search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை ஆய்வு.
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை ஆய்வு.

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

    ஊட்டி நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேரிஸ்ஹில், காந்தல் திருவள்ளுவர் தெரு, மஞ்சனக்கொரை, ஆரணி ஹவுஸ் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறதா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறதா மற்றும் சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று வரை (அதாவது நேற்று முன்தினம்) கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 692 ஆக உள்ளது. சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று கண்காணித்து தொடர்ந்து வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகள், கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் தோறும் ஒரு நாளைக்கு 20 மருத்துவ முகாம்கள் வீதம் நடத்தப்பட்டு வருகிறது. வெளியிடங்களில் இருந்து தங்கள் பகுதிகளுக்கு வெளியாட்கள் வருகை தந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஆய்வின்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் குப்புராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×