என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

    பெரம்பலூர்:

    விவசாயியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் கந்தன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் கலியமூர்த்தி (வயது39) என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தகராறில் கலியமூர்த்தி (39), அவரது தம்பிகள் கருணாநிதி (35), சரத்குமார் (32) ஆகியோர் கந்தனை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகள் கலியமூர்த்தி உட்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மூர்த்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கருணாநிதி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், மூன்று பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


    • ஓடும் பஸ்சில் முதியவர் திடீரென இறந்தார்.
    • சின்னசாமி பஸ்சின் பின்படிக்கட்டில் அமர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தவர், திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பாண்டகபாடி காலனி தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்கு நேற்று காலை பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் அவர் சொந்த ஊர் செல்வதற்கு பெரம்பலூா் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

    பஸ் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையத்தை கடந்து சோமண்டாபுதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது சின்னசாமிக்கு வாந்தி, மயக்கம் வருவதாக சக பயணியிடம் கூறியுள்ளார்.இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து சின்னசாமி பஸ்சின் பின்படிக்கட்டில் அமர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தவர், திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக சக பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் சின்னசாமியை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து தகவலறிந்த சின்னசாமியின் மகன் நாகராஜன் தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்துவிட்டார் என்று கூறியதன் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் எழுதி வாங்கி கொண்டு சின்னசாமியின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.


    • வலிப்பு நோயால் கீழே விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரிய வடகரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையன் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் சுந்தர் நகர் பகுதியில் ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மதியம் வலிப்பு ஏற்பட்டு முத்தையன் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்தையன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையனுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவிகள் கின்னஸ் சாதனை படைத்தனர்
    • மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டினை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். கல்லீரல் புற்று நோய்க்கான எமரால்டு பச்சை நிறமும் நுரையீரல் புற்றுநோய்க்கு வெள்ளை நிறமும் மார்பகப் புற்றுநோய்க்கு இளஞ்சிவப்பு நிறமும் எலும்பு புற்றுநோய்க்கு மஞ்சள் நிறமும் என பல்வேறு வகையான புற்றுநோய்களை குறிக்கும் வகையில் 12 வகையான நிறங்களில் டி-சர்ட்களை மாணவிகள் அணிந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு வாசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரணியைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டின் மூலம் புதிய கின்னஸ் சாதனைப் படைத்தனர். டாக்டர்.ஜெட்லியின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கான பதக்கங்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டியது. இந்நிறுவனம் இந்நிகழ்வினை உலக சாதனை புத்தகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்த கேடயம் மற்றும் விருது, சான்றிதழ் ஆகியவற்றை எஸ்பி ஷ்யாம்ளாதேவி வழங்கி பாராட்டினார். விழிப்புணர்வு பேரணியில்தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.


    • பெரம்பலுார் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமலும் அதிவேகமாக சென்றும் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்ஐ சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் எந்த செயலிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். சில தவறான பழக்க வழக்கங்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

    மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமலும் அதிவேகமாக சென்றும் விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் அம்மாணவர்களுக்குமே இழப்பு ஏற்படுகிறது. ஒருசில மாணவர்கள் விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் விளையாட செல்லும் போது ஏரி, குளங்கள், கிணறு போன்றவற்றில் இறங்கி விளையாட்டுதனமாக தங்கள் உயிரை இழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒருசில மாணவர்கள் அதிகபடியான நேரங்களை செல்போனிலேயே செலவழித்து தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி அறியாமல் தங்களை ஈடுபடுத்தி ஆபத்தை தேடிக் கொள்கின்றனர்.

    ஒருசில மாணவ, மாணவிகளுக்கு சில நபர்களால்பாலியல் வன்முறை நடைபெறுகிறது அதனை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி இறந்து போகின்றனர். இதை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் மாணவர்களால் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியா மல் தங்கள் எதிர் கால த்தை வீணடித்துக் கொள்கி ன்றனர். எனவே, இந்த பழக்கங்கள் யாரிடமும் காணப்பட்டால் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை உணர்ந்து உங்களுக்காக உள்ள சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினர். காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு வாசகங்களையும் அறிவுரைகளையும் பதாகைகளையும்வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாண வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் கலைச்செல்வி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் திவ்யராஜ் நன்றி கூறினார்.


    • பெரம்பலுாரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • தமிழகத்தில் கொத்தடிமை இல்லாத நிலை உருவாகிட அனைவரும் செயல்பட வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் வலியுறுத்தல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சர்வதேச நீதிக்குழுமம், இந்தோ அறக்கட்டளை ஆகியவை இணைந்து கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாமை நடத்தியது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலை வரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்து பேசுகை யில், மக்களாகிய நாம் வேலை செய்யும்போது, அதற்கான சரியான ஊதியத்தை பெறுவது இந்திய அரசியல் சட்டத்தின்படி உரிமை யாக்கப்பட்டுள்ளது.

    கட்டாயப்படுத்தியோ, முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, குறைந்த ஊதியம் வழங்கியோ, அதிக நேரம் வேலை வாங்குவது போன்ற செயல்கள் கொத்தடிமை முறையாவதால், இது போன்ற செயல்கள் சட்டத்தின் படி தண்டனை க்குரிய குற்றமாகும். இந்திய அரசியல் சட்டமானது பல்வேறு பிரிவுகளில் தொழி லாளர்களுக்கான பாதுகாப்பினை உறுதி படுத்தி உள்ளது. கொத்தடிமை முறையில் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வினை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆய்வுகளை மேற்கொண்டு பெரம்ப லூர் மாவட்டத்தில்மட்டு மல்லாமல் தமிழ்நாட்டி லேயே முற்றிலும் கொத்தடி மை தொழிலாளர் முறை இல்லா நிலையினை உருவா க்கிட நாம் அனைவரும் உறுதி மொழியை ஏற்று செயல்பட வேண்டும்.

    அதற்கான முயற்சியாகத்தான் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கொத்தடிமை முறை இருந்தால் பொதுமக்கள் உடனடியாக உதவி எண்ணான 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது கலெக்டர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என பேசினார். முகாமில் கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் நீதிபதி வழங்கினார். தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்திடும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.முகாமில் தொழிலாளர் நலத்துறையில் அடையாள அட்டை வழங்குவதற்காக தொழிலாளர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.

    இதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், சர்வதேச நீதிக்குழுமத்தின் வக்கீல் பிரபு, கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான (பொ) அண்ணாமலை வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.

    • 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது
    • மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதியும் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் நகரியம், கிராமியம், கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர், லெப்பைக்குடிகாடு, குன்னம் உபகோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

    இதுவரை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத 82 மின் நுகர்வோர்கள் முகாமில் கலந்து கொண்டு இணைத்து கொண்டனர். மேலும் மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த 12 மின் நுகர்வோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்ச்செல்வன், செல்வராஜ், ரவிக்குமார், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கக்கூடிய மின் இணைப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 604 ஆகும். அதில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 596 மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மாவட்டத்தில் 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதியும் நடைபெறவுள்ளது. அதில் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு சம்பந்தமான வருவாய் ஆவணங்கள் மற்றும் ஆதார் எண், செல்போன் எண், மின் இணைப்பு எண், ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


    • பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • இந்த தகவலை சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:


    பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.


    • மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
    • அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே அருமடல் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு (வயது 37). இவர் கடந்த 3-ந்தேதி மாலை வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. அலமேலு மழைக்காக அருகே உள்ள புளியமரத்தடியில் ஒதுங்கி நின்றார். திடீரென்று மின்னல் தாக்கி அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இதைத்தொடர்ந்து அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகம் வழங்கினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.




    • சோள அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலியானார்.
    • அப்போது வண்டியை பின்னால் இயக்கிய போது ஓட்டுனரின் கவனக்குறைவால் ஜெயக்கொடி மீது வண்டியின் சக்கரம் ஏறி விபத்துக்குள்ளானது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் பொன்னகரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் மொரிசியஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது34). இவர்களுக்கு மோனிஷா (11) என்ற ஒரு மகள் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் ஜெயகொடிக்கு சொந்தமான வயலில் சோளம் அறுவடை செய்வதற்காக இயந்திரத்தின் உரிமையாளரும் அதன் ஓட்டுனர் நூத்தாப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சடையன் மகன் கோவிந்தராஜ் (40) என்பவர் வண்டியை இயக்கினார்.

    இந்நிலையில் ஜெயக்கொடி வாகனத்தின் பின்னால் விழும் சோள கருத்துக்களை பொறுக்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது வண்டியை பின்னால் இயக்கிய போது ஓட்டுனரின் கவனக்குறைவால் ஜெயக்கொடி மீது வண்டியின் சக்கரம் ஏறி விபத்துக்குள்ளானது. பின்னர் அவரை மீட்டு முருகன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு பணியாளர்களை கொண்டு வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


    • பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:


    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே ரஞ்சன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. இதில் மூத்த மகள் தமிழரசி(வயது 16) ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த தமிழரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் அங்கு சென்று தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தமிழரசி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×