என் மலர்
நீலகிரி
3½ மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் முதுமலையில் ஆதிவாசி மக்கள் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கூடலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. நீலகிரி சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் முடங்கி உள்ளது. இதனால் நேரடியாக மற்றும் மறைமுகமாக பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முதுமலை தலைமையிடமான தெப்பக்காட்டில் ஆதிவாசி மக்கள் நடத்தக்கூடிய கேன்டீன், உணவகங்கள் உள்ளது. சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் பணியாற்றி வந்தனர். இதுதவிர தங்கும் விடுதிகளில் ஏராளமானவர்கள் பணியாற்றி வந்தனர்.
கடந்த 3½ மாதங்களுக்கு மேலாக முதுமலை மூடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேன்டீன், உணவகங்கள் மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த ஆதிவாசி மக்களும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.
இதேபோல் முதுமலை அருகே உள்ள மசினகுடி, பொக்காபுரம் பகுதியில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டதால் தனியார் தங்கும் விடுதிகளும் உடனடியாக மூடப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றி வந்த மசினகுடி, பொக்காபுரம் பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலத்தில் பல்வேறு தரப்பினரும் உணவு பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வந்தனர். இதனால் வருவாய் இல்லாவிட்டாலும் சில வாரங்கள் உணவு பற்றாக்குறை இன்றி வாழ்ந்து வந்தனர். ஆனால் தொடர்ந்து சுற்றுலாத்தலம் மூடி கிடப்பதால் வேலைவாய்ப்பு இன்றி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-
முதுமலை புலிகள் காப்பகத்தை சார்ந்து வனத்துறை மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் வேலை கிடைத்தது. தற்போது சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படாமல் உள்ளதால் வேலை இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முதுமலையில் சுற்றுலா பயணிகள் வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த கேன்டீன், உணவகங்கள் மூடி கிடக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை என்றைக்கு முடிவுக்கு வருமோ தெரிய வில்லை. அதுவரை வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி:
கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காவல்நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களுடன் அதிக தொடர்பில் உள்ளவர்கள் ஆட்டோ டிரைவர்கள் தான். எனவே பொதுமக்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்வோர் ஆகிய அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வெளியூர் நபர்கள் தங்களது ஆட்டோவில் பயணம் செய்தாலோ அல்லது வேறு பகுதிகளில் நடமாடி வருவது குறித்து தெரியவந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.
முடிவில் போக்குவரத்து போலீஸ் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கோத்தகிரி:
கோத்தகிரி பகுதியில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கோட்டா ஹால், மிஷன் காம்பவுண்ட், டானிங்டன் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கு கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்க வேண்டும் எனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு பிளச்சிங் பவுடர் வழங்கவும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெகதளா ஊராட்சிக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிறப்பு கண்காணிப்பு அலுவலர் உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
ஊட்டி நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி:
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேரிஸ்ஹில், காந்தல் திருவள்ளுவர் தெரு, மஞ்சனக்கொரை, ஆரணி ஹவுஸ் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறதா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறதா மற்றும் சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று வரை (அதாவது நேற்று முன்தினம்) கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 692 ஆக உள்ளது. சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று கண்காணித்து தொடர்ந்து வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகள், கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் தோறும் ஒரு நாளைக்கு 20 மருத்துவ முகாம்கள் வீதம் நடத்தப்பட்டு வருகிறது. வெளியிடங்களில் இருந்து தங்கள் பகுதிகளுக்கு வெளியாட்கள் வருகை தந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் குப்புராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஊட்டி நகராட்சியில் இதுவரை நோய் தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்தததாக ரூ.86 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களை கண்டறிந்து பறக்கும் படையினர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊட்டியில் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு வருபவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா என்று சோதனை செய்து வருகிறார்கள். சோதனையின் போது முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்படுகிறது. ஊட்டி நகராட்சியில் இதுவரை நோய் தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்தததாக ரூ.86 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 330 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுகுளா ஊராட்சி கிராம பகுதிகளான காக்கா சோலை மற்றும் எம். கைகாட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கடந்த வாரம் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஊட்டி சிறப்பு பிரிவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, ஊராட்சி சார்பில் தினந்தோறும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 330 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவு தொகுப்பு வழங்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து காக்கா சோலை கிராமப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெடுகுளா ஊராட்சித் தலைவர் சுகுணா சிவா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோகரன் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் மற்றும் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் காக்கா சோலை தனிமைப்படுத்த பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களுக்கு சுமார் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதைப்போல நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட எம் கைகாட்டி பகுதியைச் சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட 30 குடும்பங்களுக்கும் இதேபோல உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், நெடுகுளா ஊராட்சி செயலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் 60 வயது பெண்ணால் 200 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதகை:
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தங்காடு ஒரநள்ளி என்ற கிராமத்தில் 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்காக படுகர் இன மக்கள் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கலந்து கொண்டார். காய்ச்சலோடு வந்த அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் தனக்கு சோதனை செய்ததை மறைத்து திருமணம் மற்றும் முள்ளிக்கூர் துக்க நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அவசர அவசரமாக அப்பெண்ணின் தொடர்புகளை தேடிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
இதில் திருமணத்தில் கலந்துகொண்ட 190 பேருக்கு கொரோனா தொற்று பரவியது உறுதியானது. இதையடுத்து தங்காடு ஒரநள்ளி கிராமமே அச்சத்தில் உறைந்து போனது. இந்நிலையில் கொரோனாவை பரப்பிய பெண் உட்பட 2 பேர் தொற்றுக்கு பலியாகினர்.
திருமணம் மற்றும் துக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் 8 கிராமங்களுக்கு சென்றதால் அங்கும் கொரோனா பரவி எண்ணிக்கை கூடியது.
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. அதற்குள் கொரோனாவால் 200 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தங்காடு ஒரநள்ளி என்ற கிராமத்தில் 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்காக படுகர் இன மக்கள் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கலந்து கொண்டார். காய்ச்சலோடு வந்த அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் தனக்கு சோதனை செய்ததை மறைத்து திருமணம் மற்றும் முள்ளிக்கூர் துக்க நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அவசர அவசரமாக அப்பெண்ணின் தொடர்புகளை தேடிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
இதில் திருமணத்தில் கலந்துகொண்ட 190 பேருக்கு கொரோனா தொற்று பரவியது உறுதியானது. இதையடுத்து தங்காடு ஒரநள்ளி கிராமமே அச்சத்தில் உறைந்து போனது. இந்நிலையில் கொரோனாவை பரப்பிய பெண் உட்பட 2 பேர் தொற்றுக்கு பலியாகினர்.
திருமணம் மற்றும் துக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் 8 கிராமங்களுக்கு சென்றதால் அங்கும் கொரோனா பரவி எண்ணிக்கை கூடியது.
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. அதற்குள் கொரோனாவால் 200 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செல்போன் சேவை குறைபாடு காரணமாக ஆன் லைன் வகுப்புகளில் படிக்கமுடியாமல் கிராமப்புற மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூரில் கொரோனா தொற்று பரவலால் தனியார் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் உள்ள முக்கிய ஊர்களில் வசிக்கும் மாணவர்களுக்கு செல்போன் சேவை கிடைத்து வருவதால் ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு பாடங்களை படித்து வருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் சேவையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறது. இதனால் ஆன் லைன் வகுப்புகளில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வாறு அலைவரிசையை பயன்படுத்தினாலும் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்த முடிய வில்லை. இதனால் பாடங்களை புரிந்து படிக்க முடியாமல் உள்ளது.
மேலும் வீடுகளுக்குள் செல்போன் சேவை கிடைப்பது இல்லை. இதனால் திறந்த வெளி அல்லது மேடான வனப்பகுதிக்கு மாணவர்கள் இடம் பெயர்ந்து அலைவரிசை கிடைக்கும் பகுதியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பாடங்களை படிக்கின்றனர். இதுதவிர மழைக்காலம் என்பதால் திறந்த வெளியிலும் நீண்ட நேரம் அமர முடிய வில்லை. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பாடங்களை புரிந்து படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சியில் பல மாதங்களாக பி.எஸ்.என்.எல். அலைவரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தனியார் செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்க வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பி.எஸ்.என்.எல். சேவையும் கிடைக்காமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அனைத்து பகுதியிலும் செல்போன் சேவை சீராக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் அலைவரிசை சேவையும் முக்கிய இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் சேவையும் செயல் இழந்து விடுகிறது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடலூர் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் துப்புகுட்டிபேட்டையை சேர்ந்தவர் கந்தநாதன். இவரது மகன் புவனேஷ்வரன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் குடும்பத்தினர் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த புவனேஷ்வரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெள்ளி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூரில் நகராட்சி வரிசூல் செய்யும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மார்க்கெட் கடைகள் மூடப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குன்னூர் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுபடுத்த நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் தீவிரமாகபணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நகராட்சி வார்டுகளிலும் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டிலும் வரி வசூல் செய்து வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் ஊட்டி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் அலுவலர் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டிலும் வரி வசூல் செய்ததால் நோய் தொற்றை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்வியாபாரிகளிடம் கடையை மூட கூறினர். அப்போது வியாபாரிகள், தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகளை திறப்பதால் வியாபாரம் இன்றி தவித்து வருகிறோம். விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுகிறது. அடிக்கடி கடையை மூட கூறுவதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள், கிருமி நாசினி தெளிப்பதற்காகவும் மார்க்கெட் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். சிறிது நேர வாக்குவாதத்திற்கு பின்னர் வியாபாரிகள் கடைகளை மூடினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரியில் 179 தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே மஞ்சூர் அருகே கிராமங்களில் நடந்த திருமண, துக்க நிகழ்ச்சிகளில் தொற்று பாதித்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா பரவியது. இதனால் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அறிகுறி கண்டறியப்பட்ட கிராமங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. கடந்த 3 வாரங்களில் பாதிப்பு வேகமானதால் 550-ஐ கடந்து உள்ளது. தற்போது நீலகிரியில் 179 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்பகுதிகளில் மக்கள் வெளியே வராமலும், வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாமலும் காவல்துறை மூலம் தடுப்புகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் சார்பில் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. மருத்துவ குழுக்கள் மூலம் நாள்தோறும் பொதுமக்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. தற்போது வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களுடன் முதல், இரண்டாம், மூன்றாவது தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது. அவ்வாறு தொடர்பில் இருந்த நபர்களுக்கு பாதிப்பு உறுதியானால் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்தும் மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை செய்வது சவாலாக உள்ளது. இருப்பினும், சுகாதாரத்துறை சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைத்து வருகின்றன.
நீலகிரியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் இதுவரை 30 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஊட்டிக்கு இ-பாஸ் பெற்று வருபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
ஊட்டி அருகே சம்பளம் வழங்கக்கோரி ஊட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. துணை பொதுச்செயலாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து சம்பள பட்டியலை நீக்குவது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
வருகை பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். கட்டாய விடுப்பு எழுதி வாங்குவதை கைவிடவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் இப்ராஹிம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது ஊதியத்தை குறைக்காமல் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டி உள்ளன. ஆனால் அந்த வழிகாட்டுதலை கடைபிடிப்பதில்லை. ஆகவே ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும், வருகைப் பதிவு பணி வழங்கும் முறை அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், போக்குவரத்து நிர்வாகம் இதை கடைபிடிக்காமல் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை என்று கடந்த 4 மாத காலமாக சம்பளம் வழங்காததால் பல தொழிலாளர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அவர்களுக்கு சம்பள இழப்பு ஏற்பட்டு உள்ளது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பணிமனை தொழிலாளர்கள், தணிக்கையாளர்கள், ஓட்டுநர் ஆய்வாளர்கள் ஆகியோரிடம் கட்டாய விடுப்பு எழுதி வாங்குவது, பேருந்து இல்லாத காரணத்தால் பணிக்கு வர இயலாத தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து கழக நிர்வாகத்தை பொது போக்குவரத்தாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார். அதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய போக்குவரத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






