என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகளை மூட கூறிய அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    கடைகளை மூட கூறிய அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    குன்னூரில் மார்க்கெட் கடைகள் மூடல் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

    குன்னூரில் நகராட்சி வரிசூல் செய்யும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மார்க்கெட் கடைகள் மூடப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குன்னூர் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுபடுத்த நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் தீவிரமாகபணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நகராட்சி வார்டுகளிலும் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டிலும் வரி வசூல் செய்து வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் ஊட்டி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

    கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் அலுவலர் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டிலும் வரி வசூல் செய்ததால் நோய் தொற்றை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்வியாபாரிகளிடம் கடையை மூட கூறினர். அப்போது வியாபாரிகள், தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகளை திறப்பதால் வியாபாரம் இன்றி தவித்து வருகிறோம். விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுகிறது. அடிக்கடி கடையை மூட கூறுவதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள், கிருமி நாசினி தெளிப்பதற்காகவும் மார்க்கெட் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். சிறிது நேர வாக்குவாதத்திற்கு பின்னர் வியாபாரிகள் கடைகளை மூடினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×