என் மலர்
பெரம்பலூர்
- வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- போக்குவரத்துத்துறை அமைச்சர்
பெரம்பலுார்:பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாநில அரசு நிதியுதவியின்கீழ், தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையுள்ள 5 கி.மீ நீளமுள்ள மண் சாலையினை தரம் உயர்த்தி ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும், பரவாய் முதல் வரகூர் வரையுள்ள 4.5 கி.மீ நீளமுள்ள மெட்டல் சாலையினை தரம் உயர்த்தி ரூ.10.9 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும்,அந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.13.79 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியினையும், வரகூர் ஊராட்சி வடக்கு தெருவில் ரூ.10.57 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சி தெற்கு தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.14.32 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சியில் வரகூர் முதல் கொளப்பாடி வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், பரவாய் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியினையும், சின்னபரவாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, கள்ளம்புதூர், ஆண்டிகுரும்பலூர் கிராமங்களில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லபிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துச்செல்வி மதியழகன், மாநில ஆதிதிராவிட துணைசெயலாளர் துரைசாமி, வேப்பூர் தெற்கு ஒன்றியசெயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .சிவசங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் .கருணாநிதி, .பாஸ்கர், நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் வடிவேல் (திருச்சி), உதவி கோட்ட பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ஹரிகிருஷ்ணன் (பெரம்பலூர்), குன்னம் வட்டாட்சியர் அனிதா,வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சின்னபையன், செல்வகுமார், ஒன்றிய பொறியாளர் .ஆனந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிணற்றில் உடல் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் இருந்தது
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலுார்:பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் நேற்று மாலை ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து உடனடியாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இறந்து கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில்,விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்தவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சை மலையில் உள்ள நெசக்குளம் பகுதியை சேர்ந்த சேகரின் மகன் சிவா(வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் சிவாவின் நண்பரான பச்சை மலையில் உள்ள சிலையூர் கிராமத்தை சேர்ந்த ரவி (43) என்பவர் டி.களத்தூரில் வீராசாமியின் வயலுக்கு அருகே உள்ள அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் 4 ஏக்கர் வயலை கடந்த 1½ ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு நண்பர் சிவாவை ரவி தன்னுடன் இருந்து வேலை செய்ய ஊரில் இருந்து டி.களத்தூருக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் முதல் சிவாவையும், ரவியையும் காணவில்லையாம். இதனால் அவர்கள் 2 பேரையும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிவா கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. சிவாவின் நண்பர் ரவியையும் போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் சிவாவின் இறப்புக்கான காரணம் கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது
பெரம்பலூர்:சேவைகுறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என சிமெண்ட் ஏஜென்சீசுக்கு பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர் நிர்மலா நகரை சேர்ந்தவர் குலாம் மொய்தீன் மகன் முகமது சபீக் (வயது 38). இவர் புதிதாக கட்டிடம் கட்டியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம்தேதி கட்டிடத்திற்கு பூச்சு மற்றும் பட்டி பார்ப்பதற்காக பெரம்பலூர் பழைய ஆர்டிஓ அலுவலகம் எதிரில் உள்ள ஒரு ஏஜென்சியில் 35 மூட்டை ஒயிட் சிமெண்ட் வாங்கியுள்ளார். அந்த ஒயிட் சிமெண்டை பயன்படுத்தியபோது கட்டிட சுவற்றில் ஒட்டாத சாதாரண சுண்ணாம்பு போல் இருந்துள்ளது. அந்த ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது.இதையடுத்து முகமது சபீக் விக்னேஷ் ஏஜென்சீசுக்கு சென்று அதன உரிமையாளரிடம் ஓயிட் சிமெண்ட் தரமற்றதாகவும், கலப்படம் உள்ளதால் தான் சுவற்றில் ஒட்டவில்லையே என கேட்டதற்கு அவர் நான் சென்னை, சைதாபேட்டையில் உள்ள அல்டிரா டெக் சிமெண்ட் லிமிடெட் மேலாளரிடம் இருந்து தான் ஓயிட் சிமெண்ட் ஏஜென்சீஸ் எடுத்து விற்பனை செய்து வருகிறேன் எனவும், அங்கிருந்து வந்ததை தான் நான் உங்களுக்கு விற்பனை செய்தேன் என கூறியுள்ளார்.பின்னர் முகமது சபீக் வேறு கடையில் ஓய்ட் சிமெண்ட் வாங்கி கட்டித்திற்கு பயன்படுத்தியுள்ளார்.இதனால் மனஉளைச்சல் அடைந்த முகமது சபீக் சேவை குறைபாடு புரிந்தற்காக ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவு தொகையும் வழங்க கோரி கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், விக்னேஷ் ஏஜென்சீஸ் உரிமையாளர் சேவை குறைபாடு புரிந்தால் பாதிக்கப்பட்ட முகமது சபீக்கு ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், பெரம்பலூர் ஏஜென்சீஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
- அத்தியூர் ஊராட்சியில் திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெறுகிறது
அகரம்சீகூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் உள்ளாட்சி நிதியிலிருந்து ரூ.55.32 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். அத்தியூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும், அத்தியூர் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், பெண்ணகோணம் ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், திருமாந்துரை ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து அத்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும், திருமாந்துரை, நோவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப் பையன், செல்வகுமார் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதத்தூர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒகளூர் அன்பழகன், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், பெண்ணகோணம் ஜெயலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, பழனிவேல், ஆண்டாள் குடியரசு , மாவட்ட விவசாய தொழிலாளர் அமைப்பாளர் புகழேந்தி, அத்தியூர் கிளைச் செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அஸ்வின்ஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் விற்பனை தொடங்கியது
- 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது
பெரம்பலூர்:
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன், தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் கூறியதாவது:- பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அண்டு பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது. எங்களது நிறுவனத்தின் மூலம் அனைத்து பண்டிகை நாட்களையும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அந்தந்த பண்டிகைக்கு ஏற்ப இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு உகந்த, இனிப்பு மற்றும் பட்சணங்களை பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இதன்படி கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பொருட்டு சுமார் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பே செர்ரி, உலர் திராட்சை, ஆரஞ்சு தோல், முந்திரி, ஆப்பிரிகாட், டியூட்டி புரூட்டி, பேரீட்சை ஆகிய சத்தான பழங்கள், ஜாதிக்காய் பொடி, லவங்கப்பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து ஒயினில் ஊறவைக்கப்பட்டு இந்த புரூட்ஸ் நன்றாக ஊறிய பின்னர் தற்போது சுவையான கிறிஸ்துமஸ் கேக்குகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வகைகளான ரிச் ப்ளம் கேக், புட்டிங், சாக்லேட், ஸ்பெஷல் குக்கீஸ், சாக்கலேட் ஆகியவை தயாரிக்கப்பட்டு தற்போது அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் விற்பனை துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அஸ்வின்ஸ் உணவுத் தொழிற்சாலையின் அவுட்லெட் மற்றும் அனைத்து கிளைகளிலும் தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்குகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சீருடை அணிந்த நிலையிலே தூய்மை பணியாளர் பட்டு உயிரிழந்தார்
- ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பட்டு(வயது 53). இவர் வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது தனது சக தூய்மை பணியாளர்களிடம், தனது உயிர் பிரிந்தாலும், துப்புரவு பணியாளர் சீருடையில் இருக்கும்போதே பிரிய வேண்டும் என்று பலமுறை கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பட்டு உயிரிழந்தார். அவர் உயிர் பிரியும் நிலையில் தூய்மை பணியாளர் சீருடையிலேயே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நாளை நடைபெறும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- கலை பயிற்சிகள் பெரம்பலூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட அளவில் 5 முதல் 8 வயது வரை, 9 முதல் 12 வயது வரை, 13 முதல் 16 வயது வரை ஆகிய வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவர்களுக்கான கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரத நாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலை போட்டிகள் நாளை (சனிக்கிழமை) பெரம்பலூர் மதனகோபாலபுரம் 4-வது தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தர வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் போன்ற கலை பயிற்சிகள் பெரம்பலூரில், மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சிறுவர்-சிறுமிகள் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் திருட்டு போனது
- பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள நேரு நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். மனைவி அமுதா (வயது 39), இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் தன் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டு, பகல் 12 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.
- யோகாவில் 2-ம் வகுப்பு மாணவன் புதிய சாதனை படைத்துள்ளார்
- 8 நிமிடங்கள் தலைகீழாக நின்று
திருச்சி:
திருச்சியை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவன் அக்ஷய்ராஜ் கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலைகளை கற்றுள்ளார். உலக யோகா தினத்தை முன்னிட்டு 8 நிமிடங்கள் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நேஷனல் ரெகார்ட்ஸ், ஆசிய பசிபிக் சாதனை உள்ளிட்ட 3 உலக சாதனைகள் படைத்துள்ளார். அந்த சிறுவன் புதிய முயற்சியாக சின் ஸ்டாண்ட் போஸ் யோகாவை 4 நிமிடம் 3 வினாடி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய சாதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டெல்லியில் உள்ள சில்ட்ரன்ஸ் ரெக்கார்ட்ஸ் குளோபல் ரெகார்ட்ஸ் ஆசிய பசிபிக் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகத்தில் இடம் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லி கின்னஸ் சாதனையாளர் சாய்னா ஜெட்லி மற்றும் மாணவரின் பெற்றோர் அன்புராஜ், செல்வி மற்றும் கராத்தே யோகா சிலம்ப வீரர்களும் பாராட்டியுள்ளனர்.
- மாட்டம்மை நோய் பரவலை தடுக்க இலவச தடுப்பூசி போடப்பட்டது.
- கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் மாட்டம்மை நோய் பரவலை தடுக்க 1 லட்சம் மாடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 37 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கிளை மருந்தகங்கள் மூலம் மாட்டம்மை நோய் தடுப்பூசி இலவசமாக மாடுகளுக்கு செலுத்தப்படவுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களது மாடுகளுக்கு மாட்டம்மை நோய் தடுப்பு இலவச தடுப்பூசியை செலுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்
- போலீசாரின் சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
- சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 47 மனுக்களில், 29 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.






