலவழித்துள்ளோம். தேவாலயம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதை இடிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த தேவாலயத்தை பொருத்தமட்டில் எங்கள் நினைவில் என்றும் இருக்கும்.

    இன்னொருவர் கூறும்போது இந்த தேவாலயம் நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. இதனை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் செய்ய முடியவில்லை. இது எங்களுக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு ஆகும் என்றார்.

    • போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • மாணவர்களிடம் போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணி தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போதை பழக்கத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை மீட்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல், குறும்படங்களை திரையிடுதல், போதை பழக்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்குதல், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகளில் நடத்திட வேண்டும், என்றார். போலீஸ் சூப்பிரண்டு மணி பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் போலீசார் நேரில் சென்று மாணவர்களிடம் போதையினால் ஏற்படும் ஆபத்துகளை நன்கு அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் போதை எடுத்து கொள்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள், தண்டனைகள் மற்றும் வாழ்க்கையை தொலைத்த மாணவர்கள், சிறை சென்ற மாணவர்களின் குடும்பத்தினர்களின் நிலை குறித்து எடுத்துரைக்க வேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர் இயக்கம் ஆகிய மாணவர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

    ×